கலைஞர் சுதர்சனிடம் அன்பைக் கொடுத்தால் அடங்கிப் போவார். வம்பைக் கொடுத்தால் எரிமலையாகி வெடிப்பார். கலைஞர் சுதர்சனை நான் முதன் முதலில் பார்த்தது TRT வானொலிக் கலையகத்தில்தான். அறிவிப்புத் துறையில் ஆர்வம் உள்ள இளைஞர் ஒருவர் இன்று வரவிருக்கின்றார் என்று நிர்வாகத்தினர் கூறினார்கள். காத்திருந்தோம் சுதர்சன் வருகை தந்தார்.

 

சுதர்சனின் குரல் வளத்தை மூத்த அறிவிப்பாளர் AS.ராஜா அவர்கள் பரிசோதனை செய்தார். விளம்பரம் ஒன்றையும், செய்தியையும் அவருடைய குரலில் பதிவு செய்யும்படி கூறிவிட்டு பார்த்துக் கொண்டிருந்தார். நான் ஒலிப்பதிவு செய்தேன். இனிமையான குரலில் மொழியாளுமையும் சேர்ந்து வெளிவந்தது. அவற்றைக் கேட்டதும் சிறப்பாக இருக்கின்றது என்று நான் கூறினேன். அப்படிக் கூறக்கூடாது என்று அருகில் இருந்த AS. ராஜா அவர்கள் என்னுடன் சினந்து கொண்டார். பின்னர், குரல் பதிவுகளை இயக்குனர் கேட்டதன் பின்புதான் முடிவெடுக்கப்படும். அவருக்குப் பிடித்திருந்தால் உங்களை அழைப்போம் என்று பக்குவமாகக் கூறி சுதர்சனை அனுப்பி வைத்தார்கள்.

 

வானொலிக்கு ஏற்ற குரல், தொலைக்காட்சிக்கு ஏற்ற முகம், பழகுவதற்கு ஏற்ற அகம் அவரிடம் இருந்தது. தாயகத்தில் இருந்த காலங்களில் பன்னிரண்டு வயதில் கலைப்பயணத்தை ஆரம்பித்தார் சுதர்சன். தேசம் சார்ந்த கலைப்படைப்புகளை நேசித்த இந்தக் குழந்தைக் கலைஞன் விரும்பி வளர்ந்த இடமும் அவ்வாறே இருந்தது.

 

குரல் வளம், மொழியாளுமை எதுவுமே இல்லாதவர்கள் அப்போது எங்கள் ஊடகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, வளர் நிலையிலேயே சிறந்திருந்த ஒரு கலைஞனின் கலையார்வத்தை மூத்தவர் என் கண் முன்னாலேயே முளையிலே கிள்ளி எறிந்ததைக் கண்டபோது வேதனையாக இருந்தது. அறிவிப்பாளர்கள் தேவை என்று விளம்பரங்கள் செய்வார்கள். திறமையுள்ள இளம் கலைஞர்கள் வந்தால் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள். இன்றுவரை பல ஊடகங்களில் மூத்த கலைஞர்களின் கதவடைப்புகள் இவ்வாறே தொடர்ந்தபடி இருக்கின்றன.

 

TRT வானொலி மூத்த கலைஞர் கதவு சாத்தி அனுப்பிவிட, ABC வானொலிக் கலைஞர்கள் கதவு திறந்து வரவேற்றார்கள் சுதர்சனை. அவர் அங்கே பணியாற்ற ஆரம்பித்தபோதே அவர் திறமைகளை இனங்கண்ட நிர்வாகத்தினர்; கவிஞர்கள் சங்கமம், இரவின் மடியில், சூரிய உதயம், நேயர்கள் விருப்பம், புதுப்பாடல், போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகின்ற சந்தர்ப்பத்தைக் கொடுத்ததுடன், செய்திகளை வாசிப்பதற்கும் வாய்ப்பளித்து மேலும் வளர்த்து விட்டார்கள்.

