வெளிநாட்டு இயந்திர வாழ்வில் கலைத்தாகம் கொண்ட கலைஞர்கள் ஒவ்வொருவரும் பலவிதமான‌ சிரமங்களுக்கு மத்தியில் தங்கள் எண்ணங்களில் கருக்கொண்டவற்றை பலதரப்பட்ட படைப்புகளாகக் கொடுத்து வருகின்றனர். அந்தவகையில்தான் இயக்குனர் தமிழ்ப்பிரியன் இந்தக் குறும்படத்தைக் கொடுத்திருக்கின்றார்.

 

எந்த ஒரு வருமானமும் இல்லாமல் ஒரு இயக்குனர் தனது சம்பாத்தியத்தில் இருந்து 23 நிமிடக் குறும்படத்திற்கு பாதியைச் செலவு செய்வது என்பது என்னைப் பொறுத்தவகையில் அதிகம்தான்.

 

எமது கலைஞர்களின் கலைத்திரணை வளர்க்க வேண்டும் என்று உரத்துக் குரல் கொடுக்கின்றவர்கள். வளர் நிலையில் வெளிவருகின்ற படைப்புகளைப் பார்த்து மனம் போன போக்கில் விமர்சனங்களைச் சிந்திவிடாதீர்கள். எதையோ நோக்காகக் கொண்டு நீங்கள் முன்வைக்கின்ற விமர்சனங்கள். உளரீதியாகக் கலைஞர்களைச் சோர்வடையச் செய்ய்யும்.

 

நிறையப் பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அடித்துச் சொல்வதுதான் விமர்சனம் என்று. அணைத்தும் சொல்லலாம் என்பது எனது கருத்து. அன்பால் பிள்ளைகளைத் திருத்துகின்ற போது பதிலுக்கு அவர்கள் அன்பு செலுத்துவார்கள். அடித்தால் கோபப்படுவார்கள் என்பதை,

 

வளரும் கலைஞர்களைப் பிள்ளைகள் என்று உரிமை கூறுகின்ற பெரியவர்கள், சில இடங்களில் மறந்து விடுகின்றனர். குறையைத் திருத்துவது ஒன்றும் தவறில்லைத்தான். நிறைவான பக்கங்களைப் பாராட்டுவதும் தவறில்லைத்தானே…!

 

ஒரு படைப்பில் உள்ள நிறைவான பக்கங்களை முதலில் பார்த்துவிட்டு. அதன் பின்பு அதில் உள்ள குறைகளைப் பார்வையிட்டால்…! விமர்சனங்கள், விமர்சனக்கல்லாக வந்து விழாது என்பது எனது தாழ்மையான கருத்து!!

 

பல சிரமங்களுக்கு மத்தியில் இந்தப் படைப்பை இந்தளவுக்கேனும் நிறைவாகக் கொடுத்த தமிழ்ப்பிரியனுக்கும், இந்தப் படைப்பு உருவாகுவதற்கு உடன் இருந்து உழைத்த கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்!