TRT வானொலி என்னைக் கலைஞனாக மட்டும் வளர்த்து விடவில்லை. நல்ல நண்பர்கள் சிலரையும் தந்திருக்கின்றது. அப்படி அந்த வானொலி தந்த ஒரு நல்ல தோழிதான் விஜி ராஜேந்திரன் அவர்கள். எனது நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து சிறப்பிப்பார். எனது குரலை நேசித்த ஒரு தூய உள்ளம். பிரான்சில் இருந்து விஜி ராஜேந்திரன் பேசுகின்றேன் என்றவாறு இணைந்தவுடனேயே ஒலி அளவைக் குறைத்து விட்டுத்தான் இவரோடு உரையாடுவேன். அவ்வளவு சத்தமாக இருக்கும் இவருடைய பேச்சு!

 

கலைமீது அப்போதே இவருக்கு அதிக ஈடுபாடு இருந்தது. நிகழ்ச்சிகளில் பாடல்களை விரும்பிக் கேட்டு வந்தவர் பின் நாட்களில் « சமூக மேடை » நிகழ்ச்சியில் பேசுவதோடு கவிதையும் பாட ஆரம்பித்து விட்டார். எனக்குப் புரியாதவாறு கவிதை பாடுகின்ற ஒரே நேயர் இவர்தான். கவிதைகளில் ஆர்வம் உள்ள அளவுக்குத் தேடல் போதாது என்றுதான் சொல்ல வேண்டும்!

 

வானொலி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்ற நேயர்களில் சிலரை எப்படி என்றாலும் பாட வைத்துவிடுவேன். நான் கொடுத்த உற்சாக‌த்தால் விஜியும் எனது « பாடிவரும் மேகம் » நிகழ்ச்சியில் « நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது » என்ற பாடலைப் பாடினார். அவருடைய குரலில் அந்தப் பாடல் பட்ட பாடிருக்கே, அதை வார்த்தைகளில் வடித்து விட முடியாது. அவ்வளவு சோதனை அந்தப் பாடலுக்கு நேர்ந்தது. அன்றைய நிகழ்ச்சியில் இணைந்தவர்கள் சிறப்பாகப் பாடாதபடியால் மூன்றாவது இடம் விஜி ராஜேந்திரன் அவர்களுக்குக் கிடைத்தது. அடுத்த சுற்றில் சங்கீதப் பாடலைப் பாடவேண்டும். « அலை பாயுதே கண்ணா » என்ற பாடலோடு இணைந்து கொண்டார். அந்தப் பாடலைக் கேட்டபோது என்ன பாடுபட்டிருப்பேன் என்று ஜோசித்துப் பாருங்கள். நல்ல காலம், அதற்குப் பின்பு விஜி ராஜேந்திரன் அவர்கள் பாடலோடு மட்டும் இணைந்து கொள்வதில்லை!

 

வானொலி, தொலைக்காட்சிகளில் மட்டும் இவருடைய குரலைக் கேட்ட நான்; ஒரு நாள் வேலைக்குத் தொடரூர்தியில் சென்று கொண்டிருந்த போது மூன்று பெண்கள் சமையல், சாப்பாட்டுக் கதைகளைச் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். « போரும் சமாதானமும் » என்ற நூலை வாசித்துக் கொண்டிருந்த நான் நிமிர்ந்து பார்த்தேன். அதில் ஒருவர் விஜி ராஜேந்திரன் அவர்கள் என்பதனை அறிந்து கொண்டேன். ஒரே நேரம் வேலைக்குச் சென்றதால் தொடர்ந்து விஜி ராஜேந்திரன் அவர்களைச் சந்திக்க முடிந்தது.

 

ஒரு தடவை பனங்காய் பணியாரம் செய்து கொடுத்தார். கலையகத்தில் தொழில் நுட்பக் கலைஞர்களோடு பகிர்ந்து உண்டேன். நல்ல சுவையாக இருந்தது. பனம் பழத்தில் அல்ல, கரட்டில் செய்த பனங்காய் பணியாரம் என்று மறு நாள் கூறினார். இன்றும் அதை என்னால் நம்ப முடியவில்லை.

 

கலையருவி கே.பி.லோகதாஸ் அவர்கள் « பல்சுவை » நிகழ்ச்சி ஒன்றை வானொலியில் நடத்தினார். அந்த நிகழ்ச்சியில், நேயர்கள் பலதரப்பட்ட ரசனைகளைப் படைப்புகளாகச் சுமந்து வருவார்கள். விஜி ராஜேந்திரன் அவர்கள் கட்டுரைகளை வாசிப்பார். கே.பி.லோகதாஸ் அவர்கள்; தம்பி, அடுத்த நிகழ்ச்சியில் விஜி ராஜேந்திரனைச் சிறிய கட்டுரையோடு இணைந்து கொள்ளச் சொல்லு என்று கூறுவார். நான் விஜியிடம் அடுத்தவாரம் பெரிய கட்டுரையுடன் அண்ணன் எதிர்பார்க்கின்றார் என்று கூறுவேன். நாங்கள் தேனீர் தயாரித்துக் குடித்து முடித்தாலும், விஜி ராஜேந்திரன் அவர்கள் கட்டுரையை வாசித்து முடிக்க மாட்டார்.

