பிணைமுறி விசாரணை அறிக்கை நாளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதன் பின்னர் குறித்த அறிக்கை மீதான விவாதம் நடைபெறும் என இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் நாளை கூடினாலும் இதுவரை பிணை முறிகள் தொடர்பான அறிக்கை கிடைக்கப்பெறாமையால் விவாதத்தை நடத்துவது எவ்வாறு எனவும் கட்சித் தலைவர்கள் சபாநாகரிடம் கேட்டுள்ளனர்.

 

இதற்கமைய நாளையதினம் குறித்த அறிக்கையினை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியதன் பின்னர், குறித்த ஒரு தினத்தில் விவாதம் நடத்தப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

 

அதேவேளை, புதுவருடத்தில் முதன்முறையாக நாளை கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வின் போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். நாடாளுமன்றம், எதிர்வரும் 23ஆம் திகதியே கூடவிருந்தது. இந்நிலையில், ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான அறிக்கை தொடர்பில் விவாதிப்பதற்காக, நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு, அனைத்துக் கட்சிகளும் விடுத்த கோரிக்கைக்கு அமையவே, நாடாளுமன்றம் நாளை கூடவுள்ளது.

 

இதன்போது, பிரதமர் ரணில் விக்கரமசிங்கவின் விசேட உரையு​டனேயே, இந்த அமர்வு ஆரம்பமாகவுள்ளதென, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வுக்கான இறுதி நிகழ்ச்சி நிரல், இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற அவசர கட்சித் தலைவர்கள் மாநாட்டின் போது தயாரிக்கப்பட்டது.

 

இதேவேளை, ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட பிணைமுறி விவகாரத்தின் இறுதி அறிக்கையானது, இதுவரை ஆங்கிலத்தில் மாத்திரமே தயாரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில், எம்பிக்கள் கோரிக்கை விடுக்கப்படும் பட்சத்தில், அந்த அறிக்கையின் சிங்களம் மற்றும் தமிழ் மொழி அறிக்கைகள் தயாரிக்கப்படுமெனக் கூறப்படுகின்றது.

 

அதேபோன்று, குறித்த அறிக்கையை பொதுமக்கள் பார்வைக்காக விடுவதாயின், அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தல் வேண்டுமென, நாடாளமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.