நடிகர், இயக்குனர், நாடக ஆசிரியர், வானொலி-தொலைக்காட்சி  நிகழ்ச்சித் தயாரிப்பாளர், மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர், அறிவிப்பாளர், சில சமயங்களில் கவிஞரும்கூட… இப்படியாக பல ஆச்சரியங்களுக்குச் சொந்தக்காரர்  இந்த பல்கலை வித்தகரான நண்பர் கே.பி.லோகதாஸ் அவர்கள். அகவை ஐம்பதை நிறைவு செய்து தொடர்ந்தும் கலைப் பணியில் தன்னை அர்ப்பணித்து வரும் திரு.கே.பி.லோகதாஸ் அவர்களை பிரான்ஸ் திருமறைக் கலா மன்றம் 2012ம் ஆண்டு நடாத்தும் கலைவண்ணம் நிகழ்வில் கௌரவிக்கும் மகிழ்ச்சியான இந்த நேரத்தில் அவரை நேர்காணல் செய்த போது, அவர் சொன்ன நவரசமான, அர்த்தம் நிறைந்த பதில்கள்…

 

வணக்கம் திரு.லோகதாஸ்அவர்களே…

 

 

வணக்கம் திரு.வண்ணை அண்ணா. முதலில் உங்களிடம் பணிவான சின்ன திருத்தம் ஒன்று. பல்கலை வித்தகர் என எனக்கு அடைமொழி இட்டுள்ளீர்கள் நான் என்றும் பல்கலை ஆர்வலனாகவே இருக்கின்றேன்

 

நல்லது. புலம் பெயர்ந்த பின்னர் நீங்கள் ஆற்றிவரும் கலைப்பணி அனேகமாக அனைவரும் அறிந்ததே! ஈழத்தில் உங்களது கலைப்பணியைப்பற்றி அறிய விரும்புகின்றோம். அதுபற்றி சொல்லுங்கள்?

 

எனது பாடாசலைக் காலத்தில் இருந்தே கருக்கொண்டு, உருக்கொண்டது எனது கலை ஆர்வம். எழுபதின் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் நாற்பத்தெட்டு பாடசாலைகளின் சாரணிய இயக்கம் முகாமிட்டிருந்தது அன்று இரவு நடைபெற்ற கலை நிகழ்வில் பங்குபற்றிய அந்த நாப்பத்தெட்டுப் பாடசாலைகளின் நாடகங்களில் நான் சார்ந்த கல்லூரியின் நாடகம் ஐந்தாவது இடத்தைப் பெற்றது. அதுவே எனது கலை வாழ்விற்கு வித்திட்ட முதல் நிகழ்வு எனச் சொல்லாம். இப்பாடியான எனது கல்லூரிக் காலங்களிலேயே எனது கலை ஆர்வத்தை வளர்க்கக்கூடிய பல சந்தர்ப்பங்கள் கிடைத்தது.

 

1978 ஆண்டு நல்லூரில் நடைபெற்ற ஒரு பொங்கல் விழாவில்த்தான் கல்லூரிக்கு வெளியே முதன் முறையாக ‘விசாரணை » என்னும் அரச நாடகத்தில் தளபதியாக வரும் முக்கிய பாத்திரத்தில் நடிப்பதற்காக ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்த காலத்தில், ஒத்திகையில் எனது நடிப்பைப் பார்த்த நல்லூரில் உள்ள வேல்விலாசின் அதிபர் திரு.சந்திரகுமார் அவர்கள், தான் பிரபல நகைச்சுவை நடிகர் அமரர் குமார் தனபாலுடன் இணைந்து ஒரு நகைச்சுவை நாடகத்தை அரங்கேற்றுவதற்காக ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்த வேளையில் குமார் தனபால் அவர்கள் தம்பி கொழும்பிலே நாடகத்தில் பரபரப்பாக இருந்த காரணத்தால் அந்தப் பாத்திரத்தில் என்னை நடிக்கவைத்தார். இந்த இரண்டு நாடகங்களும் ஒரே மேடையில் அரங்கேற்றப்பட்டு என்னை பலரின் பாராட்டுதல்களோடு பெரும் நடிகனாக மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததால் எனது கலைப்பயணம் தொடர்வதற்கு பெரும் வாய்ப்பாக இருந்தது.

