வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை காரையில் எல்.எப்.ரோட்டில் சிந்தாமணி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் உள்ள அரச மரத்தில் குரங்குகள் கூட்டமாக வசிப்பதுடன் மரத்துக்கு மரம் கிளைக்கு கிளைதாவி விளையாடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை கர்ப்பிணி குரங்கு ஒன்று பிரசவ வலியால் அவதிப்பட்டது. அப்போது மரத்திலிருந்து தவறி கீழே விழந்தது. சுமார் 25 அடி உயரத்தில் இருந்து ரோட்டில் விழுந்தது. இதில் பலத்த அடிபட்ட கர்ப்பிணி குரங்கு உயிருக்கு போராடியது. அத்துடன் கீழே விழுந்த அதிர்ச்சியில் குரங்கின் வயிற்றில் இருந்த குட்டி வெளியே வந்து சில நொடிகளில் அது இறந்து போனது.

 

குரங்கின் வேதனையை பார்த்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக அதுபற்றி கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்தனர். அத்துடன் உயிருக்கு போராடிய குரங்கிற்கு பொதுமக்கள் குளுகோஸ் கொடுத்தனர். எனினும் சிறிது நேரத்தில் கர்ப்பிணி குரங்கும் பரிதாபமாக இறந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.

 

பின்னர் அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இறந்து போன கர்ப்பிணி குரங்கு கீழே விழுந்ததில் இறந்த அதன் வயிற்றில் இருந்து வெளியே வந்த குட்டியையும் ஒன்றாக வைத்து அவற்றுக்கு முறைப்படி இறுதி சடங்குகள் செய்து அடக்கம் செய்ய முடிவு செய்தனர். குரங்கு மற்றும் அதன் குட்டியை வைத்து பஜனை பாடல்கள் பாடி, அபிஷேகங்கள் செய்து அதற்காக கட்டப்பட்டிருந்த பாடையில் வைத்து ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

 

பின்னர் சிந்தாமணி விநாயகர் கோவிலின் பின்புறம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அங்கு குரங்குகளை அடக்கம் செய்தனர். அந்த இடத்தில் ஆஞ்சநேயர் கோவில் கட்ட முடிவு அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.

 

mongy murder