நான் திருக்குறளையும், பாரதியார் கவிதைகளையும் படிக்கின்ற போதெல்லாம் நினைவுக்கு வருபவர் கவிதாயினி லினோதினி சண்முகநாதன் அவர்கள். எந்த மேடையில் பேசினாலும்; திருவள்ளுவர், பாரதியார் போன்ற‌ முப்பாட்டன்களின் பிரசவிப்புகளை ஞாபகப்படுத்தியே உரை நீண்டு செல்லும். முற்றுப் புள்ளியிடுகின்ற இடங்களில் எல்லாம் புன்னகை பூக்கும்.

 

முதலில் எழுத வேண்டிய ஒருவரின் நினைவுகளை தொடர் நிறைவை அண்மிக்கும் போது ஏன் எழுதுகின்றேன் என்றால்? இவர் தமிழால் நிறைந்திருக்கின்ற படியால். இரண்டு வரிகளை எழுதத் தெரிந்தால் தங்களைத் தாங்களே கவிதாயினி’கள் என்று போற்றிப் புகளும் இந்தக் காலத்தில், கவிதாயினி என்று நாங்கள் அழைக்கின்ற போதெல்லாம் செவிகளைச் சென்றடையாதது போல் இருந்து கொள்ள எப்படி இவரால் முடிகின்றதோ தெரியவில்லை.

 

கவிதாயினி லினோதினி சண்முகநாதன் அவர்களை பிரான்ஸ் கம்பன் கழக மேடையில்தான் முதன் முதலில் பார்த்தேன். கம்பன் கழகமேடையில் அன்றுதான் இவருடைய முதலாவது கவிதை அரங்கேற்றம் என்று நினைக்கின்றேன். தயக்கத்தோடு மேடையேறி, தாராளமாகத் தமிழைப் பொழிந்து, பாராட்டு மழையில் எதிரே அமர்ந்திருந்த கணவர் சண்முக‌நாதன் (ஸ்டார் சிறி இசையமைப்பாளர்) அவர்களைப் பார்த்தபடி நாணத்தோடு புன்னகைத்தபடி இருந்தார். மனைவியின் கவியாளுமையை கணவர் சண்முக‌நாதன் அவர்களும் எதிர்ப் புன்னகையால் ஆமோதித்து மகிழ்ந்தார்.

 

ஒரு வருட மறைவுக்குப் பின்பு கம்பன் கழகமேடையில் கவிபடிக்கும் போது மீண்டும் கவிதாயினியைக் கண்டேன். அன்றுதான் சிறிது நேரம் பேசினேன். இணையத் தளத்தில் பதிவு செய்வதற்குக் கவிதைகள் அனுப்பும்படி கூறினேன். மறுக்காமல் சம்மதித்தவர் கவிதைகளை மின்னஞ்சலில் அனுப்பிவிட்டு சிறிது நேரம் மட்டுமே தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடுவார்.

 

இவ்வாறு ஆரம்பித்ததுதான் கவிதாயினி சண்முகநாதன் அவர்களுடனான நட்பு. நட்பு என்று சொல்வது தப்பு. ஏனென்றால், நாட்கள் செல்லச் செல்ல ஒரு சகோதரியின் அதீத அன்பை என்மீது செலுத்தி வந்தார். இவர் பலராலும் அறியப்பட்டவர் என்ற போதிலும். அறிமுக உறவுகளின் எல்லைகள் மிகவும் குறுகி இருப்பதையே விரும்பினார். அந்தக் குறுகலுக்குள் நானும் ஒருவனாக இருந்து கொண்டேன். ஒரு தடவை கணவர் சண்முகநாதன் அவர்கள் தனது துணைவியார் விரும்பிப் பேசுகின்ற நால்வரில் என்னையும் குறிப்பிட்டது மகிழ்ச்சியாக இருந்தது.

 

கவிதாயினி லினோதினி சண்முக‌நாதன் அவர்களைக் கவிதைகள், கலை சார்ந்த விடையங்களுக்காக அவரது இல்லத்தில் பல தடவைகள் சந்தித்துப் பேசி மகிழ்ந்திருக்கின்றேன். அதிகமாகப் பேசுவது தொலை பேசியில்தான். இருவரில் யார் தொடர்பு கொண்டாலும் பத்து நிமிடங்களுக்கு குறைவாகப் பேசியதே இல்லை. அன்பானவர், பண்பானவர், உண்மைத்தன்மை நிறைந்தவர். யாருடைய மனதிலும் கீறி விளையாட விரும்பாதவர். ஆதலால் அவருடனான உரையாடல் எனக்குத் தேவையாக இருந்தது.

