இலங்கைக் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற கடற்புலிகளின் தளபதி சூசையின் துணைவி த நேசன் என்னும் ஆங்கில வார இதழுக்கு பேட்டி ஒன்றை வழங்கி இருந்தார்.

 

கொழும்பிலிருந்து வெளியாகும் “த நேசன்” என்கிற ஆங்கில வார இதழுக்காக சாமரா லக்ஷன் குமார, சூசையின் துணைவி சத்யதேவி அவர்களிடம் ஒரு நேர்காணல் நடத்தினார். அந்த நேர்காணலில் சத்யதேவி தனது சில அனுபவங்களை பதில்களாக நினைவு கூர்ந்திருந்தார்.

 

சூசையின் மனைவி நடுக்கடலில் நடந்த நாடகத்தை நினைவு கூருகிறார்
-சாமரா லக்ஷன் குமார-

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஒருமுறை அடுத்த ஈழப்போர் நடுக்கடலில்தான் நடைபெறும் என ஒருமுறை மிகைப்படுத்தி பேசியிருந்தார். அவரது அந்த மிகைப்படுத்தல் தோன்றுவதற்கு காரணமாக இருந்தது, கடற்புலிகள் என்றழைக்கப்படும் போராளிகள் தங்களிடமுள்ள பல்வேறு வகையான கப்பல்கள் மற்றும் படகுகள் மூலமாக வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள கடற்படையினருக்கு ஒரு அச்சுறுத்தலாக மாறியிருந்ததே.

 

கடற்புலிகளின் தலைவர் சூசை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிங்கள இராணுவம் நடத்தப்பட்ட இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டார், மற்றும் அவர் மனைவி சத்தியதேவி தனது இரண்டு குழந்தைகள் மற்றும் சில நெருங்கிய உறவினர்கள் சகிதம் ,தப்பிச் செல்வதற்காக அவரது கணவர் சூசை வழங்கிய படகு ஒன்றின் மூலம் நந்திக்கடல் பிரதேசத்தை விட்டு வெளியேற முயன்றார்.

 

சதியதேவி `த நேசன்` வார இதழுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் சவாலான அந்த நாட்களையும் மற்றும் பாதுகாப்புக் காவலில் உள்ள அவரது தற்போதைய வாழ்க்கையையும் வெளிப்படுத்துகிறார்.

 

உங்கள் கணவர் சூசையை எவ்வாறு நீங்கள் முதன்முதலில் சந்தித்தீர்கள்?

சூசை எல்.ரீ.ரீ.ஈ யில் பணியாற்றிய என் சகோதரனின் ஒரு நண்பராவார். அந்த நேரத்தில் அவர் எங்கள் வீட்டுக்கு வருவது வழக்கம். 1982ல் எல்.ரீ.ரீ.ஈ க்காக தனது உயிரைத் தியாகம் செய்த முதல் போராளி எனது அண்ணன். எனது அண்ணனின் மறைவுக்குப் பின்னரும் கூட சூசை எங்கள் வீட்டுக்கு வருவது வழக்கமாகிவிட்டது. யாருக்காவும் அவர் தேவைப்படும் சமயத்தில் மிகவும் உதவி புரிபவராகவும் மற்றும் அவசியப்படுபவர்களுக்கு உதவி புரிவதில் தயக்கம் காட்டாதவராகவும் இருந்தார். அவருடைய நல்ல பழக்கங்கள் என்னைக் கவர ஆரம்பித்தன. நான் அவரை விரும்பத் தொடங்கினேன், நாங்கள் நெருக்கமானவர்களாக மாறினோம். நாங்கள் திருமணம் செய்ய முடிவு செய்தபோது, அவர் எல்.ரீ.ரீ.ஈ யில் இணைந்து இருந்ததால் எனது பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை. அப்போது அவர் வடமராட்சி பகுதியின் உள்ளுர் தலைவராக இருந்தார். எனினும் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம், மற்றும் அதன் பின் விரைவிலேயே அவர் கடற்புலிகளின் தலைவராக மாற்றம் பெற்றார்.

 

நீங்களும் எல்.ரீ.ரீ.ஈ யில் இணைந்து கொண்டிருந்தீர்களா?
இல்லை

 

சூசையை மணந்த பிறகும் அந்த நிலையில் மாற்றம் ஏற்படவில்லையா?
அதன் பிறகும் மாறவில்லை.

