நான் « உணர்வுகள் » என்ற முதலாவது படைப்பை இயக்குவதற்கு முற்பட்ட போது அதில் நடிப்பதற்கு ஒரு இளைஞர் தேவைப்பட்டார். நடிப்பதற்கு ஆர்வம் உள்ள இளைஞர்கள் யாராவது இருக்கின்றார்களா? என்று இந்திரன் அவர்களிடம் கேட்ட போது, தெரிந்தவர் ஒருவர் இருக்கின்றார் அவரை அனுப்பிவிடுகின்றேன் என்று கூறினார். அவருடைய தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்தார்.

 

நான் தொடர்பு கொண்டு பேசியபோது ஆர்வத்தோடு வந்து சேர்ந்தவர்தான் சுரேஷ். அவருடைய முகத்தில் இருந்த பயங்கரமான தாடியைப் பார்த்தவுடன் அவர்மீது எனக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்படவில்லை. இந்திரன் அவர்களிடம் தொடர்பு கொண்டு, அண்ணா நீங்கள் பிரச்சனைக்குரிய ஒருவரை அனுப்பிவிட்டீர்கள் போலிருக்கின்றதே என்று கேட்டேன். அவர் ஒரு முன்னாள் போராளி. தம்பி நீங்கள் ஒன்றுக்கும் பயப்படாதீர்கள் என்று இந்திரன் அவர்கள் கூறினார். அதன் பின்புதான் சுரேஷ் மீது எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

 

« உணர்வுகள் » என்ற ஒரு சிறிய படைப்பில் ஒரு காட்சியில்தான் நடிக்க வேண்டும். நடித்தால், பின்பு உங்களுக்கு வேறு படைப்புகளில் சந்தர்ப்பம் தருகின்றோம் என்று நானும், மரியனிற் அவர்களும் கூறினோம். சம்மதித்த சுரேஷ் ஒரு நிமிடக் காட்சியில் நடித்தார். அந்தச் சிறிய‌ படைப்பு வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றவுடன் மரியனிற் தொடர்பு கொண்டு சுரேஷ் அவர்களை வாழ்த்தி உட்சாகப்படுத்தினார்.

 

நடிப்பில் ஆர்வம் உள்ள கலைஞர்கள் பலர் இருந்தும், நான் அவர்களுக்கு அறிமுகமில்லாத போது அழைத்தால் யாரும் வரமாட்டார்கள் என்று நினைத்ததால், தொடர்ந்து இயக்கிய‌ படைப்புகளில் எல்லாம் சுரேஷ் அவர்களைத்தான் அழைத்தேன். அவரும் மிகுந்த ஆர்வத்துடன் நடித்து வந்தார்.

 

ஒரு சில படைப்புகளுக்குப் பின்பு சுபர்த்தனா குடும்பத்தில் ஒருவராகிவிட்டார். நடிப்பு அன்று அவருக்கு இன்னொரு வேலை போலிருந்தது. வாரத்தில் எப்படியும் இரண்டு நாட்கள் எதாவது ஒரு படைப்பில் நடிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தேன். குளிர், மழை எதையுமே நடிப்புக்குத் தடையானதாகக் கருதமாட்டார். மார்கழிக் குளிரில்கூட சாதாரண உடை அணிந்து நடுங்கியவாறு ந‌டித்திருக்கின்றார்.

 

சுரேஷ் ஆரம்ப நாட்களில் படப்பிடிப்புத் தளத்திற்கு வருகின்ற போது, வழியில் காண்கின்ற அறிமுகமானோர் எல்லோருடனும் கை குலுக்கிக் கதைத்து விட்டு 1 மணி நேரம் தாமதமாகத்தான் வருவார். அவருடைய அந்தத் தாமதம் எனக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து கொண்டு, பின் நாட்களில் நேரம் தவறாமையைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தார்.

 

எனது இயக்கத்தில் அதிகமான படைப்புகளில் நடித்தது சுரேஷ்தான். 40 படைப்புகளுக்கு மேல் நடித்திருப்பார் என்று நினைக்கின்றேன். அவற்றில் 30 படைப்புகளுக்கு மேல் முதன்மை பாத்திரத்தில் நடித்துப் பலருக்கும் அறிமுகமானார். மிகவும் சிறந்த கதைகளில் எல்லாம் நடித்திருக்கின்றார். அதிகமான படைப்புகளில் நடித்த போதும், இவரால் கதைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு நடிப்பதற்கு பக்குவப்படவில்லை என்ற விமர்சனங்களைப் பலரும் முன்வைத்த வண்ணம்தான் இருக்கின்றனர். நான்தான் அந்தப் படைப்புகள் எல்லாவற்றையும் இயக்கியிருக்கின்றேன் என்பதால், அந்த விமர்சனங்கள் உண்மையானவை என்பதை உணர்ந்து ஏற்றுக் கொள்கின்றேன்.

