சீனாவில் 6 ஆயிரத்து 300 கி.மீட்டர் நீளமுள்ள யாங்ட்சே ஆறு பாய்கின்றது. வடமேற்கு சீனாவின் குவிங்கய் மாகாணத்தில் உற்பத்தியாகும் இந்த ஆறு, 10 மாகாணங்களை கடந்து கிழக்கு சீனாவில் உள்ள கடலில் சங்கமம் ஆகின்றது.

 

உலகின் 3வது நீளமான ஆறாக யாங்ட்சே கருதப்படுகின்றது. இந்த ஆற்றின் அடியில் 27 கி.மீட்டர் நீளத்துக்கு சுரங்கம் அமைத்து, உச்சாங் – ஹாங்கு நகரங்களுக்கிடையே புதிய சுரங்க ரயில் சேவையை ஆரம்பிக்க சீனா தீர்மானித்துள்ளது.

 

இந்த 27 கி.மீட்டர் தூரத்தை புதிய ரயில் சேவையின் மூலம் மூன்றே நிமிடங்களில் கடந்து விடலாம் என்பது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

 

ஒவ்வொரு 6 நிமிடங்களுக்கும் ஒரு ரயில் வீதம், நாளொன்றுக்கு 26 ரயில்கள் இயக்கப்படும். நாளொன்றுக்கு 5 இலட்சம் மக்கள் இந்த ரயில் சேவையின் மூலம் பயனடைவார்கள் என சீன அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

பீஜிங்-குவாங்ஷோ இடையில் 2 ஆயிரத்து 298 கி.மீட்டர் தூரம் அமைக்கப்பட்ட உலகின் மிக நீளமான பாதையில் நேற்று முன்தினம் மணிக்கு 300 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் சேவையை வெற்றிகரமாக சீனா தொடங்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.