நான் « நேர்தல் » என்ற படைப்பை இயக்கிய போது, அந்தப் படைப்பில் இறுதிக் காட்சியில் நடிப்பதற்கு ஒரு கலைஞர் தேவைப்பட்டார். தம்பி நடிப்பில் ஆர்வம் உள்ள ஒரு இளைஞர் இருக்கின்றார். தேவை என்றால் அழையுங்கள் வந்து நடிப்பார் என்று கலைஞர் இந்திரன் அவர்கள் கூறியது ஞாபகத்திற்கு வந்தது.

 

நடிகர் தேவை என்ற விடையத்தைக் கலைஞர் இந்திரன் அவர்களிடம் தொடர்பு கொண்டு கூறினேன். அவர் தந்த கலைஞர்தான் நடிகர் சாரதி. ஒரு மாலை நேரம் தொடரூர்தி நிலையத்தில் சந்தித்தோம். இந்தப் படைப்பில் ஒரு சிறிய காட்சியில்தான் நடிக்க வேண்டும். விருப்பமா? என்று கேட்டேன். அவர் அதை எல்லாம் பொருட்படுத்தவில்லை. நடிப்பில் உள்ள ஆர்வம்தான் முகத்தில் பிரகாசமாகத் தெரிந்தது.

 

வீடு வந்து சேர்ந்து படப்பிடிப்பைத் தொடங்கினோம். அந்தப் படைப்பில் நடித்த நாயகனையே நடிப்பால் விஞ்சியிருந்தார் நடிகர் சாரதி. முதலாவது படைப்பிலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகின்ற கலைஞனை, ஒரு சிறிய காட்சியில் நடிக்க அழைத்து விட்டேனே என்று மனம் வாடினேன். அன்று படப்பிடிப்பு முடிந்தவுடன், ஒரு படைப்பில் முதன்மைப் பாத்திரத்தில் நடிப்பதற்கு மிக விரைவில் உங்களை அழைப்பேன் என்று கூறி அனுப்பி வைத்தேன்.

 

நான் சாரதிக்காக எழுதிய கதைதான் « தீராத தாகம் ». புனர்வாழ்வு பெற்று விடுதலையான ஒரு போராளி சமூகத்தில் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளைக் கதை சொல்லியது. அந்தப் படைப்பில் நடிப்பதற்கு சாரதியை அழைத்திருந்தேன். மூத்த கலைஞர்கள் இந்திரன் அவர்கள் தந்தையாகவும், புனிதமலர் அவர்கள் தாயாகவும் நடித்திருந்தனர். சாரதி அந்தப் படைப்பில் ஒரு புனர்வாழ்வு பெற்ற போராளியாக வாழ்ந்தார். அந்தப் படைப்பு பல ஊடகங்களில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. சாரதி அந்தப் படைப்பில் முளுமையாக நடித்தது எனது நெஞ்சுக்கு நிம்மதி தந்தது.

 

சாரதியின் நடிப்பில் எனக்கிருந்த நம்பிக்கையாலும், நடிப்பில் அவருக்கு இருந்த அடங்கா விருப்பினாலும், சிறந்த கதைகளில் எல்லாம் சாரதியை நடிப்பதற்கு துணிந்து, விரும்பி அழைத்தேன்.

 

இந்திரன் அவர்கள் அரியநாயகம் அவர்கள் இயக்கிய ஒரு கூத்து நாடகத்தில் பார்வையை இழந்தவராக மிகச் சிறப்பாக நடித்திருந்தார். அந்த தோற்றத்தை மனதில் வைத்து « திருப்பம் » என்று ஒரு படைப்பை உருவாக்கினேன். மதுவிற்கு அடிமையாகிய ஒரு குடிமகனாக சாரதி நடித்தார். குப்பை போடும் இடங்களிலும், காடுகள், மேடுகளில் எல்லாம் சாரதி வீழ்ந்து கிடந்து நடித்ததை இப்போது நினைத்தாலும் தேகமெல்லாம் சிலிர்க்கின்றது. அந்தப் படைப்பில் எனது எதிர்பார்ப்பை விஞ்சிய நடிப்பைத் தந்து என்னை வியக்க வைத்தார். ஒவ்வொரு காட்சியிலும் சாரதியின் குறும்புத் த‌னமான நடிப்பு என்னை சிரிக்க வைத்தது. உண்மையிலேயே போதைக்கு அடிமையாகிய ஒருவர் அந்தப் படைப்பில் நடித்திருந்தால் கூட, சாரதி தந்த உயிரோட்டமான நடிப்பைத் தந்திருக்க முடியாது. « திருப்பம் » என்ற அந்தப் படைப்பு முளுவதும் அழுக்கு உடையுடன் ஒரு சிறந்த நடிகர் வலம் வந்து கொண்டிருந்தார். சாரதியுடன் இந்திரன் அவர்கள் இணைந்த இறுதிக் காட்சி கண் கலங்க வைத்தது. படைப்பு வெளிவந்த போது மூத்த கலைஞர்கள் பலர் சாரதியின் நடிப்பைப் பாராட்டி விசாரித்தனர்.

