தாய்மொழிக்கு ஒரு தினத்தை
மாசித் திங்கள் இருபத்தியொன்றில்
காசினி மகிழ உலகத் தாய்மொழி தினமென
அவரவர் தாய்மொழியின் அவசியம் கருதி
அறிவித்து மகிழ்ந்ததே ஐ.நா சபையும்
அந்தவகையில் தாய்மொழியே எம் தமிழ்மொழி !

 

இனத்தின் முகவரியை இயம்புவது மொழி
இன மதங்களுக்கு அப்பாற்பட்டது மொழி
இனிமையும் ,தொன்மையும் கொண்டது எம் மொழி
இலக்கண இலக்கிய மரபுகளைக் கொண்டதும் எம்மொழி
இதனாலேயே செம்மொழி எனப் பெயர் பெற்ற மொழி
இன்று வரையும் ஜீவநதியாய் பாயும் மொழி
செம்மொழியான எம் தமிழ்மொழியே !

 

நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே
எழுத்துமொழியில் ஏறுநடை போட்ட மொழி
வாழ்வியல் மொழியாகி செழித்த மொழி
நாகரீகத்தையும் பண்பாட்டையும் வளர்த்த மொழி
செம்மொழியான எம் தமிழ் மொழியே !

 

கடல் கோள்களை எதிர்கொண்டாலும்
கால வெள்ளத்தைக் கடந்தாலும்
வீறுநடை போடுகிறது செம்மொழியாம் எம் மொழி
எம்மொழியும் பெறாத கொடையை
சங்கங்கள் வைத்து தமிழ் வளர்த்த முறைமை
செம்மொழியான எம் மொழி மட்டுமே
தமிழோடு வாழ்வோம் தமிழை வளர்ப்போம் !

 

-ரஜனி அன்ரன்