 

ஏன்?
அது அவசியம் என்று நான் கருதவில்லை சூசையும் என்னை எல்.ரீ.ரீ.ஈ யில் இணையும்படி ஒருபோதும் வற்புறுத்தியது கிடையாது.

 

சூசை, எல்.ரீ.ரீ.ஈ விடயங்களைப்பற்றி வீட்டில் கதைப்பாரா?
அப்படியான விடயங்களை அவர் ஒருபோதும் விவாதிப்பதில்லை. நாங்கள் வீட்டில் எங்கள் தனிப்பட்ட மற்றும் குடும்ப விடயங்களைப் பற்றியே பேசுவோம்.

 

அவர் வீட்டுக்கு வந்ததும் எதைப்பற்றி கதைப்பார்?
அவருக்கு சிறிதளவு ஓய்வே கிடைக்கும். அவர் வீட்டுக்கு வருவது பிரதானமாக உறங்குவதற்காகவே.

 

உங்கள் வீடு எங்கே உள்ளது?
ஆரம்பத்தில் நாங்கள் யாழ்ப்பாணத்தில் வசித்தோம், ஆனால் இராணுவத்தினர் “ஒப்பரேசன் ரிவிரச” நடவடிக்கையை ஆரம்பித்த பின்னர், நாங்கள் நகரத்தை விட்டு இடம் பெயர்ந்தோம். நாங்கள் தேவபுரம், முல்லைவெளி, வள்ளிக்குளம் மற்றும் இறுதியாக 2007ல் புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் வாழ்ந்தோம்.

 

சூசை ஒரு வலிமையான மனிதராக அறியப்பட்டிருந்த போதிலும், தனது பிள்ளைகளுக்கு ஒரு நல்ல தந்தையாக இருந்ததாக அநேகர் எழுதி அல்லது சொல்லி இருக்கிறார்கள். அது உண்மையா?
அவர் தனது பிள்ளைகளை அளவுக்கு அதிகமாக நேசித்தார். எங்கள் மகனின் முதலாவது பிறந்த நாளின்போது, எங்கள் மகனுக்கு அவர் எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு சொந்தமாகவிருந்த முதல் கப்பலின் வடிவத்திலிருந்த கேக் ஒன்றை கொண்டுவந்தார். அது நெல்லியடியில் இருந்த சுபாஷ் வெதுப்பகத்தில் அது தயாரிக்கப்பட்டது. அவரது கடமைகள் அவரது பிள்ளைகளுடன் அதிக நேரத்தைச் செலவழிக்க அவருக்கு இடமளிப்பதில்லை, அதனால் அவர்களை கவனமாகப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பினை அவர் என்னிடம் ஒப்படைத்திருந்தார்.

 

2004ல் சூசை சிங்கப்பூருக்கு சென்றிருந்தார். அவரின் அந்த பயணத்தைப் பற்றி சொல்வதற்கு ஏதாவது உள்ளதா?
இந்திய கடற்படை படகு ஒன்று கடற்புலிகள் மீது நடத்திய தாக்குதலில் சூசை காயங்களுக்கு இலக்கானார். எல்.ரீ.ரீ.ஈ யின் காவல்துறை தலைவர் நடேசன் மற்றும் வருவாய்த்துறை தலைவர் தமிழந்தி ஆகியோரும் அந்த சிறுபோரில் காயமடைந்தனர். தற்காலிகமாக காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், சில காயங்கள் அதன்பின் மிகவும் மோசமாக மாறின, அதனால் மேலதிக சிகிச்சைக்காக சூசையை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டியது அவசியமாகியதால் அவர் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தார்.

 

சிங்கப்பூருக்கு போகும் சந்தர்ப்பம் சூசைக்கு எப்படிக் கிடைத்தது?
அது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாது. தான் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு போகவேண்டி இருப்பதாக அவர் என்னிடம் தெரிவித்தார். சூசைக்கு சிங்கப்பூருக்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு எல்.ரீ.ரீ.ஈ இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்தது அரசாங்கமும் அதற்கு அனுமதி வழங்கியது. அவர் போகும்போது ஒரு மருத்துவரும் இரண்டு மெய்ப் பாதுகாவலர்களும், அவருடன் கூடச் சென்றார்கள். ஒரு எல்.ரீ.ரீ.ஈ நபர் சூசையுடன் பேசுவதற்காக ஒரு தொலைபேசியை எனக்குத் தந்தார், சிங்கப்பூரிலிருந்து இரு தடவைகள் சூசை என்னுடன் தொலைபேசியில் பேசினார்.

