நான் தாய் நிலத்து நிலவரங்களை அறிந்து கொள்ளவும், அங்கிருந்து வெளிவருகின்ற‌ கலைப் படைப்புகளைப் பார்த்து மகிழவும், பாரிஸ் « லூன் » வர்த்தக நிலையத்திற்கு முன்பெல்லாம் தினமும் செல்வதுண்டு. அப்படி ஒரு நாள் அங்கே சென்ற போது, கம்பீரமான குரலில் « அந்த ஆலமரம் » என்ற பாடல் ஒலித்தது.

 

அந்தப் பாடல் வரிகளுக்கு பொருத்தமாக புலவர் வீடியோவின் அழகான காட்சியமைப்பும், ஒரு பெரியவரின் சிறப்பான நடிப்பும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தப் பாடலில் வரிகளா?, குரலா?, இசையா?, காட்சிகளா?, நடிப்பா? சிறந்தவை என்று ஒன்றை மட்டும் குறிப்பிட முடியாதபடி அனைத்துமே சிறப்பாக இருந்தபடியால்தான் மிகப்பெரிய வரவேற்பு அந்தப் பாடலுக்குக் கிடைத்தது.

 

அந்தப் பாடலுக்காகவே அந்த ஒளிக்கீற்றை வாங்கினேன். திரும்பத் திரும்பப் பார்த்து, அந்தப் பாடலுக்கு மனதிலே இடம் கொடுத்தேன்.

 

இசை தில்லைச்சிவம், வரிகள் மணி நாகேஷ், பாடியவர் இந்திரன். யார் அந்த இந்திரன்? முகத்தைப் பார்க்க முடியவில்லை. தொடர்ந்தும் பல பாடல்களில் அவருடைய குரலைத்தான் கேட்க முடிந்தது.

 

நான் TRT வானொலியில் « உணர்வுகளின் சந்திப்பு » நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த போது, உள்ளே வந்து அமர்ந்த இந்திரன் அவர்கள் தன்னை அறிமுகம் செய்தார். எனக்கோ, அவரைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கலையகத்தில் இருந்தபடியே ஒரு பாடலை விரும்பிக் கேட்பதற்கு அனுமதித்தேன். « சுற்றி வளைத்தொரு முற்றுகைப் போரில் சிக்கித் த‌விக்குது ஈழம் » என்ற அவர் பாடிய பாடலையே விரும்பிக் கேட்டார். சில வரிகளைப் பாடச் சொல்லிக் கேட்டேன். அவர் சிறப்பாகப் பாடிக் கொண்டிருந்தார்.

 

குகநாதன் அவர்கள் உச்சத்தில் இருந்த காலங்களில் சில அடிமைகள் அவருக்குப் பின்னால் சுற்றிக் கொண்டிருப்பார்கள். அவருக்குப் பக்கத்தில் நிற்பதை அந்த அடிமைகள் பெருமையாக நினைப்பார்கள். அப்படி ஒரு அடிமை இந்திரன் அவர்கள் பாடிக் கொண்டிருந்த போது உள்ளே வந்து, பாடியவரை இடையில் நிறுத்தச் சொல்லிவிட்டு அவரை வெளியே தள்ளிவிட்டுக் கதவை சாத்தினார். திரும்பி உள்ளே வந்தவர் இந்திரன் அவர்களைப் பாடுவதற்கு அனுமதித்த என்னையும் கண்டித்தார். நான் அந்தச் சம்பவத்தால் மிகவும் வேதனை அடைந்தேன். இன்று பாடகர் இந்திரன் அவர்கள் உச்சத்தில் இருக்கின்றார். அகங்காரம் பிடித்தவர்களும், அந்த அடிமையும் ஆண்டவனின் தண்டனைக்கு ஆளாகிப் பலராலும் ஒதுக்கப்பட்டார்கள்.

 

அந்தத் துயரமான சம்பவத்திற்குப் பின்பு இந்திரன் அவர்களைக் கலை நிகழ்வுகளில் பார்க்க நேர்ந்தாலும் அவரோடு பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கலைச்சுடர் இணையத் த‌ளத்திற்காகக் கலைஞர்களை நேர்காணல் செய்வதற்குத் தீர்மானித்தோம். மரியனிற் இந்திரன் அவர்களை நேர்கணல் செய்வதற்கு என்னை அழைத்துச் சென்றார். அந்த நேர்காணலில் ஒரு சிறந்த கலைஞனாக தனது எண்ணங்களைப் பதிவு செய்தார். அதற்குப் பின்பும் அவருடன் அதிகம் பேசுவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

 

