தமிழ் சினிமாவின் பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட 12 இந்திய மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் 82 வயதான இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் மோசமான நிலையில் இருந்து வந்தது. இதனால் சென்னை சிஐடி நகரில் உள்ள அவரது வீட்டில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

 

இந்நிலையில் இன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது. காலமான பி.பி.ஸ்ரீநிவாஸ் 1934ம் ஆண்டு செப்டம்பர் 22ம் நாள் ஆந்திராவில் காக்கிநாடா மாவட்டத்தில் பிறந்தார்.

 

தமிழ்த் திரை இசை உலகில் டி.எம்.சௌந்தரராஜன் புகழின் உச்சியில் இருந்த காலத்தில் ஸ்ரீநிவாஸ் அவருக்கு அடுத்த இடத்தில் விளங்கினார்.

 

வெண்கலக் குரலில் பாடிவந்தோர் காலகட்டத்தில், மென்மையான குரலால் இனிமையைக் கூட்டி பாடுவதில் ஒரு புதிய பாணியை கொண்டுவந்தவர் பி.பி.ஸ்ரீநிவாஸ்.

 

‘காலங்களில் அவள் வசந்தம்’, ‘மயக்கமா கலக்கமா’, ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ என காலத்தால் அழியா பாடல்களை பாடிய அற்புதமான பாடகர்.

 

தமிழ்ப் படங்களில் ஜெமினி கணேசன், கன்னடத்தில் ராஜ்குமார் ஆகியோரின் அனைத்துப் படங்களிலும் இவர்தான் பின்னணி பாடியுள்ளார். பி.பி.ஸ்ரீநிவாஸ் மறைவிற்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.