அந்த உயர்ந்த பனை மரத்தில் குலை குலையாக நுங்குகளும் குரும்பைகளும் இன்னும் பழமாகிவிடாத சீக்காய் பருவத்து பனங்காய்களுமாய் இருந்தது. அந்த பனை மரத்து வட்டுக்குள் தமக்கு ஒரு வீட்டை கட்டியிருந்தன இரு காகங்கள். ஈக்கி;ல்களையும் தும்புகளையும் மட்டுமல்ல பெரிய முட்கம்பிகள் ஆணிகள் போன்ற இரும்பு வகைகளையெல்லாம் அற்புதமாக வளைத்து தமது வீட்டிற்கு பலம் சேர்த்து வைத்திருந்தன. அந்த வீட்டுக்குள் தாங்கள் இட்ட முட்டைகளை மட்டுமல்ல முட்டையிட மட்டும் தெரிந்து தாயாக முடியாத குயில்களின் முட்டைகளையும் தமது முட்டைகள்தான் என்று ஏமாந்தபடியே அடைகாத்துக்கொண்டிருந்தன. காகங்கள்.

 

பனை மரம் காகத்தைப் பார்த்து அகங்காரமாக கூறியது ‘ஏய் காகமே! உன்னால் பிறருக்கு என்ன பிரயோசனம் ? மனிதர்கள் உன்னை நம்புவதே கிடையாது! எந்த மனிதனாவது உன்னை சேர்த்துக்கொள்கின்றானா? சின்னக் குழந்தைகள் தின்னும் இனிப்புப் பண்டத்தை கூட தட்டிப் பறிக்கும் உன்னை யார்தான் சேர்த்துக்கொள்வார்கள்! சின்னஞ்சிறு குயில்கூட உன்னை ஏமாற்றி உன் மூலமாக தன் பிள்ளையை பெத்துக்கொள்கின்றதே! உனக்கு வெட்கமே இல்லையா? என்னைப்பார் உணவிற்காக நான் யாரிடமும் இரஞ்சமாடேன் இருப்பினும் என் அங்கங்கள் எல்லாம் மனிதனுக்கு பயன் பட்டுக் கொண்டே இருக்கின்றது.

 

ஓலையானால் வீட்டின் கூரையாகி மழையில் இருந்து மனிதர்களை காப்பாறுகின்றேன். குருத்தோலையானால் பாய், பெட்டி, கடகமென பயன்படும் பொருளாகுவேன் ஈக்குகள் கூட வீணாகிப்போவது இல்லை.ஓலையோடு சேர்ந்த மட்டைகளால் நாராவேன்,பின் கயிறாவேன் வீட்டு வேலியாவேன், நுங்காக வந்து மனிதனுக்கு சுவையான உணவாவேன் அதன் பிற உறுப்புக்கள் கூட மிருகங்களுக்கு உணவாகவே சேரும். என்னில் ஊறும் பதநீர் மனிதர்களுக்கு தாகம் தீர்க்கும் சுவைமிகு பானம். பழமானாலும் சுவையான உணவுதான் நான். கிழங்காவேன் பின் ஒடியல் புளுகொடியல் என சத்தான உணவாகவே நான் இருப்பேன்.

 

என் தலையில் இருக்கும் பன்னாடைகள் கூட வீடு கூட்டும் தும்புத்தடிகளாக மாறிவிடும்.செத்தாலும் கூட என் உடம்பு வீட்டுக் கூரையாக மாறிவிடும். இன்று நீ கூட என் தலையயில் தான் வீடுகட்டி குடியிருக்கின்றாய் உன்னைப் .போல் எதற்கும் பயன் படாதவனல்ல நான். என்னை விட பலசாலி யார் கூறு பார்க்கலாம் » என்றது பனைமரம்.

 

காகம், பனையின் பயனையும் அதன் பலத்தையும் தன்னோடு ஒப்பிட்டுப் பார்த்தது தன்னை நினைத்து தானே வெட்கப்பட்டுக்கொண்டது. அப்பொழுது டொக், டொக், டொக், என ஒரு சத்தம் கேட்டது! அச்சத்தம் பனைமரத்தில் இருந்துதான் கேட்டது. காகம் குனிந்து எட்டிப்பார்த்தது.பனைமரத்தின் நடுப்பகுதியில் ஒரு தச்சன் குருவி தனது சிறிய சொண்டுகளால் கொத்திக் கொண்டிருந்தது. பனை மரத்திடம் காகம் கேட்டது ‘பெரிய வீரமெல்லாம் பேசுகின்றாயே! ஒரு சின்னக் குருவி உன் நெஞ்சில் ஓட்டை போடுகின்றதே நீ எப்படி பலசாலி என்று கூறிக்கொள்வாய் » என்றது.
பனை சொன்னது ‘என் பலம் தெரியாமல் மோதுகின்றது இது சின்னக் குருவி என்னை வெல்ல இதனால் முடியாது » என்றது.

 

சில மணி நேரத்தில் அந்த குருவி தனது சிறிய சொண்டுகளால் பனை மரத்தில் பெரிய ஓட்டை போட்டு தனக்கொரு வீட்டை கட்டிக்கொண்டது. காகம் வியந்தபடி குருவியிடம் கேட்டது ‘குருவியாரே குருவியாரே சின்னஞ சிறு ஆளாக இருக்கின்றீரே எப்படி இந்த பெரிய மரத்தில் ஓட்டை போட்டீர்? » தச்சன் குருவி சொன்னது ‘பெரிய மலையை உடைப்பது சின்ன உளிதானே! »

 

காகத்திற்கு அப்பொழுதான் விளங்கியது பனைமரத்தால் மற்றவர்களுக்கு ஏகப்பட்ட பிரயோசனம்தான் ஆனாலும் மரம் மரம்,தானே இதில் என்ன வீராப்பு பேச்சு காகம் சுருக்கமாக சொன்னது ’வீரம் பேசுபவர்கள் எல்லாம் சூரர்கள் அல்ல பிறருக்கு பயன் படுபவர்கள் எல்லாம் வீட்டுக்கு ஊதாரிதான் »!

 

(கலைஞர் காவலர் – மனிதருள்)

« வண்ணை தெய்வம் »