 

கவிதாயினி லினோதினி சண்முகநாதன், மூத்த எழுத்தாளர் தமிழ்ப்பிரியா இருவரும் தொடர்பு கொண்டு பேசினால் அன்று முளுவதும் மனசெல்லாம் சந்தோஷ‌ம் பூத்துக் குலுங்கும். என்னைச் செதுக்குவதில் இருவரும் அக்கறை கொண்டவர்கள். கவிதாயினி லினோதினி சண்முகநாதன் அவர்கள் எழுத்து, படிப்பு போன்றவற்றையும்; நான் என்னுடைய கலைப் படைப்புகள் போன்றவற்றையுமே எப்போதும் அதிகம் பேசுவோம். என்னுடைய கவலைகளை, இரகசியங்களை எல்லாம் விரும்பிச் சொல்லுகின்ற நம்பிக்கையான செவிகளும் இவரிடம் இருந்தன.

 

கவிதாயினியின் இலக்கியப் பேச்சுக்களும், கவிதைகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் ஆளுமை மிக்கவர்கள் பங்குபற்றும் கம்பன் கழக மேடைகளில் எல்லாம் இவருடைய தமிழ் ஓங்கி ஒலிக்கின்ற போது மகிழ்ச்சியாக இருக்கும். எழுத்து, பேச்சு இவற்றுக்கு அப்பால் இவர் ஒரு சிறந்த பாடகி. சினிமாப் பாடல்களை மட்டுமல்ல, தானே பாடல்களையும் இயற்றிக் கணவரின் இசையில் பாடியுள்ளார். Ttn.தொலைக்காட்சியில் நெறியாளராகவும் பணியாற்றியுள்ளார். மாவீரர் நாள் நிகழ்ச்சிகளின் போதும் மேடை நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கியுள்ளார்.

 

ஒரு பாடலைப் பாடி அதற்கேற்ப பலரும் அபிநயம் செய்ததை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். கவிதை பாடி அதற்குப் பொருந்தக் கவிதாயினி லினோதினி சண்முகநாதன் அவர்கள் ஆபிநயம் செய்ததை நான் பார்த்து வியந்தபடி ஒளிப்பதிவு செய்து வைத்திருக்கின்றேன். நடிப்புத் துறையில் கால்பதித்தால் அவற்றிலும் சாதனைகள்தான்.

 

கவிதாயினி லினோதினி சண்முகநாதன் அவர்கள் சில வருடங்களுக்கு முன்பு இரண்டு கவிதை நூல்களையும், பாடல்கள் அடங்கிய இறுவெட்டினையும் வெளியிட்டுள்ளார். அந்த நிகழ்வில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நான் காதல் குறுங்கவிதைகளை எழுதுகின்ற போது சிலர் அதைப்பார்த்து விட்டுக் கேலிச்சித்திரம் வரைவார்கள். கவிதாயினி லினோதினி சண்முகநாதன் அவர்கள் எழுதிய « ஆத்மாவின் இராகங்கள் » என்னும் நூல் முற்றிலும் காதலைப் பாடுகின்ற குறுங்கவிதைகளே அடங்கியுள்ளன. அதனால் என்னை நோக்கி வருகின்ற கேலிச்சித்திரங்களை எல்லாம் நான் கிழித்துப் போட்டுச் சிரிப்பதுண்டு.

 

இழகிய மனம் படைத்த கவிதாயினியின் பக்கத்தில் நின்று யாராவது கண்கலங்கினால் போதும். கொடுக்கப் பையில் பணம் இல்லாது போனல், கையில் இருப்பதைக் கழட்டிக் கொடுத்து விடுவார். உண்மை சம்பவங்களைத் தளுவி எடுத்த « உருவம் » என்றொரு குறும்படத்தை 14-01-2015 அன்று வெளியிட்டிருந்தேன். அவற்றில் பல சம்பவங்கள் கவிதாயினி லினோதினி அவர்களுக்கு நேர்ந்தவையே.

 

கவிதாயினி லினோதினி சண்முகநாதன் அவர்கள் மூத்த கலைஞர் ஒருவர் கீறிக் கிழித்து விளையாடிய இரண்டு மனங்களை ஒட்டி அழகு பார்த்தவர். என் சந்தோஷங்களுக்கு வித்திட்டவர். நான் முன்னேற வழி காட்டியவர். நான் எழுதிய « இதயம் பேசும் » கவிதைகள் என்னும் நூலுக்கு முன்னுரை எழுதிக் கொடுத்தவர். சோகங்களை ஒழித்து வைத்து எப்படிப் புன்னகைப்பது என்று கற்றுத் தந்தவர். நான் நினைக்கின்ற போதெல்லாம் முன்னுதாரணங்க‌ளாக இருப்பவர். நான் கதைத்தாலும், நினைத்தாலும் ஒரு மூத்த சகோதரியின் அன்பைக் கவிதைத் தமிழில் என்மீது பொழியும் உடன்பிறவாதவளை நினைத்து நகர்ந்த இத்தனை எழுத்துக்களும் பெருமைக்குரியவையே. இன்னும் நிறைய உண்டு. நூலில் கோர்த்து எழுதுவேன்!

 

-பிரியமுடன்
கி.தீபன்