 

நான் வானொலியில் அறிவிப்பாளராக இருந்த போது வார்த்தைக்கு வார்த்தை புகழ்ந்த பலர். அந்த ஊடகத்தில் இருந்து விலகிய பின்பு, மெதுவாக விலகிச் சென்று விட்டார்கள். விஜியிடம் இருந்து மட்டும் அதே நேசிப்புச் சிறிதும் குறையாமல் தொடர்ந்தது. விஜி எனது குரலை மட்டுமல்ல. எனது மனசையும், நட்பையும் நேசிக்கின்றார் என்று அப்போதுதான் புரிந்து கொண்டேன்.

 

வயோதிபக் குரலுடைய இவள்? மனதால் ஒரு குழந்தை! வஞ்சகம், சூது எதையும் அறியாதவள். பத்து வருட நட்பில், பத்து வார்த்தைகள் கூட எனது மனம் நோகப் பேசியிருக்கமாட்டாள். என்னைப் பற்றி என்னைவிடவும் அதிகம் அறிந்து கொண்டவளும் இவள்தான்.

 

எதையும் யோசிக்காமல் விஜியின் காதுகளில் ஓதிவிடுவேன். அவற்றைப் பத்திரமாக வைத்திருப்பாள். நான் சொன்னவற்றை எந்தச் சந்தர்ப்பங்களிலும், யார் காதுகளிலும் விதைத்தது கிடையாது. எனது அடி மனக் க‌னங்களை எல்லாம் தாங்குகின்றவள் இவள்தான். எனது நண்பர்களில், நான் மிகவும் விரும்புவதும், அதிகம் நம்புவதும் விஜியை மட்டும்தான். ஏனென்றால், இன்றுவரை எனக்குத் துரோகம் செய்துவிட ஆலம் விதையளவிலும் எண்ணாத மனசு இவளிடம் மட்டுமே உண்டு. எனது வாழ்க்கையின் எல்லைவரை தொடர வேண்டும் என்று நான் விரும்புவது இவளுடைய நட்பைத்தான்!

 

விஜிக்குக் குறும்படங்களில் நடிப்பதில் ஈடுபாடு இல்லாத போதிலும். பெண் நடிகைகள் குறைவாக இருப்பதால், நான் எப்போது கேட்டாலும் மறுக்காமல் நடித்து விட்டு சகோதரர்களின் கண்டனங்களைக் காதில் வாங்கிக் கொள்வார். விஜி தனது கணவரைக் கூட எனது படைப்பு ஒன்றில் நடிக்க வைத்திருக்கின்றார். நான் வாழ்க்கையிலும், கலையிலும் சறுக்கி விழுந்திடக் கூடாது என்ற அக்கறை உள்ள இதயம் இவரிடம் மட்டுமே இருக்கின்றது. கவிஞர் வைரமுத்து, நட்பு எப்படி இருக்க வேண்டும் என்று « சிற்பியே உன்னைச் செதுக்குகின்றேன் » என்ற நூலில் எழுதியதை விஜியிடம் பார்க்கின்றேன்.

 

எனது படைப்புகளில் நடிக்கின்ற போது அதிகம் திட்டு வாங்குவது விஜிதான். எப்படித்தான் திட்டினாலும் கோபத்தைப் புறந்தள்ளி விட்டுச் சிரித்துக் கொண்டிருக்க இவளால் எப்படி முடிகின்றதோ தெரியவில்லை. நடிக்க விரும்பாது, எனக்காக நடிக்க முன்வருகின்ற நேசிப்புக்குரியவளை திட்டக் கூடாது என்று நினைப்பேன். ஒரு சிறிய வசனத்தை 53 தடவைகள் பிழையாகப் பேசினால் எப்படி நான் பொறுத்துக் கொள்வது? எனது தோழி கோபப்பட மாட்டாள் என்ற நம்பிக்கையில் திட்டினேன்!

 

நான் விஜிக்கு நல்ல நண்பனாக மட்டும் இருந்து விடவில்லை. குடும்பத்திற்கு சொந்தமாகவும் ஆகிவிட்டேன். விஜியின் கணவர் அவளின் ந‌ல்ல மனசுக்குக் கிடைத்த பரிசு. அன்பானவர், பண்பானவர், எங்கே எப்போது என்னைக் கண்டாலும் பாசத்தைப் பரிசளித்துப் பேசும் மனம் படைத்தவர். இவர்களைப் பற்றி இன்னும் நிறைய எழுதலாம். நான் மீண்டும் சொல்லுகின்றேன். அதிகம் நேசிப்பவர்களை அதிகமாக எழுதுவதற்கு என்னால் இயல்வதில்லை! எனது நீண்ட நேசிப்பிற்குரிய இவர்களுக்காக, இன்னும் சில பக்கங்கள் காத்திருக்கின்றன!

 

பிரியமுடன்
கி.தீபன்