பழைய ஏற்பாட்டு நூல்கள் வேறு வேறு காலங்களில் எழுதப்பட்டவை. காலத்திற்கேற்பவும், கருத்தின் அடிப்படையிலும் எபிரேய மொழியில் எழுதப்பட்ட பழைய ஏற்பாட்டில் யூதர்களின் தெய்வத்துக்கு உபயோகிக்கப்பட்ட பதம் “ஏல்” (El) என்பதாகும். இதன் கருத்து “வல்லமையுள்ளவர்” என்பதாகும். இதிலிருந்து “எல்கானா”, “சாமுவேல்”, “இஸ்ரவேல்”, “பெத்தேல்” என்ற பெயர்கள் வந்தன. இஸ்ரவேலரின் கடவுளைக் குறிக்க இந்த பதம் பழைய ஏற்பாட்டில் 221 முறை கையாளப்பட்டுள்ளது. பலமுறை இந்த ஏல் பதத்துடன் ஓர் அடைமொழியையும் சேர்த்துக் கொண்டனர். எடுத்துக்காட்டாக, “ஏல் ஷாடை” (El Shaddai) « சர்வ வல்லமையுள்ள கடவுள்” (எண் 24-4), “ஏல் எலியோன்” (El Elyon) « உன்னதமான கடவுள்” (ஆதி 14:18). ஏல் என்பதின் இன்னுமொரு மரியாதைப் பதம் “ஏலோஹிம்” (Elohim) ஆகும். இந்த வார்த்தை பழைய ஏற்பாட்டில் 2,000 முறைக்கு மேல் உபயோகிக்கப்பட்டிருக்கிறது. இவைகள் யாவும் கடவுளின் காரணப் பெயர்களாகும்.

இஸ்ரவேலரின் கடவுளின் சொந்தப் பெயர் அல்லது இடுகுறிப் பெயர். எபிரேய மொழியில் “யாவே” (Yahweh), அதாவது “நான் இருக்கிறவராக இருக்கிறேன்” (யாத்தி 3:14) என்பதாகும். இப்பதம் பழைய ஏற்பாட்டில் ஏறக்குறைய 6661 முறை உபயோகிக்கப் பட்டிருக்கிறது.

எலியா தீர்க்கதரிசியின் பலியை வானத்திலிருந்து வந்த அக்கினி பட்சித்த போது, ஜனங்கள் எல்லாரும் “யாவேஹூ ஏலோஹீம்” எனச் சத்தமிட்டார்கள். “யாவேயே கடவுள்” என்பது அதன் பொருள். இறைவனின் பெயரை வாயால் உச்சரிப்பது அபச்சாரம், பாவம் என்று யூதர்கள் கருதிய வழக்கத்தின் காரணமாக, அவர்கள் “யாவே” என்று வருகின்ற இடங்களிலெல்லாம் “அதோனை” என்ற சொல்லை உச்சரிப்பர். எனவே “யாவே” என்ற சொல் எழுத்து வழக்கில் மாத்திரமே நெடுங்காலமாக இருந்து வந்தது. இன்றும் யூதர்கள் அப்பெயரை உச்சரிப்பதே இல்லை. அதன் காரணமாக அதன் உச்சரிப்பும் நாளடைவில் மறந்து போய் பிற்காலத்தில் அச்சொல்லே “யெகோவா” என்றும் உச்சரிக்கப்பட்டுள்ளது. யெகோவா என்னும் பதம் மூலபாஷையில் இல்லை.

புதிய ஏற்பாட்டில் கடவுளைக் குறிக்க உபயோகிக்கப்படும் கிரேக்க பதம் “தியோஸ்” (Theos). இது லத்தீன் மொழியில் “டேயுஸ்” என்ற சொல்லோடு சம்பந்தப்பட்டது. பூர்வ ஆரியருடைய மொழிகளெல்லாம் ஒரே இனத்தைச் சேர்ந்த காரணத்தால், இதே சொல் சம்ஸ்கிருதத்தில் “தேவ” என்றிருக்கிறது. இப்பதங்களின் வேர்ப்பொருள் “ஒளி” அல்லது “பிரகாசம்” என்பதாகும்.

கத்தோலிக்கர்கள் உபயோகித்த “சருவேசுரன்” என்ற பதத்தை ராபர்ட் டி நொபிலி அறிமுகம் செய்தார். அதன் பின் சீகன்பால்க் தன் மொழிபெயர்ப்பில் அச்சொல்லை உபயோகித்துள்ளார். எர்னஸ்ட் வால்தர் (Ernst Walther) சர்வேசுரனுக்குப் பதிலாக “பராபரன்” என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார். இந்த பராபரன் என்ற சொல்லை பப்ரீஷியஸ் (Fabricius) தன் மொழிபெயர்ப்பில் பயன்படுத்திக் கொண்டார்.

பழைய ஏற்பாட்டில் எபிரேய மொழியில் கடவுளுடைய சொந்தப் பெயர் “யாவே” என்றும், அந்த சொல்லுக்குப் பதிலாக “அதோனை” என்ற சொல்லை யூதர்கள் பயன்படுத்தியதைக் கண்டோம். இந்த சொல் பழைய ஏற்பாட்டில் 337 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதோனை என்ற காரணப் பெயரை லத்தீனில் Dominus என்றும், ஆங்கிலத்தில் Lord என்றும், ஜெர்மனியில் Herr என்றும், மொழிபெயர்த்துள்ளார்கள். இது தமிழில் “கர்த்தர்” என்று பப்ரீஷியஸால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது “கிரி” என்கிற சமஸ்கிருத மூலத்திலிருந்து வந்தது. ஆகவே “கர்த்தர்” என்ற பதத்திற்கு “செய்கிறவர்” என்று பொருள் (உதாரணம்: கருமகர்த்தர்). இம்மூலத்திலிருந்து “கருமம்”, “கிரியை” ஆகிய சொற்கள் வருகின்றன. கர்த்தர் என்னும் சொல், “அதிபதி”, “ஆளுகிறவன்”, “ஆண்டவன்” என்னும் கருத்துக்களையும் கொடுக்கும்.

-பேராசிரியர்.எ.சிட்னி சுதந்திரன்.