ஒரு நூலுக்குள் அடக்க வேண்டிய பல்கலை வேந்தர் வி.ரி.இளங்கோவன் அவர்களின் முளுமையான வாழ்வைச் சில பக்கங்களுக்குள் உள்ளடக்கிவிட முடியாது. ஆகவே அவற்றிற்கு அப்பால் நின்று, அவர் பக்கம் நான் நின்ற நினைவுகளை மட்டுமே இங்கே பதிவு செய்ய முயல்கின்றேன்.

 

நிறைந்த அறிவை தன்னகத்தே கொண்டிருந்த போதும்; ஒரு குழந்தையாகவே என் அகம் நிறைந்தவர். நிறைகுடம் தழும்பாது என்பதற்கு மிகவும் பொருத்தமானவர்.

 

சமகாலத் தோழர்களை எவ்வாறு கனம் பண்ணுவாரோ? அவ்வாறே இளையோரை மதிக்கும் பண்பாளர். மூத்த கலைஞர்கள் பலரை அறிமுகம் செய்து என் இரு விழிகளுக்குள் நிறைத்த கலையருவி கே.பி.லோகதாஸ் அவர்கள் மூலம்தான் இவருடைய அறிமுகமும் கிடைத்தது. அன்றில் இருந்து இளம் தோற்றம் உடையவராக இருந்த போதிலும், கற்றாய்ந்தறிந்த அறிவு முதிர்ச்சியால் ஐயாவாகிவிட்டார் எனக்கு.

 

நான் எங்கே அவரைக் கண்டாலும் ஐயா என்றுதான் அழைப்பேன். அவரும் இரு கரங்களில் இருக்கும் சுமைகளையும் பொருட்படுத்தாமல் ஓரமாக என்னை அழைத்து நேசமாகப் பேசுவார். அவரது மிடுக்கான தோற்றமும், கள்ளமில்லாப் புன்னகையும், நான் இமைமூடா நேரங்களில் கண்முன்னே வந்து போகின்றன.

 

இன்று இயற்கை உணவுகளை உலகம் எப்படிக் கொண்டாடுகின்றதோ! அவ்வாறு இலக்கியர்களாலும், கலைஞர்களாலும் கொண்டாடப் படுகின்ற பல்கலை வேந்தர் என்பதற்கு அப்பால்; இவர் ஒரு இயற்கை வைத்தியர்.

 

எனக்குப் பல்கலை வேந்தருடைய அறிமுகம் கிடைத்த பின் நாட்களில் பாரிஸ் அறிவாலயம் புத்தகசாலையில்தான் அதிகமாகச் சந்திப்பதுண்டு. நான் அப்போது அதிகம் அறிமுகம் இல்லாத போதிலும், சிறியவனாக இருந்த போதிலும் முளுமையாக இமை திறந்து பார்த்துப் பேசுவார். நல்ல விடையங்களைச் செவிவழியே உட்புகுத்துவார்.

 

எனக்குத் தெரிந்து இவர் பணம் பொருளைத் தேடிச் செல்பவர் கிடையாது. சிறந்த நூல்களைத் தேடி வாங்குபவர். வாசிப்பையே தன் சுவாசமாகக் கொண்டதால்தான், கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள், மருத்துவம் என; மிக நீண்ட குழந்தைக‌ள் முதல்க் கலைஞர்கள் வரை மனம் கவரும் படைப்புகளைப் பிரசவித்துப் பலர் மனதில் உயர்ந்து நிற்கின்றார்.

 

புலம் பெயர் நாடுகளில் வாழும் கவிஞர்களில் மரபுக் க‌விதைகளை அதற்குரிய சந்தத்தோடு எழுதிப் பாடக்கூடிய கவிஞர்களில் இவரும் முன்வரிசைக்குரியவர். பிரான்சில் நடைபெறும் நூல் வெளியீடுகளுக்கு ஐயாவைத்தான் பலரும் விரும்பி அழைப்பதுண்டு.

 

மேடையில் இவருடைய இலக்கியப் பேச்சுக்கள் போலவே, நேரிலே இவருடைய நகைச்சுவைப் பேச்சுக்களும் சுவை மிக்கவை. நான் அவற்றைப் பல தடவைகள் அனுபவித்திருக்கின்றேன். ஒரு நாள் என்னையும், கலையருவி கே.பி.லோகதாஸ், வண்ணை தெய்வம் மூவரையும் தனது மனைக்கு அழைத்து, பலவகை உணவுகளைச் சமைத்துப் பரிமாறி, காலை முதல் மாலைவரை அன்பொழுகப் பேசியது இன்னும் நெஞ்சோரத்தில் ஈரமாகவே உள்ளது.

 

மறைந்த கவிஞர் சிவலிங்கம் சிவபாலன் அவர்களுடைய நூல் வெளியீடு முடிந்த பின்பு, அரியம் ஆசிரியர் அவர்களின் இல்லத்திற்கு அருகில் நின்று கலைஞர்கள் பேசிக்கொண்டிருந்த போது, ஐயாவின் உள்ளத்தில் இருந்து வந்த வார்த்தைகளும், அப்போது நான் எடுத்த ஒளிப்படங்களும் இப்போதும் என்னைச் சிரிக்க வைக்கின்றன.