நானும் மரியனிற் அவர்களும் குழந்தை அர்த்தனாவுக்காக பாடல்கள் சிலவற்றிற்குக் காட்சி அமைத்து இணையத்தில் வெளியிட விரும்பினோம். « மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும் » என்ற பாடலைத் தெரிவு செய்தோம். அப்போது மரியனிற் அவர்கள்தான் கலைஞர்களைத் தெரிவு செய்வதுண்டு. பாடலில் குழந்தை அர்த்தனாவுடன், மேலும் சில குழந்தைகளும், தந்தையாக ஒருவரும் நடிக்க வேண்டும் என்று கூறினேன். யாரைக் கேட்கலாம்? என்று கேட்டபோது, இந்திரன் அவர்களைக் கேட்போம். அவர் வருவார் என்று மரியனிற் நம்பிக்கையோடு கூறினார். அவருடன் பேசிவிட்டு தொலைபேசி இலக்கங்களை என்னிடம் கொடுத்தார்.

 

நான் இந்திரன் அவர்களுடன் தொடர்பு கொண்டேன். அண்ணா ஒரு பாடலில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். நடிக்க முடியுமா? என்று தயக்கத்துடன் கேட்டேன். எங்கே?, எத்தனை மணிக்கு?, எத்தனை உடைகள் கொண்டு வர வேண்டும்?, என்று கேட்டார். அப்போது அனுபவமில்லாத நான் வேறு எந்தக் கலைஞரைக் கேட்டிருந்தாலும் சிரித்து விட்டு மறுத்திருப்பார்கள். ஆனால், இந்திரன் அவர்கள் கூறியது போல் வந்து சிறப்பாக நடித்துக் கொடுத்தார். அன்று தொழில் நுட்ப சாதனங்கள் உரிய முறையில் இல்லாத போதிலும், அந்தப் பாடலில் குழந்தை அர்த்தனா, இந்திரன், மரியனிற், குட்டிக் குழந்தைகளுடைய சிறப்பான நடிப்பு இன்றும் எனது மனதிலே இருந்து என்னைச் சந்தோஷப்படுத்துகின்றது.

 

அதன் பின்பு « மண்ணில் புதையும் விதையே » என்ற பாடலுக்கான காட்சிகளிலும் குழந்தை அர்த்தனா, மரியனிற் ஆர்த்தி ஆகியோருடன் இந்திரன் அவர்கள் நடித்தார். அந்தப் பாடலை லங்கா ஸ்ரீ இணையம் மூன்று நாட்களாக‌ முகப்பில் பதிவேற்றி பலரிடம் கொண்டு சென்றதால், கலைஞர் இந்திரன் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். என்னை எனது முதல் படைப்பில் தூக்கிவிட்டவர் என்பதாலும். நடிப்பதற்கு அழைக்கின்ற போதெல்லாம் மதித்து ஓடி வருகின்றவர் என்பதாலும். எனது மனதில் முதல் இருக்கை அவருக்கானதாகவே இருந்தது.

 

நான் குறும்படங்களை இயக்க ஆரம்பித்த போதும் அவரைத்தான் அழைத்தேன். « நேர்தல் » என்ற படைப்பில் கௌரவத் தோற்றத்திலும், « தீராத தாகம் » என்ற படைப்பில் முன்னால் போராளியின் தந்தையாக முக்கிய பாத்திரத்திலும், « திருப்பம் » என்ற படைப்பில் பார்வையை இழந்த ஒருவராகவும் நடிப்பால் முத்திரை பதித்திருந்தார்.

 

இந்திரன் அவர்கள் சிறந்த பாடகர் மட்டுமல்ல, பன்முக ஆளுமையுள்ள கலைஞர். பாடல்கள், நடிப்பு, கூத்துக் கலை போன்றவற்றில் திறமைகளை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்ததோடு, பறை வாத்திய இசையை எழுப்புவதிலும் வித்தகர் என்பதோடு நின்றுவிடாமல், ஆலய வழிபாட்டுப் பாடல்களையும் இறை பக்தியோடு பாடி வருகின்றார். இவர் இருக்கின்ற உயரத்தை அடைவதற்குப் பல மனக் காயங்களைப் பெற்றதனால், ஒரு கலைஞனாகத் தனது எண்ணங்களின் உயரத்திற்கு வேகமாகப் பயணிக்க வேண்டும் என்ற ஆவலுடன் கலைப் ப‌யணத்தைத் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றார். அண்மையில் பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் உயரிய விருதான « ஈழத்தமிழ்விழி » விருதினையும் இவருக்கு வழங்கிக் கெளரவித்துள்ளனர்!

 

-பிரியமுடன்
கி.தீபன்