காளமேகப் புலவர் கும்பகோணத்தில் ஓர் அன்ன சத்திரத்திலே சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் எதிரில் முன் குடுமிச் சோழியப் பிராமணர் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

எதிரில் சாப்பிடும் அந்த சோழியப் பிராமணருக்கு சாப்பிடுவதில் வேகம் இருந்தது. அவர் குடுமி அவிழ்ந்து அன்னத்தில் விழுந்தும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் சாப்பிடும் வேகத்தில் அந்தக் குடுமியை வேகமாகத் தள்ளினார்.அந்தக் குடுமியில் ஒட்டியிருந்த அன்னம் காளமேகப் புலவரின் இலையில் வந்து விழுந்தது. புலவருக்குக் கடும் கோபம். உடனே தொடங்கினார்.

 

“சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப்
பெருக்குலர்ந்த வாயா புலையா – திருக்குடந்தைக்
கோட்டானே நாயே குரங்கே உனைஒருத்திப்
போட்டாளே வேலையற்றுப் போய்”

 

இங்கு புலவர் பெற்றாளே என்று பாடவில்லை. ஏ குரங்கே, நாயே என்றால் “போட்டாளே” என்றுதான் பாட வேண்டும். இங்கு ஒரு நுட்பத்தைக் கவனிக்க வேண்டும். பன்றியும் விலங்கு, நாயும் விலங்கு, மாடும் விலங்கு. எல்லாம் விலங்குதான். பசு கன்று ஈன்றது என்கிறோம். ஆனால் நாய் குட்டி போட்டது என்கிறோம். ஏன்?

 

ஒன்றே ஒன்று போட்டால் ஈன்றது. ஐந்து ஆறு என்றால் போட்டால் அது குட்டி போட்டது. ரயிலில் ஒரு பெண் ஒரு குழந்தை வைத்திருந்தால் உன் குழந்தையா? என்பார்கள். அதே சமயம் நான்கைந்து இருந்தால் குட்டிகளா என்று கேட்பார்கள்.

 

-வாரியார் எழுதிய “செஞ்சொல் உரைக்கோவை” நூலிலிருந்து.