கரட், பீற்றுாட் என்பன எமது மண்ணில் விளையக் கூடிய சுவையான உணவுக்கு அழகைக் கொடுக்கக் கூடிய நிறப்பொருட்களை கொண்ட ஊட்டச் சத்துள்ள ஒரு உணவாகும். அதிகரித்த நிறை உடையவர்களுக்கு இது ஒரு உன்னதமான உணவாகச் சித்தரிக்கப்படுகிறது. இதற்கு காரணம் இவற்றிலே கலோரி அடர்த்தி குறைவாகக் காணப்படுவதலாகும். எனவே இவை அதிக நிறை அதிகரிப்பை ஏற்படுத்துவதில்லை. அத்துடன் இவை பசியை கட்டுப்படுத்துவதுடன் மலச்சிக்கல் ஏற்படும் தன்மையையும் குறைக்கின்றது.

 

விற்றமின்கள், கனியுப்புக்கள், நார்த்தன்மை என்பன நிறைந்த கரட், பீற்றுாட், முள்ளங்கி போன்ற உணவு வகைகளில் சிறிதளவு மாப்பொருள் அல்லது காபோவைதரேற்று காணப்படுகின்ற பொழுதிலும் நீரிழிவு நிலை உள்ளவர்களும் இவற்றை போதியளவு உண்ணமுடியும். இவை நீரிழிவு கட்டுப்பாட்டில் எந்தவிதமான பாதகமான தாக்கங்களையும் ஏற்படுத்தமாட்டாது. இவற்றை வெட்டுவதற்கு முன் நன்கு கழுவி சுத்தம் செய்யவேண்டியது அவசியமாகும். வெட்டிய பின்பு கழுவுவோமாயின் அநாவசியமாக பல ஊட்டச்சத் துக்கள் இழக்கப்பட்டுவிடும்.