பிரான்ஸ் திருமறைக் கலா மன்றத்தினரால் கடந்த 20-10-12 சனிக்கிழமை பாரிசில் நடைபெற்ற கலைவண்ணம் 12 நிகழ்வில் பலவிதமான கலை நிகழ்வுகளோடு பாரிசில் வாழ்ந்துவரும் பல்துறைக் கலைஞர் கே.பி.லோகதாஸ் அவர்களும் கௌரவிக்கப்பட்டார்.

அருட்கலாநிதி மரியசேவியர் அடிகளாரின் ‘கலைவழி இறைபணி » என்னும் தாரக மந்திரத்தோடு இயங்கிவரும் திருமறைக் கலா மன்றம் நடாத்திய கலைவண்ணம் 12 நிகழ்ச்சிகள் 20ம் திகதி சனிக்கிழமை மாலை சரியாக 5-30க்கு மங்கள விளக்கேற்றல் நிகழ்ச்சியுடன் ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து அக வணக்கத்துடன் மன்ற கீதம் இசைத்தல் போன்ற நிகழ்வுகளுடன் முதலாவது நிகழ்வாக வரவேற்பு நடனம் இடம்பெற்றது. மேலும் ஒருசில நடன நிகழ்வுகளும் கலைவண்ணத்தை அலங்கரித்தது நிகழ்விற்கு சிறப்பாக அமைந்திருந்தது. நிகழ்வுகளில் ‘அடங்காப்பிடாரி » புகழ் கலைஞர் என்.ரி.குணம் அவர்கள் திரைப்படப் பாடல்களுக்கு வாயசைத்து அபினயம் செய்தது பார்வையாளர்கள் அனைவரது கரகோசத்தையும் அள்ளிச் சென்றது.

சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி » என்ற பாடலையும்.. ‘மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் » என்ற பாடலையும் இணைத்து ஒரே காட்சியாக முதலாவது நிகழ்வையும், ‘என்னம்மா கண்ணு சௌக்கியமா? » என்ற பாடலுக்கு தனது மகனுடன் நடித்திருந்த காட்சி இரண்டாவது நிகழ்வாகவும் இடம்பெற்றது.

சிறப்பு விருந்தினராக கனடாவில் இருந்து வருகை தந்திருந்த முன்னாள் மகாஐனாக் கல்லூரியின் அதிபர் திருமிகு பொன்-கனகசபாபதி அவர்கள் தனதுரையில் கலைஞர் என்.ரி.குணம் அவர்களின் இந்தப் படைப்புக்களை மிகவும் பாராட்டிச் சென்றார்

இரண்டு நகைச்சுவை நாடகங்கள் இடம்பெற்றன அதில் கலைஞர் ‘ஓசை » மனோ அவர்களின் எழுத்து, இயக்கத்தில் உருவான ‘நானும் நீயும்’ என்ற நாடகம் ஒரு விழாவினைப் பார்க்க வரும் ரசிகர்கள் படும் சிரமங்களையும், அவர்களால் விழா நடத்துபவர்கள் படும் சிரமங்களையும் அழகாகச் சித்தரித்து ரசிகர்களின் பாராட்டுதலைப் பெற்றிருந்தது.

கலைஞர் சூரி அவர்களின் எழுத்து இயக்கத்தில் மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும் துரியோதனுக்கும் போர் இடம் பெறாமல் இருப்பதற்காக கண்ணபிரான் தூது வரும் காட்சியை நாட்டுக் கூத்தாக அரங்கேற்றியிருந்தார்கள். இதில் பார்வை இழந்த திருதராட்டினனாக சூரி அவர்களும், கண்ணனாக மன்னார் ஆனந்தன் அவர்களும், துரியோதனனாக பரமநாதன் அவர்களும் மேலும் சில கலைஞர்களும் இணைந்து நடித்து நாடகத்தை சிறப்பித்திருந்தார்கள்.

இறுதி நிகழ்வாக ‘பல்துறைக் கலைஞர் « நவரசநாயகன் » திரு.லோகதாஸ் அவர்களின் கலைப்பணியைப் பாராட்டி அவரைக் கௌரவிக்கும் நிகழ்வு மன்றத் தலைவர் திரு.இசித்தோர்- பெர்னாண்டோ அவர்களின் தலமையில் நடைபெற்றது.

மன்றத்தின் சார்பில் திரு.மோகன் அவர்கள் மாலை அணிவித்து வரவேற்க. ‘கலைஞர் காவலர் » ‘மனிதருள் » வண்ணை தெய்வம் அவர்கள் கலைஞர் லோகதாஸ் அவர்களின் நாற்பது ஆண்டுகால கலைப் பணியைப்பற்றி விபரித்தார். ‘ஓசை’ மனோ அவர்கள் லோகதாசின் ஏனைய சிறப்புகளை எடுத்தரைக்க நினைவுப் பரிசும், பட்டயமும் வழங்கி மன்றத்தின் கௌரவிப்பு சிறப்பாக இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து கலைஞர்கள் மாலைகள், பொன்னாடைகள், வாழ்த்து மடல்கள் என பலவிதமாகவும் தங்கள் பாராட்டுக்களைக் குவிக்க கலைஞர் லோகதாஸ் தனது ஏற்புரையில் தனது கலைப்பயணத்தின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர்களுக்கும், பாராட்டிக் கௌரவித்த மன்றத்தினருக்கும், வாழ்த்துக்கள் வழங்கிய கலைஞர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.