TRTதமிழ் ஒளி தொலைக்காட்சியில் பகலில் ஒளிபரப்பாகின்ற நிகழ்ச்சிகளை; இரவில் மறு ஒளிபரப்புச் செய்வதற்கு தொழில் நுட்பக் கலைஞர்கள் பெரும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இரவில் விழித்திருந்தால் பகலில் அந்தக் கலைஞர்களால் ஊடகப் பணிகளைத் தொடர்வது சிரமமாக இருக்கும் என்பதைப் புரிந்து கொண்ட‌ நிர்வாக இயக்குனர்; புத்திசாலித்தனமாக மூத்த கலைஞர் ஞானம் பீரிஸ் அவர்களிடம் இரவு நிகழ்ச்சிகளை மறு ஒலிபரப்புச் செய்யும் பொறுப்பை ஒப்படைத்திருந்தார்.

 

அந்தப் பணியினை அவர் தொடர்ந்து கொண்டிருந்த போதுதான் முதன் முதலில் பார்த்தேன். கலைஞர்கள் உடலால் வயோதிபம் அடைந்தாலும், மனசு இளமைத் துடிப்போடு எப்போதும் இருக்கும், இயங்கும் என்பதற்கு அடையாளமாக இவர் தூக்கம் தொலைத்து உழைத்த இரவுகள் மிகவும் நீண்டவை.

 

நாங்கள் நள்ளிரவைக் கடந்ததும் உறங்கி விடுவோம். இந்தப் பெரியவர் விடியும் வரையும் விழித்திருந்து தனது பணிகளை செம்மையாகச் செய்து முடித்தார்.

 

நான் ஆரம்ப நாட்களில் இவரோடு அதிகம் பேசுவதில்லை. திறமையுள்ள கலைஞர்கள் அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார்கள் என்பார்கள். அதற்கேற்றால் போல் மூத்த‌ கலைஞர் ஞானம் பீரிஸ் அவர்கள், இரவின் அமைதி போல் மனதாலும் அமைதி கொண்டவராக இருந்தார். பெரியவர்கள் கொஞ்சம் இறுக்கமானவர்களாக இருப்பார்கள். இவரைக் காண்கின்ற போதெல்லாம் அப்படித்தான் நினைத்துக் கொள்வேன்.

 

ஒரு நாள் தயக்கத்துடன் அருகில் சென்று உரையாடினேன். அபோதுதான் அந்த முதியவருக்குள் இருந்த குழந்தை மனதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அன்றில் இருந்து அவர் நண்பர்போல் பேச ஆரம்பித்து விட்டார். நள்ளிரவைக் கடந்தும் நீண்ட நேரம் விழித்திருந்து உரையாடுவோம். மூத்தவரின் நகைச்சுவைப் பேச்சு உறக்கத்தை நெருங்க விடாது.

 

இனிப்பான இரவு நேர உரையாடல்களின் போதுதான்; ஞானம் பீரிஸ் அவர்கள் ஐரோப்பாவில் முதன் முதலாகத் திரைப்படத்தை இயக்கிய பெருமைக்குரிய கலைஞர் என்பதை அறிந்து கொண்டேன்.

 

அவர் இயக்கிய « தனிப்புறா » என்ற திரைப்படத்தை என்னிடம் கொடுத்துப் பார்க்கச் சொன்னார். கலை பற்றிச் சரியான புரிதல் இல்லாத அந்தச் சிறிய வயதில், அந்தப் படைப்பைப் பார்த்து விட்டு நிறைவில்லாது சிரிக்கத்தான் முடிந்தது.

 

இன்று நானும் ஒரு வளர் நிலை இயக்குனரான பின்பு; அந்தப் படைப்பை நினைக்கின்ற போது பெருமையாக இருக்கின்றது. நம்மவர்கள் வசதி வாய்ப்புகளிலும், தொழில் நுட்பத்திலும் வளராத 25 ஆண்டுகளுக்கு முன்பே; அப்படியொரு படைப்பை உருவாக்கியிருக்கின்றார் என்றால்! அதற்காக அந்தக் கலைஞர் எப்படி எல்லாம் உழைத்திருப்பார்? எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்? இன்று நம்மவர்கள் நடிப்புத் துறையில் சாதிக்கின்றார்கள் என்றால், அதற்கான பாதையைத் திறந்து விட்ட மூத்த கலைஞர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்!

 

தனிப்புறா பார்த்து விட்டு கலையகத்திற்குச் சென்ற போது, அந்தப் படைப்புப் பற்றிய விமர்சனங்களைக் கேட்டார். அவர் மகிழ்ச்சி அடைகின்றவாறு சொன்னேன். அன்றில் இருந்து எனது நெஞ்சுக்குப் பக்கத்தில் வந்து விட்டார். கே.பி.லோகதாஸ் அவர்களுக்குப் பின்பு நான்தான் « இசையும் கதையும் » நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தேன். இரவு நேரங்களில்தான் அந்த நிகழ்ச்சியை நான் ஒலிப்பதிவு செய்வதுண்டு.

