பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்தி விற்பது, விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது போன்ற குற்றங்களுக்குக் ஆயுள் தண்டனை வழங்க மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் ஆணையம் புதிய வரைவு சட்டத்தை தயாரித்துள்ளது. இது குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் ஆணைய அதிகாரிகள் கூறுகையில் “இந்தியா முழுவதும் கொண்டு வரப்படும் இந்த சட்டம் இது போன்ற குற்றங்களுக்கு அதிகபட்சம் தண்டனை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

 

சிறுமி மற்றும் பெண்களை கடத்திச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல், பாலியல் துன்புறுத்தல், ஆபாச படம் எடுத்தல், மேலும் ஹோட்டல் மற்றும் தொழிற்சாலை, வீடுகளில் கொத்தடிமைகளாக வைத்திருத்தல், சிறுவர், சிறுமிகளை கடத்தி உடல் உறுப்புகளை அகற்றுதல், கட்டாயப்படுத்திப் பிச்சை எடுக்க வைப்பது போன்ற குற்றங்களுக்கு இந்தச் சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட உள்ளது.

 

இந்தச் சட்டத்தின்படி, ஆள் கடத்தல், பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றங்களுக்குப் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அதே நபர் மறுபடியும், மறுபடியும் அதே குற்றத்தைச் செய்து கைது செய்யப்பட்டால், ஆயுள் தண்டனை வழங்குமாறு அமைந்துள்ளது.

 

கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும். பாலியல் ரீதியாகத் தாக்குதல் நடத்தப்பட்டு, எடுக்கப்பட்ட படங்களை எலெக்ட்ரானிக் முறையிலோ, அல்லது புத்தகமாக வைத்திருந்தாலோ 3 ஆண்டிலிருந்து 7 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

 

பாலியல்ரீதியான தொல்லை கொடுத்து அதை வீடியோவாக எடுத்து அதை ஆவணமாக்கியோ ஆதாரமாக்கியோ வைத்துக் கொண்டு பெண்களை மிரட்டுவது, பணம் கேட்பது போன்ற குற்றங்களுக்கும் இந்த தண்டனை பொருந்தும். மிரட்டி திருமணம் செய்வது, திருமணத்துக்கு வலியுறுத்துவது, திட்டமிட்டு மோசடித் திருமணம் செய்வது போன்ற குற்றங்களுக்கும் இந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.