இயக்குனர் மணி வண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ.  நேற்று (31.03.13) நடந்த இத்திரைப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மணிவண்ணன், சத்யராஜ், சீமான் உட்பட பலர் கலந்துகொண்டனர். நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ. படத்தில் நடித்திருக்கும் சீமான் பேசிய போது “அரசியல் எனக்கு வேண்டாம் என்று எனக்கு முன் பேசிய சத்யராஜ் சொன்னார். அது தவறு. ஏன் அப்படிச் சொல்ல வேண்டும். அரசியல் இல்லாமல் என்ன இருக்கிறது இங்கு. அரசியலை வேண்டாம் என்பவன் நல்ல மனிதனே அல்ல என்கிறார் மேல்நாட்டு அறிஞர்.

 

ஒவ்வொரு மனிதனின் வார்த்தையிலிருந்தும் அரசியல் பிறக்கிறது என்கிறார் இன்னொரு அறிஞர். அரசியலை எல்லோரும் வேண்டாம் என்றால், பின்னர் எப்படி நீங்கள் விரும்புகிற மாற்றங்களை உருவாக்க முடியும். அமைதிப் படை அரசியல்படம்தான். இந்த அரசியல் சமூக மாற்றத்தை உண்டாக்கும். பெரியார், மார்க்ஸ், அம்பேத்கரின் சிந்தனைகளின் வடிவமாக நான் இயக்குநர் மணிவண்ணனைப் பார்க்கிறேன்.

 

இந்த சினிமா மொழியை என்னைப் போன்றவர்களுக்கு மிக எளிமையாகக் கற்றுத் தந்தவர் மணிவண்ணன். இந்த நாகராஜசோழன் திரைப்படம் வெறும் அரசியல் படமல்ல. எமது ஈழ மக்களின் வலியை, அவர்களுக்கு நேர்ந்த கொடூரத்தின் உவமானமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கதை நம் மக்களின் கதை.

 

சத்யராஜ் மற்றும் மணிவண்ணன் இருவருக்கும் ஒரே அலைவரிசையில் சிந்திப்பவர்கள். மணிவண்ணன் எழுத்துக்கு உயிர்தரும் நடிப்பு சத்யராஜூடையது. அவருக்குப் பிடிக்காமல் எப்படி மணிவண்ணன் எழுத்தை உச்சரிப்பார். ஆகவே அவருக்குள்ளும் அரசியல் இருக்கிறது” என்று கூறினார்.