பிரபாகரன் பற்றிப் பேசுவது ஈழம் பற்றிப் பேசுவது. வரலாறு நெடுகிலும் இழப்பையும், இடப் பெயர்வையும், தியாகத்தையும் தன்னகத்தே கொண்ட தமிழீழ மண்ணின் அடையாளம், திருஉரு, பிரபாகரன். தமிழர் எழுச்சியின் பொருண்மை ‘வடிவம்’ பற்றி, அந்த மாபெரும் மனிதரைப் பற்றி இந்நூல் பேசுகிறது. உலகமயச் சூழலில் ஓர் ஒடுக்கப்பட்ட இனத்தின் உரிமைகளும் நியாயங்களும் கூட சரக்குகளாக்கப்பட்டு, பரிவர்த்தனை சந்தையில் விற்கப்படும் கூச்சலில் ஈழத்தில் நிகழ்ந்த பேரவலத்தின் ஓலம் உறைந்தே போனது.

 

40 ஆயிரம் பிணங்களின் மேலே நின்று கொண்டு எல்லாம் முடிந்து விட்டது என்ற தங்களின் கவித்துவ நீதியை நடுநிலையாளர்கள் கதைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அத்தனைக்கும் நடுவே, துரோகத்தால் சிதைந்துபோன ஒரு தேசத்தின் ஆன்மா எழுப்பும் குரலும், இது வீழ்ச்சியல்ல; எழுச்சிக்கு முந்தைய கட்டம் என்ற நம்பிக்கையின் குரலும் நெடுமாறனின் எழுத்து வழியே கேட்கிறது. பெட்ரோகிராடிலிருந்து வெளிப்பட்ட ஜான் ரீடின்* எழுத்தைப் போல!

 

* 1917இல் பெட்ரோகிராடுக்கு நேரடியாகச் சென்று போல்ஷ்விக் (ரஷ்யா) புரட்சியை நேரில் கண்டு, போராட்டத்தின் அங்கமாக நின்று உலகைக் குலுக்கிய 10 நாட்கள் என்ற நூலை எழுதியவர் அமெரிக்க கம்யூனிஸ்டான ஜான் ரீட்.