காதல் மகிழ்ச்சி வெள்ளத்தில்
சாதலை எண்ணாக் காலத்தில்
புனல்பெருக்கி ஓடும் நதிபோல்
காதலரைக் காண ஓடும் நாள்

 

சிரம்சுமந்த கீரிடத்தை உதறித்தள்ளி
பூரிப்புத் தரும்காதலர் இனிமையில்
உறுதியோடு இணைந்த நெஞ்சத்துக்
காதலின்ப நீந்தலாடும் பொன்னாள்

 

தடைவிதித்தாலும் சிறை வைத்தாலும்
தேன்மலரைத் தேடிப்பறக்கும் வண்டாய்
சூல்கொண்ட முகில் கூட்டம் கூட்டமாய்
பூமழை பொழிந்திடச் சங்கமிக்கும் நாள்

 

பாமணத்தால் பாடிமகிழும் கவிதை
மழைபொழிந்து பரிசுடன் சேலைவனப்
பூக்கள் அலங்கரிக்கும் செண்டுகள்
பரிசளித்து மகிழ்வுறும் திருநாள்

 

காதலர் ஒத்திகை நிகழ்வினுக்கு
மாசி பதனைந்து அரங்கேற்ற நாள்
விளக்கேற்ற ஒளி சுடர்வது போல்
காதலர் முகம் பொலிவுறும் திருநாள்

 

மடைதிறந்த நினைவுகள் வளர்த்து
விருப்பம் போல் காதலின் சின்னம்
இதயத்தைக் குறியீடாக காதலரின்
தீயாகத்தைச் சிவப்புடன் இணைக்கும் நாள்

 

காதல் வானம் வரும் புகழ்சுமந்த
காதலர் தினம் கி.பி 496களில் பிறந்தது
வலன்டைன் காதல் சொல்லானது
காதலை இணைத்த துறவியின் பெயரானது

 

நிலமாளும் சக்கரவர்த்தி கிலௌடியஸ்
திருமணத்திற்கு போட்டசட்டம் எதிர்த்த
துறவியின் தொழுகையும் துணிவும்
சங்கமிக்க காதல்வெற்றி கண்ட நாள்

 

அனல்முகம் காட்டிய கிலௌடியஸ்
மன்னனை எதிர்த்து இச்சையைத்துறந்த
பாதிரியார் காதலரை ஒன்றிணைத்தார்
தடைவிதித்தாலும் காதல்கதிர் நின்றுடுமா?

 

இணைவிழிகள் நோக்கும் சுகம்தனை
மடிமீது துயிலத்துடிக்கும் நெஞ்சங்களை
படைவீரத்தால் தடுக்கத்துடித்த மன்னன்
பாதிரியாரச் சிறைவைத்துச் சிரசறுத்தான்!

 

கோவிலுக்குள் தினம்தோறும் வழிபாடு
நடத்தும் தூயதுறவி சிறையதிகாரி
மகள் மீதினில் காதல் கொண்டது எப்படி?
பாட்டுச் சிந்தனை காரனுக்கே வியப்பாகும்!

 

துறவியின் நரம்புகளில் காதல் நதிவேகம்
ஆழமாக ஓட காதலிக்கு ஓலை வரைந்தார்
வலன்டைன் எனக்கையெழுத்து இட்டார்
இதுவே காதலருயிரின் உயிரெழுத்தானது

 

மரணத்திலும் வலன்டைன் உயர்தியாகம்
காதலர் எண்ணத்தில் காதல் வண்ணத்தில்
காதலர் தினம் உதயமான காவியம் பிறந்தது
ஆர்வமுடன் கொண்டாடி மகிழ்கின்றோம்

 

நேற்றிருந்தார் இன்றில்லை எனுமிந்த
நிலவுலகின் கோட்பாட்டை மாற்றியதுறவி
படைவீரத்தால் பாதிரியின் சிரசறுத்தபின்னே
கிலௌடியஸ் மன்னன் கீர்த்தியே மாண்டது

 

அறம்தவறிய அனீதியின் அட்டூழியத்தால்
நெஞ்சைத் தாலாட்டும் அன்பை அழித்துவிட்டு
காதலுக்குக் கல்லறைகட்டி விடமுடியாதெனும்
பாதிரியார் புகழ்பெயர் கீரிடம் சூடிக்கொண்ட நாள்

 

தமிழரின் சாதிசீதன சீரழிவோதுதல் நிலைகள்
இல்லாதொழிய காதலர் சந்திப்புக்கள் தினம்
கட்டாயம் எழுந்துனிற்றல் நன்மை என்றாடுக
தடைகளை உடைத்தெழுதல் உண்மை

 

வானப்பிரதேச நீலனிறம் மறைவதில்லை
கானமிசைக்கும் காதலும் காலம்பாடும்
தமிழ்குடும்பம் செப்பும் சாதிசமயபேதமும்
மறைந்திடும் மேன்மையான காதலர்தினம்

 

சென் வலன்டைன் காதலியின் ஆழத்தில்
நிலைத்துப் பாரிலோர் காதல் கவிபாடுகின்றது
உண்மையாகக் கனிந்தகாதல் கடிதங்களில்
ஒப்பமிட்டு பிரிவென்பது இல்லை என்றெழுது

 

இவ்வுலகம் கேட்பதற்கு என்றும் இனிக்கின்ற
நாளிது வெற்றித் திருநாள் சென்வலன்டைன்டேய்
காவியமாய் ஓவியமாய் இருக்கும் காதலர்தினம்
தூயகாதல் இணைவில் காலமெல்லாம் வாழும்

 

அக்கினிக்கவிஞர்
மா.கி.கிறிஸ்ரியன்