 

பிரபாகரனுக்கும் சூசைக்கும் இடையே உறவு எப்படியாக இருந்தது?
சூசை பிரபாகரன் மீது உயர்வான நம்பிக்கை வைத்திருந்தார், மற்றும் அதேபோல பிரபாகரனும் சூசைமீது உயர்வான நம்பிக்கையை வைத்திருந்தார்.

 

உங்களது குடும்பம் பிரபாகரனின் குடும்பத்தினரோடு எந்த வகையான உறவினைக் கொண்டிருந்தது?
எங்களது குழந்தைகள் பிறந்த நேரத்தில் பிரபாகரனின் குடும்பத்தினர் அனைவரும் எங்களிடம் வருகை தந்தனர், அதைத்தவிர வேறு வருகைகள் எதுவும் இடம் பெறவில்லை. ஆனால் புலிகளின் விழாக்களிலோ அல்லது வேறு பொது நிகழ்ச்சிகளிலோ நிச்சயமாக நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வோம். அப்போது நாங்கள் எங்களுக்கு அக்கறையுள்ள பல விடயங்களையும் பற்றிப் பேசிக் கொள்வோம். பிரபாகரன் மற்றும் மதிவதனி ஆகிய இருவருமே எப்படி எங்களின் குழந்தைகளின் படிப்பு விடயங்கள் முன்னேற்றகரமாக உள்ளனவா என வழக்கமாக எங்களிடம் விசாரிப்பதுண்டு.

 

உங்களுக்கு எல்.ரீ.ரீ.ஈ யினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த போதிலும் யுத்தம் ஒரு ஆபத்தான கட்டத்தை நெருங்கி வந்தபோது நீங்கள் அச்சமடையத் தொடங்கினீர்களா?
ஏன் இல்லை. யார்தான் அச்சப்பட மாட்டார்கள்?

 

அப்போதுகூட எல்.ரீ.ரீ.ஈ யை விட்டு விலகுமாறு அவரிடம் கேட்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?
நான் அவரிடம் கேட்டிருந்தால்கூட அவர் ஒருபோதும் எல்.ரீ.ரீ.ஈயை விட்டு வெளியேறியிருக்க மாட்டார். தனது சாவு, தான் எல்.ரீ.ரீ.ஈக்காக பணியாற்றும்போது வரக்கூடுமே தவிர வேறு வழியினால் அல்ல என்று அவர் வழக்கமாகச் சொல்வதுண்டு.

 

2007இல் உங்கள் மகன் சங்கர் இறந்தது மற்றும் சூசை கூட மிகவும் மோசமான காயங்களுக்கு உள்ளானது. இவை பற்றிய உங்கள் கருத்து?
எனக்கு அந்த திகதி நினைவில் உள்ளது. அது ஜூலை 18ந்திகதி. கிளிநொச்சியில் நடக்கும் ஒரு விழாவுக்காக நான் வாகனமொன்றில் செல்ல இருந்தேன். எங்களது இளையமகன் வாகனங்களில் பயணம் செய்வதில் அளவுகடந்த ஆசை உள்ளவனாக இருந்தான், அதேபோலவே அவன் கடலையும் விரும்பினான். ஆனால் சூசை ஒருபோதும் எங்களது மகனை கடலுக்கு கூட்டிப்போனது கிடையாது. அவர் அவரது மகனை கரையில் உள்ள படகு ஒன்றில் இருக்கும்படி சொல்லிவிட்டு அவர் ஆழ்கடலுக்குச் செல்வார். சங்கர் படகிலிருந்து மற்றவர்களுடன் விளையாடுவான். இது நடந்த தினத்திலும் கூட இதையேதான் சூசை செய்தார், ஆனால் எப்படியோ அல்லது வேறுவிதமாகவோ அவர் தனது ஆட்களிடம் எனது மகன் இருந்த படகினையும் ஆழ்கடலுக்கு கொண்டுவரும்படி சொல்லியிருக்கிறார். அந்நேரத்தில் படகுகள் சில பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. பயிற்சியில் ஈடுபட்டிருந்த எல்.ரீ.ரீ.ஈ படகுகளில் ஒன்று ,சூசையின் படகுடனும் மற்றும் எனது மகன் இருந்த படகுடனும் மோதியது. இந்த விபத்தில் நான் எனது மகனைப் பறிகொடுத்தேன்.