 

நான் இவரை அதிகமாக நினைப்பதுண்டு. இவர் எழுதிய நூல்களும், இவருடைய நூல் வெளியீட்டு விழாக்களுக்கு நான் எடுத்த ஒளிப்படங்களும் எப்போதும் என் கண் முன்னே காட்சி தருகின்றதால்.

 

ஐயா அவர்கள் தன்னுடைய‌ நூல் வெளியீடு சிலவற்றிற்கு ஒளிப்படம் எடுப்பதற்கு என்னை அழைப்பதுண்டு. படைப்புகளைப் போலவே ஒளிப்படங்களையும் பாதுகாத்து வைத்திருக்க விரும்புவார்.

 

ஒரு முறை இணையத் த‌ளத்திற்கான நேர்காணலுக்கு ஐயாவை அழைத்திருந்தேன். தனது படைப்புகள் அனைத்தையும் சுமந்தபடி வருகை தந்தார். இவரைப் போன்று சாதித்தவர்களிடம், பேச்சாற்றல் நிறைந்த‌வர்களிடம் தந்தி தொலைக்காட்சி ரங்கராஜ் பாண்டே போன்று பதில்களைச் சுருக்குகின்ற துணைக் கேள்விகளைக் கேட்பதற்கு நெறியாளர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

 

எனது நெறியாளர் ஊடகத் துறையில் அறிமுகம் என்பதால் கேள்வியைத் தொடுத்து விட்டு ஐயா பதில் உரைத்து முடியும் வரை தலையசைத்தபடியே இருந்தார். இரண்டு மணி நேரத்தைக் கடந்து நேர்காணல் செல்கின்றது. அந்த‌ நேர்காணலை நிறைவுக்குக் கொண்டு வருவதற்கு நான் பட்ட கஷ்டத்தை போல் வேறெதையும் அனுபவிக்கவில்லை. நேர்காணல் முடிந்து நெறியாளரும் ஐயாவும் என்னுடைய வீட்டில் தங்கினார்கள். விடியும்வரை உறக்கம் தொலைத்து ஆனந்தமாக ஐயா உரையாடியவாறு இருந்து, முதல் தொடரூர்தியில் தனது இல்லத்திற்குச் சென்றார்.

 

பல்கலை வேந்தருடைய நினைவலைகள் மிக நீண்டவை, ஐயாவின் முகநூலில் அண்மையில் ஒரு பதிவைப் பார்த்தேன்.

 

« மிக விரைவில் இருப்பிடம் மாறவுள்ளதால், எனது சேகரிப்பிலுள்ள அரிய பல நூல்களைத் தேவையானோருக்கு மிகக் குறைந்த விலையில் கொடுக்க எண்ணியுள்ளேன். உங்கள் பிள்ளைகளின் பிறந்தநாள் மற்றும் விசேடங்களின்போது பரிசளிக்கத்தக்க சிறுவர் நூல்களும் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம்..! விரும்பியோர் உள்பெட்டியில் தொடர்பு கொள்ளவும்..! »

 

இந்தப் பதிவு எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. இவர், இயற்கை உணவுகளையும், நூல்களையும் தேரிவு செய்து வாங்கி அவற்றைச் சுமந்து சென்றதை லாசப்பல் வீதிகளில் நான் பார்த்திருக்கின்றேன். இவ்விரண்டையும் சுமக்க முடியாது சுமந்து சென்ற போது ஒரு நாள் நானும் உதவியிருக்கின்றேன்.

 

இவர் அதிகம் வசதி படைத்தவர் இல்லாத போதிலும் நூல்களுக்குச் செலவளிக்கப் பின் நிற்பதில்லை. அறிவாலயம் புத்தகசாலையில் ஜெயகாந்தன் அவர்களின் நூல்கள் பலவற்றை முடிந்தளவு விலை குறைத்து வாங்கியது எனது நினைவில் இருந்து அழிய முன்பு; இப்படியான ஒரு பதிவு என் கண்களைக் கசியவைத்தது.

 

இந்தப் புலம் பெயர் வாழ்வு ஒரு மனிதனின் முதுமையில்; பிரியத்திற்குரியவற்றில் இருந்து எவ்வாறு அவரை விடுபடச் செய்கின்றது என்பதற்கு இது போன்ற உதாரணங்கள் பல உண்டு.

 

பல்கலை வேந்தர் வி.ரி.இளங்கோவன் ஐயா அவர்கள் சிறந்த எழுத்தாளர், பேச்சாளார் என்பது நான் கண்ணுற்ற நிஜம். அவர் சிறந்த நடிகர் என்பதையும் அறிந்திருக்கின்றேன். எனது படைப்பு ஒன்றின் மூலம் அந்தைச் சந்தோசத்தை நான் அடைவதை ஐயா விரும்புவார் என்று நம்புகின்றேன்.

 

ஐயா, பல்கலை வேந்தருக்கு இன்னும் பல்லாண்டு காலம் நோயற்ற சுக வாழ்வை இறைவன் அருளப் பிரார்த்திக்கின்றேன்!

 

-பிரியமுடன்
கி.தீபன்