கத்தார் தலைநகர் டோகாவில் ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான் மலேசியா, ஓமன் ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன. நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் சீனாவை 4-0 என்ற கோல்கணக்கில் வென்றது.

 

இந்நிலையில் 2-வது ஆட்டத்தில் இந்திய அணி இன்று ஜப்பானுடன் மோதியது. பரபரப்பாக நடந்த இப்போட்டியின் 22-வது நிமிடத்தில் துணை கேப்டன் ரகுநாத் கோல் அடித்து கணக்கை துவக்கினார். இதையடுத்து முனைப்புடன் முன்னேறிய ஜப்பான் வீரர்கள் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 1-0 என இந்தியா முன்னிலையில் இருந்தது.

 

2-வது பாதியில் கோல் அடிக்கும் முயற்சியில் ஜப்பான் வீரர்கள் உத்வேகத்துடன் முன்னேறினர். இந்திய வீரர்களும் கடுமையாக போராடினர். இந்நிலையில், 50-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் கோஜி கயுகாபா கோல் அடித்து சமன் செய்தார். அடுத்த நிமிடத்தில் குர்விந்தர் சாண்டி, அபாரமாக கோல் அடித்து மீண்டும் இந்தியாவை முன்னிலை (2-1) பெறச் செய்தார்.

 

கடைசி 10 நிமிடங்களில் மட்டும் இந்தியாவுக்கு 3 பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. கடைசியாக 59-வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை ரகுநாத் கோலாக மாற்றினார். இதனால் இறுதியில் 3-1 என்ற கோல்கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

 

இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்