 

அது திட்டமிட்ட ஒரு விபத்து என்று நாங்கள் கேள்விப் பட்டோம்?
அப்படி ஒரு வதந்தி நிலவியது, ஆனால் அது ஒரு விபத்து என்றே நான் நம்புகிறேன்.

 

அந்த விபத்தில் சூசைக்கு என்ன நடந்தது?
அவரது வயிற்றில் மிக நீளமாக கிழிக்கப்பட்டிருந்த காயம் இருந்தபோதிலும் உண்மையில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது, மற்றும் அது நடந்தபின் மூன்று வாரங்களாக அவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தார்.

 

பொட்டு அம்மான் அந்த படகு விபத்தை ஏற்பாடு செய்ததாக வதந்தி பரவியது, அதுகுறித்து எல்.ரீ.ரீ.ஈ கடும் மௌனம் சாதித்ததால் அந்த வதந்தி உண்மையோ என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது?
அவர் அந்த விபத்தை ஏற்பாடு செய்திருப்பார் என நான் நினைக்கவில்லை.

 

பொட்டு அம்மான் அந்த விபத்து நடந்ததுக்குப் பிறகு உங்களுடன் பேசினாரா?
ஆம் அவர் என்னுடன் பேசினார். பொட்டு அம்மான் மட்டுமல்ல மற்ற எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களும் என்னுடன் பேசினார்கள். எல்லா எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களும் எனது மகனின் மரணச் சடங்கில் கலந்து கொண்டார்கள்.

 

காயங்கள் சுகமடைந்த பின்பு அந்த விபத்தைப்பற்றி சூசை ஏதாவது சொன்னாரா?
எமது மகனின் மறைவினால் அவர் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்திருந்தார். அது அவருடன் நீண்டகாலமாகவே தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. பலமுறை நான் அவரிடம் எல்.ரீ.ரீ.ஈ செயற்பாடுகளிலிருந்து கொஞ்ச நாட்கள் ஒதுங்கி இருக்கும்படியும் ஆனால் தேவைப்பட்டால் அவர்களுக்கு உதவும்படியும் கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் எனது அறிவுரைகளைக் கேட்கவில்லை.

 

நீங்கள் எல்.ரீ.ரீ.ஈயினருக்கு எதுவித உதவியும் செய்வதில்லை எனச் சொல்லப்படுகிறதே. நீங்கள் வீட்டிலிருந்து என்ன செய்வீர்கள்?
நான் எனது குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதுடன் வீட்டில் அவர்கள் தேவைகளையும் பார்த்துக் கொள்வேன். எங்கள் தேவைகளுக்கு வேண்டிய உணவுப் பயிர்களை நானே பயிர் செய்து கொள்வேன். எனது குழந்தைகளுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதில் இணைந்து கொள்வேன்.

 

எல்.ரீ.ரீ.ஈ வீட்டு வேலைகளில் உங்களுக்கு உதவிகளை வழங்காத போதிலும் ஏனைய எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களின் குடும்பங்களுக்கு வாகனங்களையும் பாதுகாப்பினையும் வழங்கியிருந்ததே?
எங்களுக்கும் ஒரு வானும் மற்றும் சாரதியுடன் கூடிய ஒரு முச்சக்கர வண்டியும் மற்றும் ஒரு பாதுகாப்பு கடமையாளரும் வழங்கப்பட்டிருந்தன.

 

வடக்குக்கு வெளியே அதாவது கொழும்பு போன்ற இடங்களில் என்ன விடயங்கள் நடைபெறுகின்றன என்கிற தகவல்களை அறியக்கூடிய வழிகள் உங்களுக்கு இருந்தனவா?
நாங்கள் தொலைக்காட்சிகளைப் பார்த்து அப்படியான விடயங்களை அறிந்து கொள்வோம். சிலவேளைகளில் சூசை வீட்டுக்கு வரும்போது தெற்கில் இருந்து வெளியாகும் செய்திப் பத்திரிகை ஒன்றை வழக்கமாகக் கொண்டு வருவார்.

