வாலி,அப்துல்ரகுமான்,கனிமொழி, திருமாவளவன் : காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதை போர்!

 

ரு பூச்செடிக்கு தண்ணீர் ஊற்றத்தெரியாதவன் ஒரு பெண்ணை காதலிக்கமுடியாது… ஒரு பறவையை வளர்க்கத்தெரியாதவன் ஒரு பெண்ணை நேசிக்க முடியாது… மழையில் நனையத்தெரியாதவன் ஒரு பெண்ணை முத்தமிடமுடியாது… அம்மாவின் தாலாட்டை அறியாவதன் ஒரு பெண்னை பெயர் சொல்லி அழைக்கமுடியாது.

 

பூச்செடியை தெரியாதவனுக்கு பறவையை தெரியாதவனுக்கு மழையை தெரியாதவனுக்கு தாலாட்டை தெரியாதவனுக்கு காதலைப் பற்றி என்ன தெரியும்? காதல்… பாரதியின் மீசை முள்ளில் முளைத்த ரோஜா… ரோஜாக்களில் இல்லை தலித் ரோஜா, வன்னியர் ரோஜா,  நாடார் ரோஜா, நாயக்கர் ரோஜா, தேவர் ரோஜா…. இன்று காதலை பூவாக மட்டுமல்ல ஒரு ஆயுதமாகவும் ஏந்த வேண்டியிருக்கிறது.

 

தீவைத்து கொளுத்துங்கள்…தூக்குக்கயிற்றில் தொங்கவிடுங்கள்…திராவகத்தை வீசுங்கள்… விஷத்தை அள்ளி ஊட்டுங்கள்…அதன் பிறகும் வரும் காதல்’- சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம் நடத்திய வன்மத்தில் சிறைபடுமோ காதல் என்ற திறந்தவெளி கவியரங்கத்தில் கவிஞர் பழனிபாரதி வாசித்த கவிதையின் ஒரு சிறு பகுதிதான் இது.

 

பிப்ரவரி 14 நாளை காதலர்தினமாக உலகம் முழுக்க கொண்டாடிக்கொண்டிருக்கும் நேரத்தில் காதலர்தினத்தை கொண்டாடுவது முட்டாள்தனம் என்று எதிர்ப்பு தெரிவித்து சில இயக்கங்கள் அமைப்புகள் எதிர்ப்புக்குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் இந்த நாளில்தான் கவிஞர் வாலி தலைமையில் கவிஞர் கனிமொழி முன்னிலை வகுக்க காதலை கொண்டாடும் நிகழ்வு கடற்கரை காற்றுவீச  கவிக்கோ அப்துல்ரகுமான்,  தேவதேவன், பா. செயப்பிரகாசம், கவிஞர் மனுஷ்யத்திரன், பழனிபாரதி, யாழன் ஆதி  உள்ளிட்ட கவிஞர்களின் உணர்ச்சி கவிதைகளால் பொங்கி வழிந்தது.  நிகழ்வின் ஆரம்பத்தில் காதலனால் (?)  ஆசிட் வீசப்பட்டு உயிரிழந்த வினோதிக்கு அஞ்சலி செலுத்தி கவிதை ஆர்ப்பாட்டம் தொடங்கியது.  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் கவிதை வாசித்தார்.

 

காதல் கவிதைகள் வாசிப்பதற்கு முன் மனுஷ்யபுத்திரன், “காதலுக்கு எதிராக ஒரு அரசியல் கட்சி செயல்படுவதும் அதற்குக்கீழ் பல இயக்கங்கள் சேர்ந்து வன்முறையை தூண்டுவதும்  இந்தியாவில்யே மிகப்பெரியக் கேவலம்.  காதலர்களின் மனித உரிமை தினம். இன்றைக்கு காதலைகொண்டாடுவோம். காதலை கொண்டாடுவது என்பது வாழ்வை கொண்டாடுவதுபோல். காதலுக்கு எதிர்ப்பாக இருப்பவர்கள் வாழ்க்கைக்கு தமிழ்பண்பாட்டுக்கு எதிராக இருப்பவர்கள். இந்த நாளில் நாய்க்கும் நாய்க்கும் என விலங்குகளுக்கு திருமணம் செய்துவைப்பவர்களை அந்த விலங்குகளுக்கே திருமணம் செய்துவைக் கவேண்டும்” என்று சொல்ல சிரிப்பலையுடன் கைகளை தட்டினார்கள்.

