நான் ஒரு வளர் நிலைக் க‌லைஞனாக இவ்வளவு தூரம் பயணித்து வந்திருக்கின்றேன் என்றால்; அதற்குக் காரணமானவர் கலைஞர் காவலர் வண்ணை தெய்வம் அவர்கள்தான். என்னில் உரசி அவ்வப்போது அணைந்தன‌ பல கலைப்பொறிகள். அவற்றில் ஒன்று இவர் பார்வையில் பட்டதனால் தீபமாக‌ ஏற்றிவிட்டார்.

 

பிரான்சில் TTN தொலைக்காட்சி ஆரம்பித்து TRT வானொலி நிறுத்தப்படும் காலங்களில் « பிரசவக்களம் » என்று ஒரு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் பலரும் இணைந்து கவிதைகளைப் பாடுவார்கள். கோவை நந்தன் அவர்கள் அந்த நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்து இணையும் நேயர்களை வரவேற்பார். அந்த நிகழ்ச்சியில் பாடப்பட்ட கவிதைகளுக்கு கலைஞர் காவலர் வண்ணை தெய்வம் அவர்கள் கொடுத்த விமர்சனங்கள் பலரையும் தொடர்ந்து கவிதைகள் பாடுவதற்கு அழைத்தன என்றால் மிகையாகாது. « நினைத்தால் வருவதல்லக் கவிதை. மனம் கனத்தால் வருவதுதான் கவிதை! » என்ற வலம்புரியான் அவர்களின் வரிகளைக் கலைஞர் காவலர் வண்ணை தெய்வம் அவர்களின் குரலில் கேட்கின்ற போது உட்சாகம் பிறக்கும்!

 

எனக்கும் ஒரு நாள் அந்த நிகழ்ச்சியைக் கேட்பதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் கொடுத்த‌ « வசந்தம் » என்ற தலைப்பில் நானும் க‌விதை பாடினேன். அந்தக் கவிதைக்கு அவர் கொடுத்த விமர்சனம் தொடர்ந்து வாரா வாரம் கவிதைகளை எழுதிப் படிப்பதற்குத் தூண்டியது. அந்த நிகழ்ச்சிக்குரிய நாட்களில் எப்போது அந்த நிகழ்ச்சி ஆரம்பமாகும் என்று காத்திருப்பேன். ஆர்வத்தோடு கவிதைகளைப் பாடுவேன். என்னுடைய ஒவ்வொரு கவிதைகளுக்கும் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும் அளவிற்கு ஆரோக்கியமான விமர்சனங்களை வழங்கினார். அதற்காக ஈழத்து வாலி என்று நானே என்னைக் கூறுவதாகக் கருதிவிட‌ வேண்டாம். எனது உயரம் எனக்குத் தெரியும்.

 

சில‌ வாரங்களில் வானொலி நிறுத்தப் பட்டுவிட்டது. அந்த வானொலி நிறுத்தப்பட்டதால் நான் வருந்தவில்லை. கலைஞர் காவலரின் அரவணைப்புக் கிடைக்காமல் போனதால் மிகவும் வருந்தி வாடினேன். அவருடைய தொலைபேசி இலக்கங்களைப் பெற்று வானொலி நிறுத்தப் பட்டது தொடர்பாக விசாரித்தேன். அவர் மீதிருந்த பக்தியை வெட்கத்தோடு கூறினேன். நிகழ்ச்சியில் பங்கு பற்றிய பல நேயர்களில் என்னையும் ஒருவனாக நினைத்து மறந்திருப்பார். எனது வேருக்கு அவர் நீரூற்றியதால் நான் வள‌ர்ந்து கொண்டிருந்ததை அப்போது அவர் அறிந்திருக்கமாட்டார். அந்த ஆசானின் குரல் கேட்காத மௌனத்தோடு எனது நாட்கள் மெல்ல மெல்லக் கழிந்தன.

 

சில மாதங்களிலேயே எனக்கும் வானொலியில் பணியாற்றுகின்ற வாய்ப்புக் கிடைத்தது. அங்கேதான் கலையருவி கே.பி.லோகதாஸ் அவர்கள் அறிமுகமானார். பின் நாட்களில் கலையருவி கே.பி.லோகதாஸ் அவர்களால் பல கலைஞர்களும் அறிமுகமானார்கள். அப்படி மீண்டும் நேரில் அறிமுகமானவர்தான் கலைஞர் காவலர் வண்ணை தெய்வம் அவர்கள்.