 

யுத்தம் ஒரு ஆபத்தான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது என்பதை எப்போது நீங்கள் அறிந்தீர்கள்?
ஆரம்பத்திலிருந்தே நாங்கள் அச்சத்துடன்தான் வாழ்ந்து வந்தோம். இறுதிக்கட்டத்தில் நாங்கள் பதுங்கு குழிகளை விட்டு வெளியேறினால் எந்த வித மாற்றமுமில்லாமல் காயமடைவோம் என்பதை நாங்கள் நன்கு அறிந்திருந்தோம். விடயம் அத்தகைய மோசமான நிலைக்கு வந்துவிட்டது.

 

இந்தியாவுக்கும் ஸ்ரீலங்காவுக்கும் கிரிக்கட் போட்டிகள் நடந்த போது யாருக்கு நீங்கள் ஆதரவு வழங்கினீர்கள்?
நாங்கள் இந்தியாவுக்கே ஆதரவு வழங்கினோம். நாங்கள் சச்சின் டெண்டுல்கரை மிகவும் விரும்பினோம்.

 

முரளீதரன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
முரளீதரனையும் நாங்கள் விரும்பினோம் ஆனால் டெண்டுல்கரை அதைவிட அதிகம் விரும்பினோம்.

 

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின்போது நீங்கள் புதுக்குடியிருப்பிலிருந்து வெளியேற விரும்பினீர்கள். ஏன்?
நாங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேற விரும்பியது, மே 12ல். அந்த நேரத்தில் அதிக அளவிலான மக்கள் ஒரு சிறு பகுதி நிலப்பரப்பினுள் அடைபட்டுக் கிடந்தார்கள் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யின் தோல்விக்கு அது தெளிவான சான்றாக அப்போது தோன்றியது. நாங்கள் எங்கள் மகள் சிந்துமணியையும் மற்றும் மகன் கடலரசனையும் சூசையின் மூத்த சகோதரனின் மனைவி மற்றும் பிள்ளையுடன் ஒரு படகில் அந்த இடத்தைவிட்டு வெளியே அனுப்ப முடிவு செய்தோம். ஆனால் நான் மற்றவர்களை விட்டுச் செல்ல முடிவெடுக்கவில்லை, ஏனெனில் சூசை அப்படிச் செய்வதை விரும்பவில்லை. ஆனால் இறுதியாக நான் எனது பிள்ளைகளுடன் செல்வது என முடிவெடுத்தேன். சூசை அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இறுதிவரை தான் போராடப்போவதாக தெரிவித்த சூசை பின்னர் வெளியேறுவதற்காக எங்களுக்கு ஒரு படகினை வழங்கச் சம்மதித்தார்.

 

அந்தப் படகிலேறி எங்கே செல்ல விரும்பினீர்கள்?
எங்களுக்கு இரண்டு இலக்குகள் இருந்தன. ஒன்று முடியுமானால் இந்தியாவுக்கு தப்பிச் செல்வது ஆனால் இதன்போது நாங்கள் ஆழ்கடலில் ஸ்ரீலங்கா கடற்படையினரின் கப்பல்களை எதிர்கொள்ள நேரிடும். கடற்படையினரிடம் பிடிபடுவதைப் பற்றி நாங்கள் சிந்திக்க விரும்பவில்லை, அனால் எங்கள் எண்ணமெல்லாம் எங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பிலேயே இருந்தது. நாங்கள் மே 12ந்திகதி வெளியேற தீர்மானித்தாலும் உக்கிரமடைந்த யுத்த நிலமை எங்களை பதுங்கு குழிகளுக்குள்ளேயே தங்கியிருக்க வைத்தது. எனவே கடைசியாக நாங்கள் மே 14ந்திகதியே வெளியேறினோம்.

 

மே 12ந்திகதி பிரபாகரனையும் அவரது குடும்பத்தினரையும் நீங்கள் புதுக்குடியிருப்பில் வைத்து காணவில்லையா?
ஆம் அவர்கள் அங்கேதான் இருந்தார்கள், நாங்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேறும் வரை அவர்கள் அங்கே பத்திரமாக இருந்தார்கள்.

 

அந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அவர்களுடன் பேசினீர்களா?
நான் அவர்களுடன் பேசவில்லை, ஆனால் சிலவேளைகளில் நாங்கள் வெளியேறுவதைப்பற்றி சூசை அவர்களிடம் சொல்லியிருக்கலாம்.