 

கவிஞர் வாலியின் கவிதை வாசிப்பில்தான் வாலிபர்களுக்கு உற்சாகம் உணர்வும் திணறிடித்தது. விலக்கப்பட முடியாத கனி என்ற தலைப்பில்  கவிதை வாசித்துக்கொண்டே இருக்க.. ‘நாடகக்காதல்- ஒப்பனைக் காதல்…. ஊடகக்காதல்- விற்பனைக்காதல்…ஏடகக்காதல்- கற்பனைக்காதல் இவற்றை இந்த மண் நிராகரிக்கவேண்டும்; இவை நிசமல்ல; நிசமான காதலை நிராகரிப்பது- நம் வசமல்ல!’ என்றும்… ‘வாடவிடாதே- உனைதிருமுகத்தை; வீசிவிடாதே- உனை விரும்பாதவள் மேல் திராவகத்தை!’ என்றும் தாழ்ச்சி உயர்ச்சியெனும் சூழ்ச்சி வீழ்ச்சியுற- தமிழ் இளைஞனே! காதல் தவம்புரி; எம தர்மபுரி ஆகாது- சம தர்மபுரி ஆகும் தர்மபுரி’ என்று வாசித்து முடிக்க  திரந்தவெளி அரங்கம் உணர்வுகளால் அதிர்ந்தது.

 

கவிஞர் கனிமொழி, “திருமணம்  என்பதே தங்கமும் தட்ச னையும் தீர்மானிக்கும் இந்த தேசத்தில் காதல் மணம் மட்டும் வசதிபார்த்து வருகிறதாம். ஜாதிக்குள்ளே ஜாதகம் பார்த்து சுற்றம்பார்த்து பெண்ணெடுக்கும் சம்பவத்தில் அவள் கொண்டுவரும்…………..காசுக்கு கைத்தளம் பற்றும் கணவன்கள் எத்தனை?    மனிதனுக்கும் மிருகத்துக்குமா திருமணம்? இதில் கலப்பு எங்கே வந்தது என்று கேட்ட அய்யாவின் தேசத்தில்!

 

நூராண்டுகள் கழித்தும் காதலை வாழவிடு கவியரங்கில் பாடுகின்றோம்.  கருப்பு கண்ணாடிக்கும் கால்சட்டைக்குமா களவுபோகிறாள் இன்றைய தமிழச்சி….வர்ணாசிரமம் எல்லைகள் தாண்டி ஆணாதிக்க விழுமியங்களின் அணிவகுப்பு ஜாதிவெறி. சிறகு முளைத்து வானத்தின் விஸ்தாரங்களை அளக்கத் துடிக்கும் பெண்ணை கால்முறித்து பூட்டிவிடும்  முகமூடி மாற்றிய கயமை. தெருவெல்லாம் பூச்சாண்டி என்று சமயலரையில் பூட்டும் சாகசம். இன்னும் எத்தனை தலைகள் தேவை உங்கள் கொலையை தணிக்க… இன்னும் எத்தனை தலைகள் தேவை உங்கள் கொள்ளைகளை தவிர்க்க  இன்னும் எத்தனை இளம் உட்கள் வேண்டும் மேடை கட்டி கோஷம் போட…எரிந்துவிழும் சூளைகளுக்கு எத்தனை மவுன மரணங்கள்….அடங்கமறு ஒடுங்க மறு உன் வாழ்க்கை உன்கையில்” என்று வாசித்து முடிக்க கைதட்டல்கள் அதிர்ந்தன. திருமாவளனும் காதலுக்கு எதிரானவர்களுக்கு எதிராக கவிதை போர் புரிந்தார்!

 

-மனோ