வறுமையிலும் சாதனை படைத்து வரும் ஷோபனா! வறுமையிலும், படித்துக் கொண்டே… கால்பந்து போட்டியில் தேசிய அளவில் சாதனை படைத்து வருகிறார் சென்னையில் உள்ள ராணிமேரி கல்லூரியின் உடற்கல்வியியல் மாணவியான ஷோபனா. கால்பந்து போட்டியில் களத்தில் இறங்கினால் சொல்லி கோல் அடிப்பதில் கில்லாடி! அடுத்து இந்திய அணியில் இடம்பிடிக்கும் வேகத்துடன் பயிற்சியை மேற்கொண்டிருந்த ஷோபனாவை சந்தித்தோம்…

* சின்ன வயதிலிருந்தே கால்பந்து விளையாடுகிறீர்களா? எப்படி ஆர்வம் ஏற்பட்டது?

ஆறாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் சீனியர்கள் கால்பந்து விளையாடுவதை ஆர்வத்துடன் பார்ப்பேன். அவர்களிடம் பந்தை வாங்கி நானும் விளையாடி பயிற்சி எடுப்பதை பார்த்த பி.டி.மேடம் என்னை கால்பந்து அணியில் சேர்த்து பயிற்சி அளித்தார். கடந்த பத்து வருடங்களாக கால்பந்து விளையாடி வருகிறேன். ஏழாம் வகுப்பு படிக்கும்போது முதன் முதலாக போட்டியில் பங்கேற்க ஆரம்பித்தேன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளேன். தமிழக அணியில் இடம்பெற்று தேசிய அளவில் போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை ருசித்து வருகிறேன்.

* கால்பந்து தவிர, வேறு விளையாட்டுகளில் பதக்கங்கள் வென்றுள்ளீர்களா?

பாக்ஸிங், பென்சிங் (வாள்சண்டை) ஆகிய போட்டிகளில் மாநில அளவில் பதக்கங்களை வென்றுள்ளேன். வாலிபால் போட்டியில் பள்ளி அளவில் பரிசுகள் பெற்றுள்ளேன். மேலும் ஹாக்கி, கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளிலும் ஆர்வம் உண்டு. நேரம் கிடைக்கும்போது விளையாடுவேன்.

* கால்பந்து விளையாடும்போது ஏடாகூடமாக அடிபடுமே… எப்படி சமாளிக்கிறீர்கள்?

அடிக்கடி நிறைய அடிபடும், காயங்கள் ஏற்படும். ஆனால் பெரிதளவில் நாங்கள் அதை கண்டுகொள்வதில்லை. வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து ஆடுவதால் போட்டி மும்முரத்தில் காயங்கள் பெரிதாகத் தெரிவதில்லை.

* நீங்கள் திருத்திக்கொள்ள நினைக்கும் விஷயம் எது?

கோல் போஸ்ட் அருகில் பந்து செல்லும்போது சில நேரத்தில் மனதில் பயம் ஏற்படும். அந்த பயத்தை போக்கினால் இன்னும் பெட்டராக வருவேன்.

* கால்பந்து விளையாட்டில் உங்களுடைய ஸ்பெஷல் எது? வெற்றிக்கான சூத்திரம் என்ன?

கால்பந்து விளையாட்டில் கோல் போடுவதில் நான் ஸ்பெஷல். எதிரணியை ஏமாற்றும் வித்தையை தெரிந்து கொண்டால் வெற்றியை எளிதாக பெறலாம்.

* உங்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரிய திருப்பமாக எதை கருதுகிறீர்கள்?

ஏழாம் வகுப்பு படிக்கும்போது சேலத்தில் பள்ளி அளவிலான மாநிலப் போட்டி நடந்தது. அந்த போட்டியில் ‘மாற்று வீராங்கனையாக’ இருந்தேன். ஒரு வீராங்கனை வராததால், நான் விளையாடினேன். அப்போது என்னுடைய விளையாட்டுத் திறனை பார்த்த பயிற்சியாளர்கள் வியந்து பாராட்டி, என்னை அணியில் சேர்த்துக் கொண்டனர். அந்த போட்டி எனது வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

* கால்பந்து விளையாட்டுக்கு உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிகவும் முக்கியம்.. அதை மேம்படுத்த என்ன பயிற்சியை செய்கிறீகள்?

நான் எதற்காகவும் ரொம்பவும் அலட்டிக்கொள்ள மாட்டேன். ஆதலால் மனதை எப்போதும் ரிலாக்ஸாக வைத்திருப்பேன். போட்டிக்கு முன்பாக தீவிர பயிற்சி மேற்கொள்வேன்.

* உங்களுடைய சின்ன வயது ஆசை, தற்போதைய லட்சியம் என்ன?

டாக்டர் ஆக வேண்டும் என்பது சின்ன வயது ஆசை. அது முடியாமல் போய்விட்டது. தற்போது கால்பந்து பயிற்சியாளர் ஆக வேண்டும் என்பது லட்சியம். அதற்கான முயற்சியாக, அடுத்து ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்போர்ட்ஸ்’(என்.ஐ.எஸ்)ல் படிக்கப் போகிறேன்.