 

பிரபாகரன் அடைபட்டுக் கிடந்த மக்களுடன் இருந்தாரா அல்லது அவர்களிடமிருந்து வேறுபடுத்தப்பட்டு இருந்தாரா?
அந்த இறுதிக்கட்டத்தின்போது அவர்களுக்காக எந்த ஒரு தனியான இடமும் இருந்திருக்கவில்லை, ஆனால் அவர்களுக்கு உயர்ந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

 

அவரை விட்டுப் பிரியும் முன்பு சூசை என்ன சொன்னார்?
நான் கடைசியாக அவரைப் பார்த்தது, மே 12ல். ஆனால் மே 14ல் நாங்கள் அந்த இடத்தை வெளியேறும்போது நான் அவரைக் காணவில்லை . நாங்கள் அன்றுதான் வெளியேறுகிறோம் என்பதை அவர் அறியவில்லை, எங்களுக்கென்று தனியான பதுங்கு குழிகள் எதுவும் இருக்கவில்லை அதனால் நாங்கள் மற்றவர்களுடன் ஒரு பதுங்கு குழியினைப் பகிர்ந்து கொண்டோம்.

 

நீங்கள் வெளியேறுவதற்கு முன்னதாக சூசை எங்கேயிருக்கிறார் என்பதை அறிய நீங்கள் முயற்சி செய்யவில்லையா?
நாங்கள் முகம் கொடுத்துக் கொண்டிருந்த சூழலில் அதைச் செய்ய முடியவில்லை. யுத்தமானது அநேகமாக ஒரு கைப்பிடியினுள் அடங்கும் நிலையை எட்டியிருந்தது. நாங்கள் எங்களுக்குத் தெரிந்த ஒரு எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தினரிடம் ,நாங்கள் வெளியேறுவதை சூசையிடம் தெரிவிக்கும்படி சொன்னோம். இரவு 9 மணியளவில் புறப்பட்டோம். நாங்கள் 12பேர்கள் அந்தப் படகில் இருந்தோம் ஆனால் படகு தாக்கப்படும்வரை எங்களால் சுமார் 4 நிமிடம் மட்டுமே பயணம் செய்ய முடிந்தது.

 

பின்னர் என்ன நடந்தது?
அதை இயக்கிக் கொண்டிருந்த நபரை அவர்கள் தாக்கியபோது அவர் குண்டடிபட்டு படகினுள் விழுந்தார். படகின் பல இடங்களிலும் துவாரம் ஏற்பட்டு அதனுள்ள நீர் வர ஆரம்பித்தது. நாங்கள் நீரை வெளியேற்றிக் கொண்டிருந்தபோது சுமார் 20 நிமிடங்கள் கழித்து ஒரு சிறிய கடற்படைப்படகு எங்களை அணுகியது. சிலர் கொட்டியா கொட்டியா என சத்தமிடுவதை நான் கேட்டேன் மற்றும் அவர்கள் எங்கள்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வார்களோ என நாங்கள் அஞ்சினோம். அந்த நிமிடத்தில் ஒரு பெரிய படகு உறுதியான வெளிச்சத்தை பாய்ச்சியபடி எங்களை நோக்கி வந்தது. சூசையின் சகோதரரின் மனைவி றூபனின் கைக்குழந்தையை உயர்த்திக் காட்டினார். சிறிய படகில் இருந்த மனிதர்கள் எங்களை நெருங்கி வந்து எங்களுடன் தமிழில் பேசினார்கள். « பயப்பட வேண்டாம் நாங்கள் உங்களைக் காப்பாற்றுவோம்’’ என அவர்கள் சொன்னார்கள் .பிறகு அவர்கள் எங்களை அவர்களது படகுகளில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தார்கள்.