 

 

ஈழத்தில் நீங்கள் இணைந்து நடித்த கலைஞர்களில் நீங்கள் ரசித்த, மதித்த கலைஞர் யார்?

 

குறிப்பிட்டு ஒருவரைச் சொல்லமுடியாது. அது நாகரீகமும் அல்ல. பலர் இருக்கின்றார்கள். தம்பி கொழும்பிலே புகழ் குமார் தனபால், கன்னிராசியஸ் தங்கராசா, வேல்விலாஸ் அதியர் தங்கராசா, தம்பி கொழும்பிலே நாடகத்தில் நடித்த சோமண்ணை, கண்டறியாத கைலாயம், மகேந்திரன், பாலா, தர்மேந்திரன் பெண் நடிகை நையந்தி இப்படி இன்னும் பலர் இருக்கின்றார்கள். இவர்களில் கதையே இல்லாமல் அருகில் இருக்கும் நடிகர்களை வைத்து உடனடியாக ஒரு நாடகத்தை அரங்கேற்றுவதற்கு குமார் தனபால்போல் இன்னொரு நடிகனைப் பார்க்க முடியாது. அதுபோல நாடகங்களில் பெண் வேடங்களில் மேடையில் தங்கராசா தோன்றி நடித்தபின் இவரை உண்மையான பெண் என நினைத்து பிந்தொடர்ந்த வாலிபர்களும் உண்டு! இவர்களுடன் இணைந்து நடித்த காலங்களில் நானும் நடிப்பதற்கு ஊதியம் வாங்கிய நாட்கள் பல உண்டு.

 

ஈழத்துக் கைலைஞர்களில் நீங்கள் மதிக்கும் மூத்த கலைஞர் யார்?

 

ஒருவரல்ல பலர் இருக்கின்றார்கள். வானொலி நாடகங்களில் சில்லையூர் செல்வராசன், முகத்தார் யேசுறட்ணம், அப்புக்குட்டி ராஐகோபால், வரணியூரான், அண்ணைறைற் பாலச்சந்திரன், ஏ.எம் வாசகர், போன்றவர்கள் இசை நாடகத்தில் நடிகமணி வி.வி.வைரமுத்து, தவில்க் கலைஞர் தட்சணாமூர்த்தி, திரைப்படத்துறையில் ஏ.ரகுனாதன், வி.பி.கணேசன், பொப்பிசைக் கலைஞர்கள் நித்தி கனகரட்ணம், ஏ.ஈ.மனோகரன், நகைச்சுவைக் கலைஞர்களில் குமார் தனபால், சக்கடத்தார் ராஐகுமார், டிங்கிரி-கனகரத்தினம், சிவகுரு, அடங்காப்பிடாரி நாடகத்தில் நடித்த குணமண்ணை, பரமானந்தம், நடராஜா, வெளிக்கிடடி விசுமடு நாடகத்தில் நடித்த பரமநாதன், மற்றும் கலைக்காவலர் சி.தர்மலிங்கம், நவாலியூர் நா.செல்லத்துரை, வி.ரி.ஏ.விஸ்வா, கர்னாடக சங்கீதத்தில் திரு.குலசீலனாதன், திரு.கருணாகரன் இப்படியாக எனது மதிப்பிற்குரியவர்களாக இன்னும் பலர் இருக்கின்றார்கள்.

 

 

கலைத்துறையில் தாயகத்திலேயே பல மேடைகளைக் கண்டு அனுபவங்கள் பலவற்றைப் பெற்ற நீங்கள் புலம்பெயர்ந்து கலைப்பணி ஆற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் இல்லாதிருந்த காலங்களில் உங்கள் மனனிலை எப்படி இருந்தது?

 

நான் பிரான்ஸ் வந்தது 1981ம் ஆண்டு நான் மட்டுமல்ல அந்த காலகட்டங்களில் வந்த அனைவருக்கும் தங்கள் தங்கள் வாழ்க்கையை ஸ்த்திரப்படுத்துவதே முக்கிய நோக்கமாக இருந்ததால் எனது கலை ஆர்வத்தை ஒரு பக்கமாக ஒதுக்கி வைக்கவேண்டியதாகவே இருந்தது. அதேனேரம் அதற்கான சந்தர்ப்பங்களும் அமையாததால் அதைப்பற்றி தீவிரம் கொள்ளவில்லை.

