ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கையை கனடா வலியுறுத்தும் என்று கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்தார்.

 

தைப்பொங்கலையும், தமிழ் மரபுத் திங்களையும் முன்னிட்டு கரி ஆனந்தசங்கரி உட்பட, சமஸ்டி லிபரல் கட்சியின் ரொறன்றோ பெரும்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 17 பேர் ஏற்பாடு செய்திருந்த வரவேற்புபசார நிகழ்வு செவ்வாய்க்கிழமை இரவு ஸ்காபறோவில் இடம்பெற்றது. கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அதில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

 

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் நம்பிக்கையைக் கொண்டிருக்கக் கூடிய பொறுப்புக்கூறல் பொறிமுறை தேவையென்ற விடயத்தில் தனிப்பட்ட ரீதியில் தாம் உறுதியாக இருப்பதாக ட்ரூடோ கூறினார்.

 

கறுப்பு ஜூலையின் 35 ஆம் ஆண்டு இவ்வாண்டில் நினைவு கூரப்படுவதைச் சுட்டிக் காட்டிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, தமிழர்களின் வருகை கனடாவுக்கு நல்வாய்ப்பாக அமைந்ததெனவும் குறிப்பிட்டார்.

 

மேற்குலக நாடுகளில், தைப்பொங்கலையும் தமிழ் மரபுத் திங்களையும் முன்னிட்டு நடத்தப்பட்ட வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட முதலாவது பிரதமர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

அதேவேளை ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத்தில் மனித உரிமைகள் மற்றும் பேரர்க்குற்ற விசாரணை தொடர்பான விடயங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் பற்றி இலங்கை அரசாங்கத்திற்கு கடும் அழுத்தம் கொடுக்கப்படவுள்ளதாக ஜெனீவா தகவல்கள் கூறுகின்றன. நிரந்தர அரசியல் தீர்வை முன்வைக்கும் விடயத்தில் மைத்திரி ரணில் நல்லாட்சி அரசாங்கம் எவ்வாறு செயற்படுகின்றது என்பது குறித்தும் அந்தக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.