 

எனது படைப்புகளில் நாயகன் மட்டுமல்ல, எனது நேசத்திற்கு உரியவராக எப்போதும் அருகில் இருந்து வந்தார். எனக்கு கிடைக்கின்ற‌ ஓய்வு நேரங்களில் எல்லாம் இவரை நேரில் சந்தித்துக் கொள்வதற்கும், தொலை பேசியில் பேசுவதற்கும் மிகவும் விரும்புவேன். என்னுடைய தொலை பேசி அதிகம் சுமந்து வருகின்ற குரல் இவருடையதுதான். மணிக்கணக்கில் இவரும், நானும் சலிப்பின்றிப் பேசுவோம்.

 

நடிகனாக வலம் வந்து கொண்டு இருந்த சுரேஷ். அறிவிப்புத் துறையையும் விரும்பினார். பிரான்சில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ் ஒலி வானொலியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்தை சிலரிடம் தெரிவித்து விட்டு, அவர்கள் அழைத்துச் செல்வார்கள் என்று காத்திருந்த போது, தர்ஷன் அவர்களுடைய தொலைபேசி இலக்கத்தை கொடுத்தேன். அவருடன் பேசிவிட்டுப் போய் பணியாற்றும்படி கூறினேன். தற்போது அந்த ஊடகத்தில் பணியாற்றுகின்ற சுரேஷ், அந்த வானொலிக் கலைஞர்களுடைய குண இயல்புகளை எல்லாம் எனக்குக் கூறிய‌ போது சிரிப்பாக இருந்தது.

 

எனக்கு வானொலியில் பணியாற்றுகின்ற ஆர்வம் சிறிதும் இல்லாத போதும், « தர்ஷன் அண்ணா உங்களை வானொலிக் கலையகத்திற்கு வந்து நிகழ்ச்சி செய்யட்டாம். நீங்கள் வருவதற்கு விரும்பாது போனால், ஒரு நிகழ்ச்சியை என்றாலும் ஒலிப்பதிவு செய்து தரட்டாம் என்று சுரேஷ் தொடர்ச்சியாகக் கேட்டு வந்தார். » நான் தர்ஷன் போன்ற கலைஞர்களைப் பார்த்து அந்த ஊடகத்தில் வளர்ந்தவன் என்பதால் சம்மதித்து « கதை – கவிதை – கானம் » என்ற நிகழ்ச்சியை ஒலிப்பதிவு செய்து அனுப்பினேன். நான் மட்டும் அந்த நிகழ்ச்சியை நடத்த இயலும் என்ற போதிலும், பல குரல்கள் இணைவது நிகழ்ச்சிக்குச் சிறப்பாக இருக்கும் என்று கூறினேன்.

 

சுரேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நான் கவிதைகளைப் பாடினேன். தொகுப்பாளினி ஹேமா மிகச் சிறப்பாகக் கதைகளைப் படித்தார். கேட்பதற்கு நிகழ்ச்சி சிறப்பாகத்தான் இருந்தது. 7 வாரத்தோடு நிகழ்ச்சியை நிறுத்திவிட்டார்கள். அவர்களே கேட்டார்கள். அவர்களே நிறுத்திவிட்டார்கள். ஏன் நிறுத்தினார்கள் என்று கேட்டேன்? சுரேஷ் சொன்ன காரணங்கள் வேடிக்கையாக இருந்தன‌. அவற்றில் இன்றும் நான் நினைத்துச் சிரிப்பது என்னவென்றால்? என்னுடைய குரல் வானொலியில் ஒலிபரப்பாவது சகுனம் சரியில்லை. அதனால்தான் கணனி இடையில் செயலிழக்கின்றது என்பதனைப் புரிந்து கொண்ட தர்சன் அவர்கள், நிகழ்ச்சியை வேண்டாம் என்று கூறி விட்டதாகக் சொன்னார். தர்ஷன் அவர்கள் சகுனம் பார்ப்பாரா? சகுனம் பார்ப்பார் என்று சுரேஷ் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.

 

சுரேஷ் எனது நம்பிக்கைக்கு உரியவர் என்ற போதிலும், முகத்துக்கு நேர் உண்மையை உரத்து பேசுவதை இவர் எப்போதும் விரும்ப மாட்டார். உண்மை இறந்தாலும் பரவாயில்லை, யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதிலேயே அக்கறையுடன் இருப்பார். அதனால் தற்போது நான் இக்கரையில் இருக்கின்றேன்!

 

பிரியமுடன்
கி.தீபன்