தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் காரணமாக, இலங்கையில் தனிப்பட்ட சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு குறிப்பிடத்தக்க சவால்கள் இருப்பதாக ‘தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள்’ தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைக் குழு, அடையாளம் கண்டுள்ளது. மூன்று அங்கத்தவர்களைக் கொண்ட ஐ.நா தூதுக்குழு இலங்கையில் மேற்கொண்ட உத்தியோகப்பூர்வ விஜயத்தின் இறுதியில் வெளியிட்ட பிரசுரத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

 

ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான பொறிமுறைகளுடன் செயற்படுவது பற்றியும், சித்திரவதைக்கு எதிரான சமவாயத்தின் விருப்பத்திற்குரிய ஆரம்ப வரைபிற்கு அண்மைக் காலத்தில் இணக்கப்பாட்டைத் தெரிவித்தமை குறித்தும் சாதகமான முன்னெடுப்புக்களை இந்த நிபுணர்கள் குழு அங்கீகரிக்கின்றது. தன்னிச்சையான தடுத்துவைப்புக்களை முடிவிற்குக் கொண்டு வர வேண்டும். எனினும், சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின் கீழ் இலங்கையின் கடப்பாடுகளைச் செயற்படுத்துவது மற்றும் அரசாங்கத்தின் 2017-2021 தேசிய மனித உரிமைகள் நடவடிக்கைத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள கடப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கும் உடனடி நடவடிக்கைகள் அவசியமாகின்றன.

 

‘சட்டத்தை நடைமுறைப்படுத்துவோர், பாதுகாப்புப் படையினர், நீதித்துறையினர் மற்றும் ஏனைய அதிகார சபைகள் தனிநபர் சுதந்திரத்திற்கான உரிமைகளுக்கு இன்னும் மதிப்பளிக்கவில்லை. தனிநபர்களின் சுதந்திரத்தை இழக்கச்செய்யும் தற்போதைய அதிகாரங்கள் பரந்துபட்ட நிறுவனங்களுக்கு விரிவாக்கப்பட்டுள்ளன. பொலிஸ் நிலையங்கள், சிறைச்சாலைகள், திறந்த வேலை முகாம்கள், இளம்வயதினருக்கான இல்லங்கள் மற்றும் முதியோருக்கான இல்லங்கள், மனநல சுகாதார நிலையங்கள், முன்னைநாள் போராளிகளுக்கும் – போதை வஸ்துக்களுக்கு அடிமையானோருக்கும், நலிவுறும் சூழ்நிலைகளில் வாழ்வோரக்கும் உரிய புனர்வாழ்வு நிலையங்கள் இவற்றுள் உள்ளடங்கும்.

 

மிக அதிகமாக விளக்கமறியல் சிறைகளைப் பயன்படுத்துதல், தடுத்து வைப்பதற்கான செயல் திறன் குறைந்த மாற்று வழிமுறைகள், காலம் கடந்த சட்ட நடைமுறைகள், அனேகமான சந்தர்ப்பங்களில் சித்திரவதைகள் அல்லது வலுக்கட்டாயமாகப் பெறும் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களில் தங்கியிருத்தல், என்பன உடனடியாகக் கவனம் செலுத்தி மறுசீரமைப்புக்களுடன் அணுக வேண்டிய சில முக்கிய பிரச்சினைகளாகும். சந்தேக நபர்கள் நியாயமற்ற முறையில் கால வரையரை இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கையில், நீதிமன்ற நடவடிக்கைள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

 

அவர்களின் குற்றமற்ற தன்மை பற்றிய ஊகிப்பு மற்றும் குறித்துரைக்கப்பட்ட செயல் முறைக்கான உரிமைகள் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாமை பற்றியும் அவர்கள் குறிப்பிட்டனர். அவசரகால நிலைமையின்போது இயற்றப்பட்ட விசேட சட்டங்களும் அதிகாரங்களும் நீக்கப்பட வேண்டும். குறிப்பாக, 1979இன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கவேண்டுமென ஐ.நா.நடவடிக்கைக் குழு இலங்கை அரசாங்கத்தை வேண்டிக் கொள்கின்றது.

 

இச்சட்டம் நான்கு தசாப்தங்களாக தன்னிச்சையாகத் தடுத்துவைப்பதற்கு முக்கிய காரணியாக அமைந்தள்ளது. இது தொடர்பான புதிய சட்டவாக்கம் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கும் சிறந்த நடைமுறைகளுக்கும் ஏற்புடையதாக அமைய வேண்டும். தடுத்துவைப்பட்டோர், குறிப்பாக கைது செய்யப்படும் தருணத்திலிருந்து, அவர்களின் தொடக்க வாக்கு மூலத்தை பதிவு செய்வதற்கு முன்னர், சட்ட உதவி பெறுவதற்க உடனடியாக அணுகக் கூடிய வகையில்,உரிய நடவடிக்கைளின் ஒரு சில அடிப்படை உறுதிப்பாடுகளை அனுபவிக்க முடிவதில்லை.

 

‘குறிப்பாக பொலிஸ் நிலையங்களில் சட்டத்தரணியின் பிரசன்னம் இன்றி தடுத்து வைக்கப்பட்டோரை அதிகாரிகள் விசாரணை செய்யும் விடயம் பற்றிக் கவலைப்படுவதாக நிபுணர்குழு எடுத்துரைத்தது. பிள்ளைகள், பெண்கள், முதியோர்கள், சமூக உளவியல் குறைபாடுகளுடையோர் மற்றும் வறுமையினால் பாதிக்கப்பட்டோர் போன்ற இலகுவில் பாதிப்படையக் கூடிய விளிம்புநிலையினர் பற்றி நிபுணர் குழு கவனம் செலுத்தியுள்ளது.