 

நீங்கள் சூசையின் மனைவி என்பதை அவர்கள் அடையாளம் கண்டு கொண்டார்களா?
உடனடியாக இல்லை. எனது இரண்டு பிள்ளைகளையும் சூசையின் சகோதரரின் மனைவியுடையது என்று கூறினேன். எனது சொந்த விருப்பத்தின்படி தனிமையாக்கப்பட்ட நான், றூபனின் தூரத்து உறவினர் என அவர்களிடம் கூறினேன். நாங்கள் புறப்படும் முன்பே நாங்கள் கடற்படையினரிடம் அகப்பட நேர்ந்தால் இவ்வாறு பேசவேண்டும் என முன்கூட்டியே திட்டமிட்டிருந்தோம். எப்படியாயினும் சூசையின் சகோதரரின் மனைவி தனது காலிலுள்ள காயமொன்றுக்கு மருந்து போட என்னுடன் மருத்துவ நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் முதலாவது சோதனைச் சாவடியை நாங்கள் கடந்தபோது கடற்படையினரிடம் சரணடைந்திருந்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர் ஒருவர் என்னைச் சுட்டிக்காட்டி நான் சூசையின் மனைவி என்பதை சொல்லிவிட்டார். உடனடியாகவே பெரும் எண்ணிக்கையிலான கடற்படை வீரர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டனர். இரண்டாவது தடவையாக நான் மற்றவர்களிடமிருந்து வேறாக்கப் பட்டேன். நான் ஏன் எல்.ரீ.ரீ.ஈ பிரதேசத்தை விட்டு வெளியேறினேன் என்றும் நான் எங்கு போக எண்ணியிருந்தேன் என்றும் என்னிடம் வினாவினார்கள். கடற்படையினர் என்னை தடுக்காவிட்டால் நான் இந்தியாவுக்குச் செல்ல எண்ணியிருந்ததாக நான் அவர்களிடம் சொன்னேன். இந்தியாவை அடைந்ததும் அங்கிருந்து லண்டனில் உள்ள எனது சகோதரருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி ஏதாவது ஏற்பாடுகளைச் செய்திருப்பேன் என கடற்படையினரிடம் தெரிவித்தேன்.

 

கடற்படையினர் சூசையைப் பற்றி உங்களிடம் விசாரிக்கவில்லையா?
எனக்கு சூசையின் தொலைபேசி இலக்கம் தெரியுமா என அவர்கள் என்னிடம் வினவியபோது எனக்குத் தெரியாது என அவர்களிடம் நான் கூறினேன். ஆனால் எனது சகோதரரின் தொலைபேசி இலக்கத்தை அவர்களிடம் கொடுத்தேன்.

 

சூசை ஒரு தொலைபேசியை பயன்படுத்தியதில்லை என்றா சொல்கின்றீர்களா?
அவர் ஒன்றைப் பயன்படுத்தி வந்தார் ஆனால் மே 12ந்திகதி கடைசியாக நான் அவரைச் சந்தித்த போது அவரிடம் தொலைபேசி எதுவும் இருக்கவில்லை.

 

மே 12ந்திகதி எல்.ரீ.ரீ.ஈ யுத்தத்தில தோற்கடிக்கப்படும் என்பதை, சூசை அறிந்திருந்தார் என்று உங்களுக்குத் தெரியுமா?
யுத்தத்தில் நாங்கள் வெல்வோமா அல்லது தோற்போமா என்பதை அவரிடம் கேட்பதற்கு எங்களுக்கு நேரம் இருக்கவில்லை. அவ்வளவு குறுகிய நேரச் சந்திப்பு. ஒரு எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர் எங்களை அவரிடம் கூட்டிச் சென்றபோது நாங்கள் அங்கே நிற்கிறோம் என்பதைக் காணமட்டுமே அவரால் முடிந்தது. அந்தச்சமயத்தில் இராணுவத்தினர் வெகு சமீபத்தில் வந்து விட்டதால் வெகுநேரம் எங்களால் அங்கு நிற்க முடியவில்லை.

 

கடற்படையினர் உங்களை அடையாளம் கண்டு கொண்டபின் என்ன நடந்தது?
எங்களை அவர்களது முகாமுக்கு கொண்டு சென்றார்கள். எங்கள் படகில் துவாரங்கள் ஏற்பட்டு நீர்க்கசிவு ஏற்பட்டதால் படகினை இலகுவானதாக்க நாங்கள் எங்கள் பொதிகள் யாவற்றையும் தூக்கி எறிந்து விட்டோம் மற்றும் நாங்கள் அப்போது உடுத்திருந்த உடைகள் ம்ட்டுமே எங்களிடம் இருந்தது. கடற்படையினர் எங்களுக்கு உடைகளை வழங்கினார்கள்.