* உங்களுக்கு பிடித்தது, பிடிக்காத விஷயங்கள் என்ன?

தோழிகளுடன் அரட்டை அடிப்பதும், கால்பந்து விளையாடுவதும் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள். என்னைப் பார்த்து யாரேனும் கோபமாக பேசினால் எனக்குப் பிடிக்காது.

* உங்களால் மறக்க முடியாத போட்டி மற்றும் பாராட்டு எது?

கடந்த மார்ச்மாதம் சிவகாசியில் நடந்த போட்டியில் இறுதியாக நாங்கள் பெற்ற வெற்றி மிகவும் பரபரப்பாக இருந்தது. இந்த போட்டியை மறக்க முடியாது.

எட்டாம் வகுப்பு படிக்கும்போது சென்னையில் நடந்த போட்டியில் நான் கோல் போட்ட திறனைப் பார்த்த பார்வையாளர் ஒருவர் வேகமாக ஓடிவந்து என்னிடம் இருபது ரூபாய் கொடுத்து என்னை பாராட்டியதை மறக்க முடியாது. தற்போது அவர் எங்கள் கல்லூரி அணியின் மேலாளர் என்பது இன்னும் சுவாரஸ்யம்.

* நீங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கும் சென்டிமெண்ட்..?

போட்டியின்போது நான் அணியும் கறுப்புக் கலர் பூட்ஸ். அந்த பூட்ஸ் அணிந்தால் வெற்றி நிச்சயம். அணியாமல் போட்டியில் ஈடுபட்டபோது தோல்வி கிடைத்தது இன்னும் ஆச்சரியம்!

* கால்பந்து விளையாட்டு என்பது மிகவும் கடினமானது… ஒரு பெண்ணாக கஷ்டமாக இல்லையா..?

சின்ன வயதிலிருந்து விளையாடி பயிற்சி பெறுவதாலும், விளையாட்டில் அதீத ஆர்வம் காரணமாகவும் எனக்கு கஷ்டமாக தெரியவில்லை. மேலும், பயிற்சியாளர்கள் சொல்வதை கூர்ந்து கவனித்து சரியாக செய்தாலே போதும். சில நேரங்களில் எதிர்பாராமல் உடலில் அடிபட்டு காயம் ஏற்படுவது அனைத்து விளையாட்டிலும் உள்ளது.

* உங்கள் குடும்பத்தைப் பற்றி…?

அப்பா செல்வம் ஆட்டோ டிரைவர். அம்மா பூமாதேவி அரசியலில் இருக்கிறார். இரண்டு அக்காவுக்கு திருமணமாகி விட்டது. ஒரு தங்கை மற்றும் தம்பி ஆகியோர் படித்துக் கொண்டிருக்கின்றனர்.

பெர்சனல்…

சொந்த ஊர்: சென்னை

செல்லப் பெயர்: ஷோபி

பிடித்த நிறம்: பிங்க்

பிடித்த உணவு: சாம்பார் சாதம்

பிடித்த நாடு: இந்தியா

பிடித்த விளையாட்டு: கால்பந்து

பிடித்த வீரர்: ரொனால்டினோ

ரோல்மாடல்: பயிற்சியாளர் கிருஷ்ணா

பயம்: தவளை

பலம்: எந்த விஷயத்தையும் சிரித்த முகத்துடன் அணுகுவது

பலவீனம்: இடம், சூழல் தெரியாமல் சில நேரங்களில் நடந்துகொள்வேன்

அடிக்கடி வரும் கனவு: கால்பந்து போட்டியில் கோல் அடிப்பது போல்

பொழுதுபோக்கு: டி.வி. பார்ப்பதும், கால்பந்து விளையாடுவதும்

யாரை சந்திக்க ஆசை: கிரிக்கெட் வீரர் சச்சினை சந்திக்க ஆசை

‘மாணவிகளுக்காக கல்லூரியில் மினி ஜிம்’

ஷோபனா குறித்து ராணிமேரி கல்லூரியின் உடல்நலக் கல்வி மற்றும் விளையாட்டுத்துறை பேராசிரியை உமா கூறுகையில், « ரொம்பவும் அர்ப்பணிப்பு குணமுள்ள வீராங்கனை ஷோபனா. சோம்பேறித்தனமே இல்லாத பெண். எப்போதும் பயிற்சி செய்து கொண்டே இருப்பாள். தற்போது தமிழக அணியில் உள்ள ஷோபனா, விரைவில் இந்திய அணியில் இடம் பெற்று சர்வதேச அளவில் சாதனை நிகழ்த்துவாள். எங்கள் கல்லூரியில் விளையாட்டுக்கான மைதானத்தை இன்னும் இம்ப்ரூவ் செய்ய வேண்டும். சிந்தெடிக் கிரவுண்ட் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அடுத்து மாணவிகளுக்காக மினி ஜிம் ஒன்றை உருவாக்க முயற்சி எடுத்து வருகிறோம். எங்கள் கல்லூரியின் முதல்வர்(பொறுப்பு) டாக்டர் அம்புஜம், விளையாட்டுத் துறை மாணவிகளுக்கு மிகுந்த ஊக்கமும் ஆதரவும் அளித்து வருகிறார், » என்றார்.