 

தபு சங்கர், பா.விஜய், அறிவுமதி போன்ற கவிஞர்களின் காதல் கவிதைகளைப் படித்தேன். மிக எழிமையாகச் சில வரிகளில் மனதில் பதியும் வண்ணம் அந்தக் கவிதைகள் இருந்தன. எனக்கும் அப்படி எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதால் 100 கவிதைகளை எழுதி நூலாக்கினேன். « மனசெல்லாம் உன் வாசம் » என்ற நூலுக்கு அணிந்துரை எழுதுவதற்குத்தான் கலைஞர் காவலர் வண்ணை தெய்வம் அவர்களுடைய அருகில் சென்றேன்.

 

அவர் அணிந்துரை எழுதிக் கொடுத்ததோடு, எனது வீட்டுக்கு வந்து அந்தக் கவிதைகளுக்கான சரிபார்ப்புகளைச் செய்து. கவிதைகளை இந்தியாவில் உள்ள பதிப்பகத்திற்கு அனுப்பி நூலாக என்னிடம் கொடுத்தார். அவருடைய அனுபவத்திற்கு எனது கவிதைகள் குழந்தையின் கையெழுத்துப் போன்று இருந்திருக்கும். இருப்பினும், குழந்தைக் கவிஞர்களையும், கலைஞர்களையும் கரங்களால் பிடித்து அழைத்துச் செல்லும் அவருடைய உயரிய பண்பினால்த்தான்; என்னைப் போன்ற பலர் உருவாகியிருக்கின்றோம். அவருடைய அணிந்துரையுடன்தான் எனது இரண்டாவது நூலான‌ « இதயம் பேசும் கவிதைகள் » என்னும் நூலும் வெளிவந்திருக்கின்றது.

 

இவரைப் பெரும் கலைஞர் என்ற மரியாதையுடன் பார்த்த நான். பின் நாட்களில் குடும்பத்தில் ஒரு பிள்ளையாகிவிட்டேன். உரிமையுடன் அருகில் இருந்து பழகிய நாட்கள் இன்னும் நகராதது போலவே இருக்கின்றன. அன்பானவர், யார் மனதும் நோகும்படி நடந்து கொள்ள எண்ணாதவர். படிப்பும் – படைப்பும் நிறைய இருந்த போதிலும் கர்வம் இல்லாதவர். « காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக் கலைஞர்கள் » என்ற நூலின் மூலம் இறந்தவர்களையும் மீண்டும் உயிர்ப்பித்தவர். இருப்பால் அருகான கலைஞர்களை அரவணைப்பதிலும், இறப்பால் தூரம் சென்ற கலைஞர்களை மீண்டும் நினைத்து மதிப்பளிப்பதிலும் எப்போதும் விரும்பி முன் நிற்பவர்.

 

கலை உலகம் எனக்குத் தந்த தந்தை இவர். கவிஞர், எழுத்தாளர் என்று பலரும் இவரைப் பார்த்தாலும், நான் இவர் பிரசவித்த பல நூல்களையும், ஊடகங்களில் வெளிவந்த எழுத்துக்களையும் படித்தபோதிலும்; நேரில் பார்க்கின்ற போதெல்லாம் நடிகராகவே தெரிந்தார். இவர் நாடகங்களில் நடித்த கதைகளைச் சொல்ல நான் கேட்ட நாட்களும் உண்டு. மூத்த கலைஞர்களை எனது ஒரு படைப்பிலாவது நடிக்க வைத்துவிட வேண்டும் என்பது எனது பெருவிருப்பம். நான் இயக்கிய « காலாகாலம் » என்ற படைப்பில் கலைஞர் காவலர் நடித்தார். படைப்பு வெளி வந்ததை விடவும், அவர் நடித்ததால் நனடைந்த மகிழ்ச்சிதான் அதிகம்.

 

உடல் நலிவடைந்த போதிலும் இளமைத் துள்ளலோடு அவருடைய எழுத்துக்கள் தொடர்ந்தும் பத்திரிகைகள், சஞ்சிகைகள்? இணைய தளம் போன்றவற்றில் எல்லாம் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. அவற்றைப் பார்த்து எனது மனம் சந்தோஷத்துடன் துள்ளிக் குதிக்கின்றது. நான் இன்று ஓரளவுக்கேனும் எழுதுகின்றேன் என்றால், அதற்குக் காரணமானவர் இவர்தான். எனது எழுத்துக்களை எல்லாம் ஐயாவின் பாதங்களின் வைத்து மரியாதை செலுத்துகின்றேன்.

 

கலைஞர் காவலரின் உடல் ஆரோக்கியமும், கலை வடிவங்களும் இன்னும் பல்லாண்டுகள் நீண்டிருக்கப் படைத்தோன் அருள் புரிய வேண்டுகின்றேன்!

 

பிரியமுடன்
கி.தீபன்