திரையிலும், அரங்கிலும் அதிகம் காண்கின்ற பிரபல்யமான கலைஞர்களின் இணைவில் வெளிவந்திருக்கிறது « அந்தியில் உதயம் » குறும்படம். இந்தப் படைப்பில் பாரிஸில் அதிகமான குறும்படங்களை இயக்கியும் நடித்தும் முத்திரை பதித்த கலைஞர்களான மன்மதன் பாஸ்கி, ரமணா ஆகியோருடன்… நகைச்சுவை பிரபல்யம் ஸ்ரீ அங்கிள், நடிகை மரியனிற், ஆர்த்தி, அருன் விஜயன், வாகை காட்டான், சரத்பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

 

Digi Media ஒளிப்பதிவினை சிறப்புற பதிவாக்க, பிரபல்ய பன்முகக் கலைஞர் சங்கர் தேவா அவர்கள் படத்தொகுப்பினை நிறைவாகச் செய்திருக்கின்றார். ஈழத்தில் இசைவானில் சிறகடித்துப் பறக்கும் கந்தப்பு ஜெயந்தன் அவர்கள் இசை அமைத்திருக்கின்றார்.

 

ஈழத்துக் கலைஞர்களில் பெயர் சொல்லத்தக்க வகையில் குறும்படங்களை தந்த இயக்குனர் நெடுந்தீவு முகிலன் அவர்கள் இந்தப் படத்தை இயக்கியிருக்கின்றார்.

 

நிலத்திலும், புலத்திலும் ஏன் உலகெங்கிலும் காதல் என்ற பெயரில் ஏமாற்றி அந்தரங்க விளையாட்டுகளை படம் பிடித்து அச்சுறுத்தும் காமக் கும்பலின் கதைக்கரு இங்கே விரிந்திருக்கிறது. இது, இயக்குனர் நெடுந்தீவு முகிலனின் நம்மவர்களுக்கான  இன்னொரு விழிப்புணர்வு குறும்படம் என்றுகூட சொல்லலாம்!

 

நெடுந்தீவு முகிலனின் குறும்படங்களின் முடிவு யாருமே எதிர்பாராத ஒரு திருப்பமான முடிவாக இருக்கும். இந்தப் படத்தின் கதை நகர்வு எப்படி இருக்கும் என்று முன்பே உணர்ந்து கொண்டதால் அந்தத் திருப்பம் இல்லாத குறை எனக்கு மட்டும்!

 

இதில் நாயகனான மன்மதன் பாஸ்கி சிறப்பாக நடித்திருக்கின்றார். மற்றைய கலைஞர்களும் கதைக்கேற்றவாறு நடித்துள்ளனர். வந்து போகின்றனர்.

 

பாஸ்கியும் ரமணாவும் இணையும் விளம்பரங்களைப் பார்த்துவிட்டு இன்னும் கொஞ்சம் அதிகமாக எதிர்பார்த்திருந்தேன். இருப்பினும், நேர்த்தியான கதையோட்டம் திருப்தியாக உள்ளது. படக்குழுவினர் அனைவரையும் சிரித்தபடி வாழ்த்துகின்றேன்!

 

இவன்…
கி.தீபன்!