 

உங்களது தற்போதைய வாழ்க்கையைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
நாங்கள் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டதும், எனது பிள்ளைகளும் நானும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு தடுத்து வைக்கப் படுவோமோ என எண்ணி நான் ஆழமாக அச்சமடைந்திருந்தேன். ஆனால் திரும்பிப் பார்க்கும் போது நாங்கள் நலமாகவே உள்ளோம்.

 

நீங்கள் நலமாக உள்ளீர்கள் என்று கூறுவதால் நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
அது இப்படித்தான். நாங்கள் எங்களுக்கு உரியது என் நம்புவதிலும் அதிகம் வசதிகள் எங்களுக்கு கிடைத்துள்ளன. பிள்ளைகள் பாடசாலை மற்றும் பூங்கா என்பனவற்றுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். நானும் அவர்களுக்கு துணையாகச் செல்கிறேன். ஆனால் நாங்கள் எங்கள் சொந்த பந்தங்களைப் பார்ப்பதற்கும் மற்றும் வேறு இடங்களுக்கு செல்வதற்கும் அனுமதிக்கப்படவில்லை என்பதை எண்ணும்போதுதான் நான் துக்கப்படுகிறேன்.

 

உங்கள் உறவினர்கள் உங்களுடன் பேசினார்களா?
என்னுடைய சகோதரரும் தந்தையும் லண்டனில் வசிக்கிறார்கள். தொலைபேசி மூலம் அவர்கள் என்னுடன் பேசுவார்கள். அவர்கள் ஒருமுறை என்னைக் காண வந்திருந்தார்கள்.

 

உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?
எனது இரண்டு பிள்ளைகளுக்கும் முறையான கல்வி வழங்கப்பட்டால் அதுவே எனக்குப் போதும் மற்றும் அவர்கள் படிப்பதற்கு வேண்டிய வசதிகள் வழங்கப்பட வேண்டும்.

 

உங்கள் நாளாந்த வாழ்க்கைமுறை என்ன?
நான் காலை 4.30 மணிக்கு எழுந்து எனது பிள்ளைகளுக்கு உணவு தயாரித்து அவர்களை பாடசாலைக்கு அனுப்புகிறேன் அதன் பின்னர் நான் துவைத்தல், வீட்டுச் சாமான்களை அடுக்கி வைத்தல் போன்ற வேலைகளைச் செய்வேன். வெளியே கோவில் மற்றும் பூங்கா என்பனவற்றுக்கச் செல்கிறேன் இரவில் வேலை ஏதுமின்றி இருந்தால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ரசிப்பேன்.

 

மிக முக்கியமான ஒன்றை உங்களிடம் கேட்க மறந்து விட்டேன். நீங்கள் கடற்படையின் படகுகளால் வழி மறிக்கப்பட்டபோது உங்களிடம் 2 கிலோகிராம் தங்கம் மற்றும் ரூபா 600,000 பணம் என்பன உங்களிடம் இருந்ததாக அறிவிக்கப் பட்டிருந்தது. இந்தளவுக்கு தங்கமும் பணமும் ஏன் கொண்டு சென்றீர்களா?
என்னிடம் அவ்வளவு பணம் இருக்கவில்லை, ஆனால் என்னுடையது 200,000ரூபா. மற்றும் றூபுனின் மனைவியுடையது 200,000ரூபா. எங்களோடிருந்த மற்றொருவருடைய பணம் 175,000ரூபா என்பனவே மொத்தப்பணமும். எல்லா தங்க நகைகளும் என்னுடையதல்ல, ஆனால் எங்கள் மூவருக்கும் சொந்தமானது. என்னுடைய தங்க நகைகள் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் பலராலும் பரிசுகளாக வழங்கப்பட்டவைகளாகும்.

 

உங்களைச் சுற்றி யுத்த அழிவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கையில் இவ்வளவு தங்கத்தையும் எப்படி உங்களால் வைத்துச் சமாளிக்க முடிந்தது மற்றும் தப்பி ஓடும்போது ஏன் அவற்றைக் கொண்டு சென்றீர்கள்?
பதில் : நான் தங்கங்கள் யாவற்றையும் ஒரு பெட்டியில் போட்டு நாங்கள் போகுமிடமெல்லாம் அதைக் கொண்டு செல்வேன், எனதுபிள்ளைகளுடையதும் மற்றும் என்னுடையதும் எதிர்காலத்துக்கு பயன்படும் என்கிற எண்ணத்தில்தான்.

 

நன்றி
த நேசன் ஆங்கில இதழ்