சீனாவில் வேகமாக பறவி வரும் பறவை காய்ச்சல் காரணமாக மனித பாவனைக்கு தகுதியற்றதாக கருதப்படும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துக் குஞ்சுகள் உயிருடன் பாம்புகளுக்கு இரையாக்கப்பட்டு வருகின்றன.

 

சீனாவில் பறவை காய்ச்சல் காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வாத்து பண்ணைகளை வைத்திருக்கும் பண்ணையாளர்கள் ஏராளமான வாத்துக் குஞ்சுகளை உயிருடன் பாம்பு பண்ணைகளுக்கு விற்கின்றனர்.

 

இங்கு வாத்து முட்டைகளும் ஏராளமாக அழிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

இதேவேளை, பாம்பு பண்ணைகளுக்கு வாத்துக் குஞ்சுகளை டிரக் வண்டியில் கொண்டுசென்று விற்பனை செய்யும் நடவடிக்கை சீனாவில் தொடர்கின்றது.

 

‘நாங்கள் இவற்றை அழித்துவிடுகின்றோம் அல்லது எரித்துவிடுகின்றோம். சில பண்ணையாளர்கள் இவற்றை அழிப்பதற்கு கட்டாயப்படுத்தப்படுகின்றார்கள்’ என ஒரு பண்ணையாளர் இதுகுறித்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

வாத்துக் குஞ்சுகளை பாம்பு பண்ணைகளுக்கு விற்பதுதான் இதற்கு தீர்வாகும். ஆனாலும் மனிதாபிமான முறையில் பார்த்தால் இதுமுறையற்றது’ என பண்ணையாளரான சென் லின் என்பவர் தெரிவித்துள்ளார்.

 

‘இந்த முடிவு வாத்து பண்ணைகளை வைத்திருப்பவர்களுக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தும். ஆனால், பாம்பு பண்ணையாளர்களாகிய எமக்கு இது சந்தோஷத்தை தருகிறது’ என பாம்பு பண்ணையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

சீனாவில் இதுவரை 63 பேர் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப் பறவை காய்ச்சலானது மனிதர்களால் மனிதர்களுக்கு தொற்றவில்லை என ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.

 

சீனாவின் பறவைகள் அதிகமாக ஒன்றித்து வாழும் சங்காய் மாகாணம் மற்றும் பீஜிங்கில் பறவை காய்ச்சல் அதிகரித்துக் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.