பிஹார் மாநில முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கால்நடைத் தீவன ஊழல் வழக்கு ஒன்றில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியிருந்த ராஞ்சி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம், இன்று அவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. மேலும் ரூபாய் 5 லட்சம் அபராதமும் லாலுவுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

 

லாலு முதலமைச்சராக இருந்த 1991 மற்றும் 1994 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே தியோகார்க் கருவூலத்தில் இருந்து 84 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் முறைகேடாக எடுக்கப்பட்டதாக தொடரப்பட்ட இந்த வழக்கின் வாதம் கடத்த டிசம்பர் 15 அன்று முடிவடைந்தது. சென்ற மாதம் 23ஆம் தேதியன்று அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், ஜனவரி 3-ஆம் தேதியன்று தண்டனை விவரங்களை அறிவிப்பதாக கூறியிருந்தது. ஆனால் இன்றுதான், விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

 

லாலு குற்றவாளி என்ற தீர்ப்பு வெளியானவுடன் லாலு பிரசாத் யாதவ் நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்டு, தற்போது ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா சிறையில் இருக்கிறார்.

 

மொத்தம் 34 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்த இந்த வழக்கில் 11 பேர் விசாரணை காலத்தின்போது மரணம் அடைந்தனர். இந்த வழக்கில் லாலு உள்பட 16 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பிஹார் மாநிலத்தின் இன்னொரு முன்னாள் முதலமைச்சரான ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்ட ஆறு பேர் இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

இத்தீ்ர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று லாலுவின் வழக்குரைஞர் பிரபாத் குமார் தெரிவித்துள்ளார். ராஞ்சி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவ் மீது இன்னும் மூன்று கால்நடை தீவன ஊழல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.