 

இன்று கலைத்துறையில் தாய் மண்ணில் இருந்து செய்யமுடியாத பல செயல்களையெல்லாம் நம்மவர்கள் செய்வதைப் பார்த்து என்ன நினைக்கின்றீர்கள்?

 

கலைத்துறையில் வானொலி, தொலைக்காட்சி பத்திரிகைள் என சிகரத்தைத் தொட்டிருக்கின்றார்கள் இலக்கியத்தில் ஏராளமான புதிய படைப்பாளிகள் தங்களை இனங்காட்டியிருக்கின்றார்கள். மற்றும் குறும்படங்கள், நாடகங்கள் நடன அரங்கேற்றரங்கள் இசை நிகழ்வுகளோடு வேறுபல துறைகளிலும் நம்மவர்கள் அசத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இதேவேளை முப்பதாண்டுகால யுத்தகால அவலங்களுக்குள்ளும் நம்மவர்களுடைய ஆரோக்கியமான பல படைப்புகள் வந்ததையிட்டு பெருமைப்படாமலும் இருக்க முடியாது.

 

 

நீங்கள் தாய் மண்ணில் இருந்து புலம்பெயர்ந்த பின்னர் இதை இழந்து விட்டேன் என எண்ணியது எதை? அங்கு பெறமுடியாததை இங்கு பெற்றுவிட்டேன் என எண்ணி மகிழ்ந்தது எதை?

 

தாய் மண்ணில் துக்கரமான ஒரு நிகழ்வில் நின்றால்க்கூட எமக்கு ஏற்பட்ட இழப்புக்கள், இழப்புக்களே இல்லை என்பது போன்ற உணர்வுடன் வாழ்ந்தோம். ஆனால் இங்கு ஒரு மங்களகரமான நிகழ்வில் நின்றால்க்கூட ஒரு மனனிறைவு கிடைப்பதில்லை! மகிழ்வென்பது இங்கு உள்ளார்ந்தம் சார்ந்தது அல்ல? சம்பிரதாயம் சார்ந்தது!. இங்கு பல்லின மக்களுடைய நட்புக்களைப் பெற்று அவர்களுடன் ஒருங்கிணைந்து வாழ்வது அங்கு பெறமுடியாதது.

 

ஈழத்தில் கலைப்பணி ஆற்றுவதற்கும் இங்கு கலைப்பணி ஆற்றுவதற்கும் என்ன வேறுபாடுகளைக் காண்கின்றீர்கள்?

 

மற்றவர்களுக்கு என்னமாதிரியோ தெரியாது. எனது மனதில் பட்டதைச் சொல்லுகின்றேன். அங்கு ஒரு குறிப்பிட்ட வீதத்தினரே கலையைத் தொழிலாகச் செய்தார்கள். இன்னுமொரு குறிப்பட்ட வீதத்தினர் வேறொரு தொழிலையும் செய்துகொண்டு, பகுதி நேரமாக கலையைச் செய்து தங்களை தக்கவைத்துக்கொண்டார்கள். பெரும்பாலன கலைஞர்களில் கலைத்துறைக்கே தங்களை அர்ப்பணித்து தம்மை அழித்துக் கொண்டவர்களும் உண்டு. ஆகவே இந்தத்துறை பெரிய பொருளீட்டும் துறையல்ல! பொருளீட்டும் துறையே சமூகத்தின் நிறைவான அங்கிகாரத்திற்கு உள்ளாகும். புலத்திற்கும் அது பொருந்தும். இங்கும்சரி, அங்கும்சரி பெரிய வேறுபாடு எதுவும் இல்லை!

