தமிழின அழிப்பு நினைவு நாள் மே-18 நான்காவது ஆண்டில் மாபெரும் நினைவுப் பேரணி பிரான்சில் நேற்று நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும். அதன் உப கட்டமைப்புக்களும், தமிழீழ மக்கள் பேரவையும் இணைந்து இப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர்.இப்பேரணியில் குர்திஸ்தான் விடுதலை அமைப்பும் பங்கு கொண்டு தமது முழு ஆதரவையும் தெரிவித்தனர்.

 

பிற்பகல் 2.50 மணிக்கு இராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட நினைவுப் பேரணி ஈபிள் கோபுரம் வழியாக மனித உரிமைச் சதுர்க்கம் முன்பாக சென்றடைந்தது.

 

நினைவு நிகழ்வின் தொடக்க நிகழ்வாக பொதுச்சுடரினை பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் பொறுப்பாளர் திருச்சோதி அவர்கள் ஏற்றி வைக்க அதனைத் தொடர்ந்து, கேணல் பரிதி அவர்களின் பெற்றோரும் முள்ளிவாய்காலில்  படுகொலை செய்யப்பட்ட மக்களின் உறவுகள் ஈகைச்சுடரினையும், மலர்வணக்கத்தையும் செய்ததை தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளும் சுடர் எற்றினர். அகவணக்கம் செய்யப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து கடந்த மே-1ம் நாள் முதல் 18 ம் திகதி வரை அடையாள கவயீர்ப்பு உண்ணா மறுப்புப் போராட்டத்தை நடாத்திய மூதாளர்கள் மற்றும் மக்களாலும் மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது.

 

முள்ளிவாய்கால் நான்காம் ஆண்டிலே பல பிரெஞ்சு பிரமுகர்கள், குர்திஸ்தான் விடுதலை அமைப்பு பிரமுகர்கள், மனிதநேய அமைப்புகளின் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

கடந்த 1ம் திகதி முதல் 18ம் திகதி வரை மூதாளர்களால் முன்னெடுக்கப்பட்ட உண்ணா மறுப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட மூதாளர்கள் அழைத்து வரப்பட்டனர்.

 

முள்ளிவாய்காலின் பேரவலத்தையும், இப்பேரணியின் நோக்கத்தையும் பிரஞ்சு அரசாங்கத்துக்கும். சர்வதேசத்துக்கும் தெரியப்படுத்தும் வகையில் உரையாற்றப்பட்டது.பாராளுமன்ற உறுப்பினரும், கட்சித்தலைவியும் மற்றும் கிளச்சி, லாக்கூர்னேவ் போன்ற மாநகர முதல்வர்கள் உதவி முதல்வர்கள் கலந்து கொண்டு உரையும் ஆற்றினர்.

 

குர்திஸ்தான் மக்கள் சார்பில் அதன் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு உரையும் ஆற்றினர். குர்திஸ்தான் விடுதலை அமைப்பு பிரமுகர் பேசுகையில்,

 

தமிழீழ மக்கள், குர்திஸ்தான் மக்களை போல் விடுதலையை தேடி நிற்பவர்கள். அதிலும் அண்மையில் துருக்கி நாட்டிக்கு வந்த சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபச்கே வந்த போது, துருக்கி பிரதமர் மகிந்த ராஜபச்கேயை பாராட்டியதுடன் தாமும் குர்திஸ்தான் விடுதலை போராட்டத்தை அடக்க சிறிலங்கா அரசு கையாட்ட முறையையே கையாள்வதாக கூறினார்.

 

ஆகவே நாம் எல்லோரும் ஒரே மாதிரியான அடக்கு முறை அரசுக்கு எதிராகவே போராடுகிறோம் என்றும் குர்திஸ்தான் விடுதலை எவ்வளவு முக்கியமோ அதே போல் தமிழ் ஈழம் உருவாவதும் முக்கியம். அது தவிர்க்க முடியாதது என்று வலியுறுத்தினார்.

 

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் சத்திதாசன் அவர்களும். தமிழீழ மக்கள் பேரவை சார்பாக திரு. கமல் அவர்களும், தமிழ் இளையோர் அமைப்பு சார்பாக செல்வி. பானுசா அவர்களும் உரையாற்றினார்கள்.

 

பேரணியில் தமிழீழத்தில் இன்றைய நிலைப்பாடுகள் பற்றிய காட்சிப்படுத்தலை தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் தெருவழி நாடகமாக செய்து கொண்டு வந்திருந்தனர்.

 

குசன்வில் மாணவர்கள் காலத்தின் தேவைகருதிய பாடல் ஒன்று நடனவடிவம் தந்து அனைத்து மக்களுக்கும் ஓர் எழுச்சியை ஊட்டினர்.

 

இறுதியில் உறுதிமொழி எடுக்கப்பட்டு “நம்புங்கள் தமிழீழம்” பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் 7.00 மணிக்கு நிறைவு பெற்றது. இவ் நினைவுப்பேரணி மூன்று கிலோ மீற்றர் தூரத்திற்கு தமிழீழ தேசிய கொடிகளை தாங்கி வந்திருந்தன.