ரகுநாதன் யாரண்ணா? அவர் எங்களுடைய வானொலிக் கலையகத்திற்கு வருவதாக அறிந்தேன். ஆனால், அவரை எனக்குத் தெரியாதே… என்றவுடன்; தினமும் காலையில் 10.00 மணியளவில் வந்து செல்வார். உனக்கு அவரை நன்கு தெரியும் என்று AS.ராஜா அவர்கள் கூறினார்.

 

ரகுநாதன் அவர்களைத் தெரியாத போது நான் அறிந்ததை ஒருவருக்குச் சொன்னதால்: பின்னர் மனம் வருந்தியதும் உண்டு. ரகசியங்களைக் காதுகளை அறிந்து ஓதவேண்டும் என்பது அப்போது எனக்குத் தெரியாது. எல்லோரையும் நம்புவதுதான் என்னுடைய பலவீனமாக இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது!

 

ஒரு நாள் காலை, TRT வானொலிக் கலையகத்தில் இருள் நிறத்து உடையில் வந்து வெளிச்சமாக ஒருவர் சிரித்தார். இவர்தான் நீ தேடிய ரகுநாதன் என்று AS.ராஜா அவர்கள் கூறினார். அருகில் வந்த ரகுநாதன் அவர்கள் அன்பாக நீண்ட நேரம் பேசினார். வானொலி நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிப் பழைய பாடல்கள் கேட்கின்ற ஆரம்பகால‌ நேயர் என்பதையும் அன்றுதான் தெரிந்து கொண்டேன்.

 

எனது குரல் வளத்தையும், நிகழ்ச்சிகளையும் பாராட்டினார். அப்போது « பாடிவரும் மேகம் » நிகழ்ச்சியை நான் ஆர்வத்துடன் நடத்தி வந்த காலம். அந்த நிகழ்ச்சியையும் புகழ்ந்தார். பாடுவீர்களா என்று கேட்டேன்? ஆம் என்று பதிலளித்தார். இரவு நிகழ்ச்சியில் இணைந்து பாடுங்கள் என்று உட்சாகப்படுத்தினேன். பாடினார்! அன்று நடைபெற்ற போட்டி நிகச்சியில் மூன்றாம் இடத்தைப் பெற்றார். ரகுநாதன் அவர்களின் பாட்டுப் பயணம் அன்றுதான் தொடங்கியது. இன்றும் வானொலியிலும், குடும்ப விழாக்களிலும் பாடிக்கொண்டுதான் இருக்கின்றார்.

 

நான் TRT வானொலியில் பணியாற்றிய காலங்களிலே இவருடன் நெருக்கமான உறவு இருந்தது. அப்போது, ரகுநாதன் அவர்களின் துணைவியார் கலா அவர்களுடன்தான் நான் அதிகம் பேசுவேன். தொலைபேசியில் அந்தச் சகோதரியுடன் பேச ஆரம்பித்தால் துண்டிக்க மனசு வராது. அதிகமான அன்பை வார்த்தைகளால் பெய்த அன்பான உள்ளம். அவரது கனிவான‌ பேச்சைக் கேட்கின்ற போதெல்லாம் எனது தாயார் என்னை அரவணைப்பது போன்று இருக்கும். இப்போது கூட அவர் நினைவுகளைப் பற்றியவாறு எனது எழுத்துக்கள் நகர்கின்ற போதெல்லாம் அந்த அமைதியான முகம் கண்ணில் தெரிகின்றது, கவலை தோய்ந்த அமைதியான பாசக் குரல் காதில் கேட்கின்றது. சகோதரி கலா தனது அன்புக் கணவர் ரகுநாதன் அவர்களுக்காகவே வாழ்வை நீட்டிக்கின்ற ஒரு இதயக் கோவில் என்பதையும் நன்கு அறிவேன்.

 

இந்த அன்பானவர்களின் ஊக்குவிப்போடு எனது வானொலிக் காலங்கள் மகிழ்ச்சியானதாக வளர்ந்தது. அன்று எனது குரலையும், பேச்சையும் நேசித்த பலர் இதயங்களைக் கொடுக்கவும் முன் வந்தனர். உணர்ச்சிகள் நிரம்பிய உடல் கூட்டில் வாழ்வதால் இதயங்களை நான் எப்போதும் வெறுப்பதில்லை. தீபனை நிறையப்பேர் காதலித்தார்கள் என்று இப்போதும் சிலர் குற்றம் சொல்கின்றார்களாம். என்னிடம் திறமையும், நல்ல குரல் வளமும் இருந்தது. பலர் என்னை நேசித்தார்கள். இனிப்பில்தான் சித்தெறும்புகள் மொய்க்கும். உங்கள் மீது இலையான்களும், கொசுக்களும் மொய்த்தால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. என்மீது அன்பு செலுத்திய எல்லோரையும் இப்போதும் நேசிக்கின்றேன்.