 

வானொலியில் சுதர்சன் தொகுத்து வழங்கிய கவிஞர்கள் சங்கமம் நிகழ்ச்சி பலராலும் பாராட்டப்பட்டது. இவருடைய குரல் கவர்ச்சியாலும், காத்திரமான நிகழ்ச்சிகளாலும் ரசிகர்கள் கூட்டம் அலையலையாகத் திரண்டு வந்தனர். சுதர்சனின் நிகழ்ச்சிகளில் பங்கு பற்றுவதற்குத் தொலைபேசி இணைப்பை ஏற்படுத்துவது மிகச்சிரமமாக இருக்கும் என்பதை அவருடைய ரசிகர் ஒருவர் கூறிப் பின் நாட்களில் தெரிந்து கொண்டேன்.

 

வானொலியில் தன்னைச் சிறந்த கலைஞராக நிரூபித்த பின்னர், சுதர்சனின் அடுத்த பாய்ச்சல் புலம் பெயர் தமிழர்களால் தேசியத் தொலைக்காட்சியாகக் கொண்டாடிய Ttn. தொலைக்காட்சி நோக்கி இருந்தது. அங்கேயும் சுதர்சனின் கலையார்வம் பிரகாசித்துக் கொண்டுதான் இருந்தது. « சித்திரம் பேசுதடி » என்னும் கவிதை நிகழ்ச்சியில் சுதர்சனின் கவிதைகள் பலருடைய கவனத்தைப் பெற்றன. « திசைகள் எத்தனை » என்னும் நிகச்சியில் நடிகராகவும், வேறு பல நிகழ்ச்சிகளுக்கும், செய்திகளுக்கும் பின்னணிக் குரல் கொடுத்து வந்ததோடு; தொலைக்காட்சி பார்ப்பதற்கான சந்தா அட்டை வியாபாரப் பணிகளையும் தீவிரமாக முன்னெடுத்து வந்தார்.

 

வானொலி, தொலைக்காட்சிக் கலைஞர் என்பதோடு இவர் நின்றுவிடவில்லை. சிறந்த நடிகர், இயக்குனர் என்பதையும் தொடர்ச்சியாக நிரூபித்து வருகின்றார். பல குறும்படங்களில் நடித்ததோடு, நான்கு குறும்படங்களை இயக்கியும் உள்ளார். இவருடைய இயக்கத்தில் « பதில் » முளுநீளத் திரைப்படம் வெளிவர இருப்பது மிகவும் எதிர்பார்ப்பான செய்தியாகும்.

மூத்த கலைஞர் அருண‌கிரிநாதன் அவர்கள் GTV தொலைக்காட்சியில் இயக்கிய « புலத்துச் சங்கதி » தொடர் நாடக நிறைவு விழாவில் பல வருடங்களுக்குப் பின்னர் சுதர்சன் அவர்களை நேரில் சந்திக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. நான் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது அவருடைய குறும்படம் ஒன்றில் நடிக்க முடியுமா என்று என்னிடம் கேட்டார். தந்திரமாக மறுத்துவிட்டேன். இவ்வாறான சந்தர்ப்பங்கள் வருகின்ற போது தொடர்ச்சியாக இறைவன் என்னைக் காப்பாற்றி வருகின்றாரா? அல்லது நான் நடிகனாகக் கூடாது என்று சதி செய்து வருகின்றாரா? தெரியவில்லை.

 

ஒவ்வொரு மனிதர்களையும் அவர்கள் எண்ணாத இடத்தில் தூக்கி வைத்து விடும் வாழ்க்கை. என்னைத் தனது குறும் படத்தில் நடிப்பதற்குக் கேட்ட சுதர்சனை; எனது இரண்டு படைப்புகளில் அவர் நடிக்க நான் இயக்கியது எதிர்பாராத சந்தர்ப்பங்கள்தான். புதிதாக நான் இயக்கப் போகும் படைப்புகளிலும் சுதர்சன் நடிக்கவிருப்பது மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகின்றது.

 

பன்முக ஆளுமை கொண்ட இந்தக் கலைஞர் ஊடகங்களிலும், மேடை இசை நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக, நடிகர் – இயக்குனராக, நடன இயக்குனராக தன்னை அடையாளப்படுத்தி வருவது பாராட்டுதலுக்கு உரியது. கலைஞர் சுதர்சனின் கலைப்பயணம் மேலும் இனிதே தொடர்ந்திட வாழ்த்துக்கள்!

 

பிரியமுடன்
-கி.தீபன்