 

அதற்குப் பின்பு எப்படியான கதையிலும் சாரதியைப் பயன்படுத்தலாம் என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது. « காதல் தேசம் » என்ற படைப்பில் முதியவராக நடிக்க வைத்தேன். அலங்காரம் செய்து முடித்தவுடன், 50 வயதுடைய ஒருவரின் நடை, உரை, முகபாவங்களைக் கொண்டு வந்தார். அந்த படைப்பிலும் சாரதியின் சிறந்த நடிப்பு வெளிப்பட்டது. பலருடைய பார்வைகள் சாரதியின் பக்கம் திரும்பியது.

 

முள்ளி வாய்க்காலில் எமது இனம் சந்தித்த பேரழிவுகள் சில நாட்களாக மனதில் கனத்துக் கொண்டிருந்தன‌. அதை ஒரு படைப்பாக மனதில் இருந்து இறக்கி வைத்துவிட விரும்பினேன். ஒரு இரவில் நான் எழுதிய கதைதான் « உயிர்வலி ». அந்தப் படைப்பில் நடிகர் கோணேஸ் அவர்கள் முக்கிய பாத்திரத்தில் நடிப்பதற்கிருந்தார். அவரால் வரமுடியவில்லை. அவருக்குப் பதிலாக சாரதியை நடிக்க வைத்தேன். கோணேஸ் பாத்திருந்தால் கூட மனம் திறந்து பாராட்டும் அளவில் அமைந்தது சாரதியின் நடிப்பு. மரியனிற் ஒரு சிறந்த நடிகை. அவருக்குக் கதை கனமாக அமைந்தால் மிகுதியைச் சொல்லவா வேண்டும். அந்தப் படைப்பில் மிகச் சிறப்பாக நடித்த மரியனிற் அவர்களுடன் சாரதி போட்டி போட்டு நடித்திருந்தார். படைப்பை பார்த்து விட்டு மரியனிற் அவர்களே பாராட்டினார். அந்தப் பாராட்டுதல் சாரதிக்குக் கிடைத்த பரிசு. நான் இயக்கிய படைப்புகளில் இன்னும் சலிக்காமல் நான் பார்ப்பது « உயிர்வலி »யைத்தான். உயிர்வலி எனக்கும் பெருமை சேர்த்தது. ஒரு சிறந்த கதை சொன்ன திருப்தியில் மனசு நிறைவடைந்தது.

 

சாரதி, கௌதம், சுரேஷ் ஆகியோரின் இயல்பான தோற்றத்தை மனதில் வைத்து நான் எழுதிய கதைதான் « பட்டறிவு » அதில் சாரதி ஒரு துடியாட்டமான அடிதடியை விரும்புகின்ற இளைஞன். கௌதமும் சேர்ந்தால் இயல்பான நடிப்புத் தூக்கலாக இருக்கும் என்பதைப் பலரும் அறிந்ததே. சாரதியின் தந்தையாக ரகுநாதன் நடித்திருந்தார். எல்லோருமே அந்தப் படைப்பில் சிறப்பாக நடித்திருந்தனர். இரவு சாரதி நடித்து விட்டுச் சென்று விட்டார். காலையில் படைப்பு இணையங்களில் வெளிவந்து விட்டது. அந்தப் படைப்பின் முடிவில் சாரதிக்கு நேர்ந்ததுபோல், அவருடைய‌ உயிர் நண்பருக்கு நிஜத்தில் நேர்ந்த துயரத்தை சாரதி தொலைபேசியில் மனம் கனத்தவாறு கூறினார். அந்தப் படைப்பை என்னால் என்றுமே மறக்க முடியாது.

 

எனது வசனங்களை உள்வாங்கி, அதை அப்படியே இயல்பான தனது பேச்சுத் தமிழில் மாற்றிப் பேசி நடிக்கின்ற ஒரே ஒருவர் சாரதிதான்.

 

சாரதி ஒவ்வொரு படைப்பில் நடிப்பதற்கு வருகின்ற போதெல்லாம். அவருடைய துணைவியார் ஜெனிபர் அவர்களையும் அழைத்து வருவார். தனது அன்புக் கணவரின் நடிப்பைப் பார்த்து ரசிப்பதோடு, படப்பிடிப்பிற்கான உதவிகளிலும் அன்புத் தங்கை ஜெனிபர் பங்கெடுத்தது எல்லாம் இன்னும் எனது நினைவில் துளிர்த்தபடி இருக்கின்றன‌. சாரதியோடு இணைவதற்கான பல கதைகள் கையில் கனமாக இருக்கின்றன. நேரம் மட்டும் எங்கள் இணைவை விரும்பாது பகைத்துக் கொண்டிருக்கின்றது. இருந்த போதிலும், சாரதி என்ற சிறந்த கலைஞன், எனது கதையில் விரைவில் நடிப்பார் என்ற நம்பிக்கை பலமாகவே உள்ளது!

 

-பிரியமுடன்
கி.தீபன்