 

நான் பாசமானவர்களைப் பகைத்ததும், பகைவர்களை அதிகம் நேசித்ததும் அன்றைய காலங்களில்தான் அதிகம். ரகுநாதன் அவர்களோடும் சின்னதாக மனக்கசப்பு ஏற்பட்டது. அதனால், என்னை நேயர்கள் சிலருடன் சேர்ந்து எதிர்த்தார். எனது நிகழ்ச்சியில் பங்குபற்றுவதை நிறுத்தினார். என்னை வானொலியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று விரும்பினார். நானாக விலகி வரும்வரை அந்த ஊடகத்தில் சின்ன ராஜாவாகத்தான் இருந்தேன்.

 

ஊடகப்பணியை நிறுத்திக் கொண்டதன் பின்பு ரகுநாதன் அவர்களை நேரில் கண்டால் மட்டும் பேசிக் கொள்வேன். ஏனென்றால், அவர் என்னை அதிகம் நேசித்தவர் என்பதை நன்கு அறிவேன். அன்பில் கீறல் விழுந்தது. அந்தக் கோட்டில் கோபம் வந்து அமர்ந்தது. அந்த மனக் க‌சப்புகளுக்கான காரணம் ரகுநாதன் யார் என்று தெரியாத காலங்கள் என்பதைப் பின் நாட்களில் அவருக்கு விளங்கப் படுத்தியுள்ளேன்.

 

நான் குறும்படங்கள் எடுக்க ஆரம்பித்த காலங்களில் ரகுநாதன் அவர்களை அடிக்கடி நினைப்பதுண்டு. ஒரு நாள் எனது படைப்பு ஒன்றில் நடிப்பதற்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டேன். அன்பாக மறுத்தவர், பின்னர் எனது தொடர் முயற்சியால் சம்மதித்தார். ரகுநாதன் அவர்கள் நடித்த முதற்படம் « காலங்கள் காத்திருக்காது » மரியனிற் அவர்களுக்கு ஜோடியாகவும், சுரேசுக்கு தந்தையாகவும் நடித்தார். அந்தப் படைப்பின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தவர் இதுவரை எனது இயக்கத்தில் 23 படைப்புகளுக்கு மேல் நடித்துள்ளார்.

 

இவர் எனது படைப்புகளில் நடிப்பதை நான் மிகவும் விரும்புவேன். அழைக்கின்ற போதெல்லாம் கதை கேட்கமாட்டார், எனது வசனங்களை மாற்ற மாட்டார், நேரம் தவற மாட்டார். இடத்தேர்வு, போக்குவரத்து உதவி அத்தனையையும் முன் வந்து செய்து கொடுப்பார். நான் வேகமாகப் படைப்புகளை எடுத்தற்கான பெரும் பலம் ரகுநாதன் என்ற இந்தக் கலைஞர்தான். நான் எழுதிவிட்டு தூக்கிப்போட்ட கதைகள் கூட இவரால்தான் படைப்புகளாக வெளிவந்திருக்கின்றன. அவற்றில் முக்கியமானது « எங்கே போறது? » தற்போதைய TRT வானொலி இயக்குனர் தர்ஷன் அவர்கள் சுரேஷ் மூலம் கேட்டதற்கு இணங்கி நான் வானொலிக்கு எழுதிய நாடக‌ம்தான் « எங்கே போறது? » . அதைக் குறும்படமாகக் கொண்டு வந்த பெருமை கலைஞர் ரகுநாதன் அவர்களைத்தான் சாரும்!

 

இவர் எமது மண்ணையும், மக்களையும், விடுதலைக்காகப் போராடிய வீர மறவர்களையும் அதிகம் நேசிப்பவர். அதனால்தான் நாட்டுப்பற்றான கதைகளில் நடிப்பதை மிகவும் விரும்புவார். நேரிய கருத்தாக இருந்தால், எந்த எதிர் விளைவுகளுக்கும் அஞ்சாமல் என்னையும் உட்சாகப் படுத்தியவாறு நடிக்க முன்வருவார். இன்னும் நிறையப் படைப்புகளில் இவரோடு சேர்ந்து பயணிக்கவிருக்கின்றேன்.

 

இவற்றுக்கும் மேலாக, எனக்கு ஒரு துன்பம் என்று அறிந்தால் முதலில் வந்து வாசலில் நிற்பவரும், எனக்கு ஒரு ஆபத்து என்று அறிந்தால் முன்னால் வந்து நிற்பவரும் ரகுநாதன் அவர்கள்தான். எனது தந்தையார் மறைந்த போது மூன்று நாட்கள் என் அருகில் இருந்து கவலைகளைக் கழுவியதை என்றும் நான் மறக்க மாட்டேன். எனது ஏற்றங்களும், சந்தோஷங்களும் இவரைப் போன்ற நல்ல மனிதர்கள் கலைஞர்களாக அருகில் இருப்பதே.

 

அதிகமாக நேசிப்பவர்களை எழுதுகின்ற போது நிறைய விடையங்களை எழுத மறந்து விடுவோம். அதற்காகவே இன்னும் பல பக்கங்களை வெற்றிடமாக வைத்திருக்கின்றேன்!

 

பிரியமுடன்
கி.தீபன்