 

 

இங்கு மேடை நாடகங்கள் தவிர தொலைக்காட்சி நாடகங்கள், வீடியோத்தரைப்படங்கள் பலவற்றில் நடித்திருக்கின்றீர்கள். சில தொலைக்காட்சி நாடகங்களிற்கு கதை, உரையாடல்களை எழுதி இயக்கி இருக்கின்றீர்கள், வானொலி தொலைக்காட்சிகளிலெல்லாம் பல நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியிருக்கின்றீர்கள் ஈழத்தில் வாழ்ந்திருந்தால் இப்படியான வாய்ப்புக்கள் கிடைத்திருக்கும் என நம்புகின்றீர்களா?

 

மனிதவாழ்வு பல விநாக்களும், வியப்புகளும் கொண்டது. எது எப்படி நடக்கும் என்பதில் உத்தரவாதமில்லை! நேற்றும், இன்றும் சொல்ல முடிந்தவை. நாளை என்பது கேள்விக்குரியவை. எது எப்படியும் நடந்திருக்கலாம் தரமான விதைக்கு தரை ஒரு பிரச்சனையே அல்ல! அங்கு விதைத்ததுதானே இங்கு முளைத்தது. ‘என்று சிரித்தார்! அதில் ஒரு தன்னம்பிக்கை தெரிந்தது. »

 

உங்களுடைய கதை, வசனம், இயக்கத்தில் உருவான ‘கிடுகுவேலிக் கீதங்கள், நாடகம். நீந்தத் தெரியாத மீன்கள் » தொலைக்காட்சி நாடகம். இவைகளைப்பற்றி இன்றும் பலர் பாராட்டுகின்றார்கள். ஆனால் அவைகளுக்குப்பின் நீண்ட காலமாக உங்களுடைய படைப்புகள் எவற்றையும் காணவில்லையே? அவைகளோடு திருப்தி அடைந்து விட்டீர்களா?

 

ஒரு படைப்பாளிக்குதன் படைப்புச்சார்ந்த திருப்தி வரவே கூடாது. நானும் அப்படித்தான். ஒரு படைப்பை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு முன்பாக அந்தப் படைப்புச்சார்ந்து அந்தக் கலைஞன் அதனோடு கரைந்துபோய்விட வேண்டும். அது தற்பொழுது எனக்குச் சாத்தியமில்லாமலேயே இருக்கின்றது. ஒன்றை அறிந்துகொள்ளுங்கள் எனது கலைசார் உழைப்புக்கள் சில இடங்களில் களவுபோய் இருக்கலாம்! ஆனால் எனது இருப்புக்கள் எவையும் எவரிடமும் களவு போய்விடவில்லை அது என்னிடம்தான் இருக்கின்றது என்பதுதான் எனது பணிவான பதில்.

 

 

நீங்கள் மற்றவர்கள் பார்த்து வியந்து பாராட்டும்படி தரமான கலைப் படைப்புகளை கொடுத்திருந்தாலும் தற்பொழுது நீங்கள் வியந்து பார்க்கும் கலைஞர் யார்?

 

முன்னோடிகளாக இருந்தவர்கள் அனைவரையும் நான் வியந்து பார்க்கின்றேன். அந்த வரிசையில் பாரிசில் முதன் முதலில் இருபதே நிமிடங்களான ‘எங்களுக்குள் இவர்கள் » என்னும் குறும்படத்தை நான் இயக்கியவன் என்ற வகையில் சந்தோஷமடைகின்றேன். ஆனால் இன்று நான் வியந்து பார்ப்பது இன்று குறும்படங்களை எடுத்து வெற்றிக்கொடிகளை நாட்டும் தம்பிமார்களை. ஆதலால்த்தான தம்பி சுதர்சன் எழுதி இயக்கும் ‘பதில் » என்னும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றேன்.

 

தற்பொழுது நாடகங்களைவிட குறும்படங்கள் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெறுகின்றது. அதுவும் இளைய தலை முறையினரே குறும்படங்களில் சாதனை படைக்கின்றார்கள். உங்களுக்கு அப்படியான முயற்சிகளில் ஈடுபடும் உத்தேசம் இருக்கின்றதா? அல்லது இளைய தலை முறையினருடன் முட்டி மோதாமல் ஒதுங்கிவிட்டீர்களா?

 

இல்லை அப்படியல்ல! குறும்படங்களுக்கான வியாபாரச் சந்தை உருவாகும் பட்சத்தில் நானும் தாராளமாக இணையலாம்.