 

ஒரு நாள் அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த ஞானம் பீரிஸ் அவர்கள் « இசையும் கதையும் » ஒன்றை எழுதித் த‌ருவத‌ற்கு விரும்பம் தெரிவித்தார். நான் உடனே சந்தோஷ‌த்துடன் சம்மதித்தேன். இரண்டு நாட்களில் « ராசாத்தி » என்ற காதல் கதையை எழுதிக் கொடுத்தார். நள்ளிரவு ஒலிப்பதிவு செய்கின்ற போது அவரை அருகில் அழைத்தேன். சின்னச் சின்னப் பிழைகளை எல்லாம் திருத்த ஆரம்பித்து விட்டார். அந்தக் கதையில், ராசாத்தி ஆலயத்தில் நின்று பிரார்த்தனை செய்யும் போது அர்ச்சனைத் தட்டுக் கீழே விழுகின்றது. நான் கதையை வாசித்து ஒலிப்பதிவு செய்து கொண்டிருக்கும் போது ஒரு தட்டைச் சத்தமாகக் கீழே போட்டு விட்டார். திடுக்கிட்டு நிமிர்த்து பார்த்தேன். தட்டு விழுந்த ஒலி கிடைத்த மகிழ்ச்சியில் சிரித்தபடி நின்றார். 15 நிமிட இசையும் கதையும் நிகழ்ச்சியை ஒலிப்பதிவு செய்து முடிப்பதற்குக் காலை 5.00 மணியாகிவிட்டது. கதை ஒலிபரப்பாகியதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்!

 

பின்பு ஓரு நாள் நிகிலா மோகனதாஸ் அவர்கள் தொலைக்காட்சிக்கு ஒரு நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தார். நினைவு சரியாக இருந்தால்; அந்த நிகழ்ச்சி « தேன் கிண்ணம் » என்று நினைக்கின்றேன். நானும் யசோ அவர்களும் ஞானம் பீரிஸ் அவர்களிடம், நீங்கள்தான் அந்த நிகழ்ச்சியை மேற்பார்வை செய்ய வேண்டும் என்று நகைச்சுவைக்காகச் சொன்னோம்.

 

இயக்குனர் ஞானம் பீரிஸ் அவர்கள் ஆக்ஷன் சொன்னால்தான் நிகிலா மோகனதாஸ் அவர்கள் பேச ஆரம்பிக்க வேண்டும். கட்கட் என்று சொன்னால் நிறுத்த வேண்டும். தொகுப்பாளினி நிகிலா மோகனதாஸ் அவர்கள், நாங்கள் நகைச் சுவைக்காக அவரைத் தூண்டி விடுகின்றோம் என்பதைப் புரிந்தவராக; என்ன சொல்வதென்று தெரியாமல் சிரித்துக் கொண்டிருப்பார். அந்தச் சகோதரி பட்ட சங்கடத்தை பார்த்து நானும் யசோவும் சிரிப்போம். இதை எழுதும்போது கூடச் சிரிப்புத்தான் வருகின்றது. சில நிகழ்ச்சிகளை மட்டுமே அந்தச் சகோதரியால் தயாரித்து ஒளிப்பதிவு செய்ய முடிந்தது. ஏனோ தெரியவில்லை, அந்த நிகழ்ச்சியை அவரால் தொடர முடியவில்லை!

 

இப்படியாக ஞானம் பீரிஸ் அவர்களுடன் பல நாட்களை ஆனந்தமாகக் கழித்தேன். அவர் தந்த புதிய சந்தோஷமாக « அப்புகாமி » என்ற புதிய திரைப்படத்தை இயக்குவற்கு ஆயத்தம் ஆகியிருந்தார். அந்தத் திரைப் படத்திற்கான பாடலை எழுதி வாசித்துக் காட்டினார். கதைச் சுருக்கத்தையும் சொன்னார். திரைப்படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே ஊடகப் பணியில் இருந்து விலகிச் சென்று விட்டார்.

 

சில வருடங்களின் பின்பு லாசப்பல் பகுதியில் அவரைக் கண்டேன். திரைப்படத்தை இயக்க ஆரம்பித்து விட்டதாகக் கூறினார். ஒளிப்படம் ஒன்றையும் காட்டினார். உடலாரோக்கியம் இல்லாத படியால் வேகமாகத் தொடர முடியவில்லை என்று வருந்தினார். அவருடைய அந்தக் கனவுத் திரைப்படமான « அப்புகாமி » வெளிவருவதில் இறைவனுக்கு உடன்பாடில்லை என்று மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது!

 

-பிரியமுடன்
கி.தீபன்