நாவலாசிரியர் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின்
சிறுவர் இலக்கியத்துறைக்கான பரிசு
பத்மா இளங்கோவன் பெறுகிறார்..!

 

இந்திய பிரபல நாவலாசிரியர்களில் ஒருவரான கு. சின்னப்ப பாரதி இலக்கியக் கருத்தரங்க நினைவு அறக்கட்டளையின் 4 -ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறுவர் இலக்கியத்துறைக்கான பரிசினைப் பெறுவதற்குப் பிரான்ஸ் நாட்டில் வதியும் பத்மா இளங்கோவன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

 

பத்மா இளங்கோவன் பல வருடங்களாகக் கவிதைகள், பாலர் பாடல்கள், கட்டுரைகள் எழுதி வருபவர். யாழ்ப்பாணம் ‘ஈழநாடு » பத்திரிகை முப்பது வருடங்களுக்கு முன்பு நடாத்திய வெண்பா எழுதும் போட்டியில் வெற்றிபெற்றவர். ‘தினபதி » கவிதா மண்டலத்திலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. தாயகத்திலும் ஐரோப்பாவிலும் வெளிவந்த சஞ்சிகைகளிலும் இவரது ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளன. அன்று பிரான்சில் வெளியாகிய ‘பாரிஸ் ஈழநாடு » ‘ஐரோப்பா முரசு » ஆகிய பத்திரிகைகளிலும் வானொலி, தொலைக்காட்சியிலும் இவரது ஆக்கங்கள் வெளியாகின.

 

பாலர் பாடல்கள் அடங்கிய நான்கு நூல்களை இவர் வெளியிட்டுள்ளார். இன் நூல்கள் புலம்பெயர்ந்த மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அத்துடன் ‘பரிசு » என்ற பெயரில் சிறுவர்க்கான சஞ்சிகையொன்றையும் பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளியிட்டுவந்துள்ளார்.

 

இவருக்கான பரிசு பத்தாயிரம் ரூபா, கேடயம், சான்றிதழ் என்பன அக்டோபர் மாதம் 2 -ம் திகதி நாமக்கல்லில் நடைபெறவுள்ள கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை விழாவில் வழங்கப்படவுள்ளன. இவர் ஐரோப்பாவில் வாழும் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான வி. ரி. இளங்கோவனின் மனைவியாவார்.