தாய் நிலத்தை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வந்து குடியேறிய எம்மவர்கள். எமது பாரம்பரிய கலைகளை அழிந்துவிடாமல் நாடகம், நாட்டுக்கூத்து, பாடலென‌ அரங்கேற்றி வந்த நிலை மாறி. இன்று எமது இளம் சமுதாயத்தினருக்கு சினிமாபால் காதல் ஏற்பட்டிருக்கிறது!

 

கையில் எழுத்துப் பிரதிகளோடும், ஒளிப்பதிவுக் கருவிகளோடும் கூடி நின்று பேசுவதைக் காணக்கூடியதாக உள்ளது. ஒரு வாரத்தில் அல்லது மாதத்தில் ஏதேனும் ஒரு கதைகாவிக் குறும்படங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அதிலும் பிரான்ஸ் மண்ணிலிருந்துதான் அதிகமான குறும்படங்கள் வெளிவருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
பிரான்சில் இருந்து (30.10.2014) அன்று இயக்குநர் தமிழ்ப்பிரியனின் « சொதப்பல் » குறும்படம் வெளிவந்துள்ளது. இந்தக் குறும்படத்தில் செல்வகுமார், புனிதமலர், கிருஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

 

படம் தொடங்கி சிறிது நேரத்தில் செல்வகுமாரின் மிடுக்கான நடையைப் பார்த்ததும், தமிழ்ப்பிரியனின் வழமைபோன்ற சண்டித்தனக் கதைதானோ இதுவுமென‌ மனம் சலிப்படைய, கதை வேறு விதமாக நகர்கின்றது.

 

வெளிநாட்டுக்கு மகனை அனுப்பிவிட்டுக் கண் கலங்கி நிற்கும் தாயை, வெளிநாட்டு மண்ணில் கால் பதித்ததும்… விதவித ஆசை கொண்டு கனவுகாணும் மகனைக் காணுகின்றபோது… நாம் கடந்துவந்த நாட்கள் கண்முன்னே வந்து நிற்கிறது.
கிறிஸ் எழுதிய கதையைத் தன் அனுபவ அறிவு கொண்டு குறும்படமாக்கியுள்ளார் இயக்குன‌ர் தமிழ்ப்பிரியன். சிறந்த படத்தொகுப்பாளர் சங்கர் என்ற போதிலும், கோபிசண்ணின் ஒளிப்பதிவில் முன்னேற்றம் தெரிகிறது.

 

அதிகமான விளம்பரங்களையும், நீண்ட நாட்கள் காத்திருப்பையும் தவிர்த்து விட்டு இந்தப் படைப்பை வெளியிட்டிருக்கலாம் என்பது எமது தாழ்மையான கருத்து. எமது இளம் கலைஞர்கள் எழுத்தில் இருந்து, ஒளிப்பதிவுக் கருவியை கையாள்வதிலிருந்து, படத்தொகுப்பு முடியும்வரை,- அவற்றில் எல்லாம் மாணவர்களாய் இருப்பதனால். குறைகளைத் தள்ளி வைத்துவிட்டு நிறைவான பக்கங்களைப் பாராட்டுவோம். வாழ்த்துக்கள்!! வெளிநாட்டு இயந்திர வாழ்வில். வேலைப்பளுக்களுக்கிடையில் சலிப்பின்றிக் கொடுக்கின்ற படைப்புகளை வரவேற்று வாழ்த்திக் கொள்வோம்!