உன்மேல் விழுந்த
தூசிகள் எப்படி
நெருப்பில் படிந்தது
என்பதை நீயறியாய்!

 

கவிதைப் போர்க்களத்தில்
சேமிப்பில் உள்ளதைவிட
சழுகக்களத்தில் ஆற்றியது
நிரந்தரம் எரியும் நெருப்பில்
துக்கமும் துயரமும்
ஏப்படி வந்து உன்னைச்சேரும்?

 

எழுதுகோல் ஆயுதமாக
எழுத்துக்கள் குண்டுகளாக
துலங்கிய தூயதுலாமை
தூசிகள் வந்தெப்படி
நிறுத்துப் பார்க்கும்?

 

ஈன்ற நாட்டின் பற்றில்
ஈடில்லாத் தலைவன்
வழியின் நேசிப்பின்
நேர்த்தியில் வாழும்
கவிதைப் புனிதனே

 

புதியயுலகிற்குள் உன்னுடைய
கவிதைகள் விரைவாகச்
செல்லும் நம்பிக்கை
நெஞ்சில் எரியும்போது
தூசிகள் எப்படி வந்தொட்டும்?

 

மனசு காயப் பட்டாலும்
மானிடம் நொந்திடாது
மனிதாபிமானம் வெந்திடாது
தெளிந்த பயணத்தில்
தொடர்ந்து வெல்லும்
பெயர் சொல்லும்
புலவா என்றென்றும்
மண்ணோடும் மக்களோடும்தான்

 

ஓவியத்தின் சிறப்பு
கண்ணிழந்தவர் அறிவதில்லை
புல்லாங் குழல் துளையில்
நுழையும் காற்றின்
கீதம் காதில்லாதவன் கேட்பதில்லை
கவிதைக் கீற்றின் தெறிப்பு
காலம்கடந்தும் கல்லின் எழுத்து

 

நீயேன் மறைவாய் அழுகுகிறாய்?
எப்போது என்றறியாமல்
தனிமையில் பலமுறை
உனக்குள் உனக்குள்தான்
அழுகிறாய் அழும்போது
பரவசப்படும் சந்தோசத்திலும்
அழுதபடி சிந்திக்கிறாய்!
சிரித்துக் கொண்டும் அழுகிறாய்

 

துயருக்குள் துயர்தந்து
புதிருக்குள் புன்னகையோடு
நபர்களுக்கு நற்சாட்சியாக
மனிதம் தேடுகிறாய்
நட்பைப் புரியாதவரோடும்!

 

எனெனில் மூழ்கியும்
« நான்” நாமாகிடவும்
நான் ஒன்று நீ ஒன்ற
இல்லாது நாமொன்று
என்றெண்ணும் பொதுநலப்
புலவா நீயேன்! அழுதாய்?

 

நெருப்பு இளைத்துப்போகாது
பூகம்பம் பூரிக்கும் போதும்
பூங்காற்று கச்சிக்கும்போதும்
நினைவை நினைக்கிறாய்!
பாயிரத்தோடு பனுவல்
படைக்கும் புலவா
ஓய்தல் சாய்தலின்றியுன்
கண்ணீர்க் கோடுகள்
எழுத்தாய்ச் சிரிக்கும்
நெருப்பில் தூசி ஒட்டாது!

 

பெரும்மழை இறங்கும்போது
சமுத்திரம் சிரிக்கிறது!
கவிதைகள் விரையும்போது
கண்களே இறங்குகிறது
பாக்கள் படிமங்களாகும் போது
பாரே பதறுகின்றது

 

திரும்பத் திரும்பவே
இதயத்தை அழுத்தும்
நாவால் சுட்டவைகள்
நாளும் துரத்துவதை
பேணாது நீ விடுவாய்!
நெருப்பில் ஒட்டாது!

 

காய்த்தமரத்தில் கல்லெறி
சுடுநீரை வேரில்
ஊற்றும் உன்மத்தர்கள்
நெருப்பை நெருப்புத்
தூங்கி அரற்றுவதில்லை
அக்கினி அழுவதில்லை!

 

மறப்பதும் மன்னிப்பதும்
மாறுவன திரும்பாதவை
பூ பூக்கும் ஓசைகள்
காதில் கேட்பதில்லை
புலவன் புலம்பல்கள்
காலம்கடந்து கேட்கும்

 

இழைக்கும் கவலைகள்
முள்ளிவாய்க்கால் கோரக்
கூத்தின் கொடுமை கண்டும்
நெஞசம் நடுங்காதவனே!
திரும்பத் திரும்பவே
நெருப்பை அழுத்தினாலும்
கொள்கை கேலியாகாது

 

கொள்கை உறுதியில்
மனிதன் மனிதனாய்
கலைத்துப் போகாது
எழுதுகோல் தெய்வம்
எழுத்தும் தெய்வம்
பெயர் சொல்லும்
புலவா மண்ணோடும்!
மக்களோடும்தான்!!

 

அக்கினிக்கவிஞர்
மா.கி.கிறிஸ்ரியன்