 

பிரான்சில் இளைய தலைமுறையினரின் கலைப் படைப்புக்கள் பற்றி?

 

குறும்படங்களில், மேலத்தேய நடனங்களில், இசைக் குழுக்களிலெல்லாம் இளைய தலை முறையினரின் ஆதிக்கம் இருப்பது பாராட்டிற்குரியது. ஆனால் மேடை நாடகங்களில் ஈடுபாடு இல்லாதிருப்பது அபாயகரமானது!. ஆகவே இந்தத் துறையிலும் அவர்கள் தீவிரமாச் செயல்ப்படவேண்டும்.

 

 

கலைத்துறைக்கும் அப்பால்ச் சென்று ஊடகத் துறைக்குள் நுளைந்து ‘கதம்பம் » என்னும் சஞ்சிகைக்கு ஆசிரியராக இருந்திருக்கின்றீர்கள். தரமான புத்தகம் என பலராலும் பாராட்டப்பட்ட ‘கதம்பம் » ஒரு இதழுடன் நின்றுபோனதற்கு காரணம் என்ன? அது உங்களுக்கு தோல்வியா?

 

ஒன்றல்ல இரண்டு இதழ்கள் வெளிவந்திருக்கின்றது. புலத்தில் கலைஞர்களுக்காக வெளிவந்த முதல்ச் சஞ்சிகை கதம்பம் என்பதில் பெருமைதான். அதைத் தொடரமுடியாமல் போனது துரதிஸ்ரம்! அதற்குக் காரணம் வேறு சுமைகளும், பொருளாதாரமும். ஒரு வேகத்தில் வெளிவந்து அதே வேகத்தில் நின்றுவிட்டது! அவ்வளவுதான்.

 

இங்கு பலரும் அறிந்திருக்காத ஒரு விடயம் அரிய வாய்ப்பாக பிரான்ஸ் திரைப்படம் ஒன்றில் நடித்திருக்கின்றீர்கள்! அதற்கான சந்தர்ப்பம் எப்படிக் கிடைத்தது? அந்த திரைப்படத்தில் நடித்த அனுபவம் எப்படியானது?

 

Mk; ‘La Poudre Aux Yeux »  என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கின்றேன். அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வீட்டில் எனது நண்பரொருவர் வேலை செய்து கொண்டிருந்ததால் ஆசிய நாட்டவரொவர் நடிக்கவேண்டிய அந்தப் பாத்திரத்திற்கான நேர் முகத் தேர்விற்கு வந்த நாற்பத்தெட்டுப் பேர்களில் ஒருவனாகச் சென்று தேர் வானது அதிஸ்ற்ரம்தான். பிரெஞ்சுக் கலைஞர்களுடன் பணியாற்றியது மிக வித்தியாசமான அனுபவம். நாலு நாட்கள் படிப்பிடிப்பு நடந்தது! சம்பளப்பட்டியலுடன் ஊதியம் தந்தார்கள்! இந்தத் திரைப்படம் 1994ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற Selectionne Au Festival de Sarasota 94 என்ற திரைப்படவிழாவிலும், பிரான்சில் நடைபெற்ற Festival deu Cinema des Mondes Latinsarcachon-94 என்ற திரைப்பட விழாவிலும் கலந்துகொண்டு 1994ம் ஆண்டில் ஐரோப்பியரின் சிறந்த திரைக்கதை வசனத்திற்கான விருதையும் பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

கலைச்சுடர் வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது…?

 

ஊடகங்களில் இன்று முன்னனி வகிப்பது இணைய தளங்கள்தான். அந்த வரிசையில் கலைச்சுடர் மக்கள் உடனடியாகத் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளையும், சமூகப் பொறுப்பான ஆக்கங்களையும், நமது கலைஞர்களுடைய ஆற்றல்களையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. அந்தப்பணி தொடர எனது வாழ்த்துக்கள்.

 

நன்றி திரு.லோகதாஸ் அவர்களே!
உங்களுக்கும், என்மீது பற்றும் பாசமும் கொண்ட அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள்.

 

கலைஞர்காவலர், மனிதருள்,
கலைக்கரும்பு-வண்ணைதெய்வம்