உலக வங்கியினால் இணையத்தின் ஊடாக பிராந்திய ரீதியாக நடத்தப்பட்ட உலக புகைப்படப் போட்டியில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவரொருவர் வெற்றி பெற்றுள்ளார். மட்டக்களப்பு, பட்டிருப்பு தேசிய பாடசாலையில் க.பொ.த உயர்தர வகுப்பில் இறுதியாண்டு கல்வி பயிலும் திவ்வியராஜ் சயந்தன் என்ற மாணவனால் அனுப்பி வைக்கப்பட்ட  »தெருவோரத்தில் வியாபாரம் செய்யும் சிறுவன் » ஒருவனை காண்பிக்கும் புகைப்படமே இந்தப் போட்டியில் வெற்றிபெற்றுள்ளது.

 

ஆப்ரிக்கா, தெற்காசியா, கிழக்கு ஆசியா மற்றும் பசுபிக் என ஆறு பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டு நடைபெற்ற இந்தப் போட்டியில் 17 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான பிரிவில் தெரிவான 11 புகைப்படங்களில் இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை சேர்ந்த இருவரது புகைபடங்கள் தெற்காசிய பிராந்தியத்திலிருந்து தெரிவானதாக உலக வங்கியினால் வெளியிடப்பட்ட தெரிவுகள் பற்றிய விபரத்தின் மூலம் அறியமுடிகின்றது.

 

ஏற்கனவே புகைப்படங்கள் பிடிப்பதை பொழுது போக்காக கொண்டுள்ள தான் அத்துறையிலுள்ள ஆர்வத்தினாலும், தனது தந்தையின் ஊக்கத்தினாலும், இந்தப் போட்டியில் கலந்து கொண்டதாக திவ்வியராஜ் தெரிவித்துள்ளார்.

 

போட்டிக்காக பல படங்களை பிடித்திருந்தாலும் போட்டி தொடர்பான விதிமுறைகளின் கீழ் சம உரிமை இல்லாத தன்மையை பிரதிபலிக்கும் வகையில் அனுப்பிவைக்கப்பட்ட மூன்று புகைப்படங்களில் குறித்த படம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக தனது தந்தையின் மின் அஞ்சல் முகவரிக்கு தகவல் அறிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.