இன்று இறைமகன் இயேசு மகிமையோடும் வல்லமையோடும் உயிர்த்தெழுந்த உயிரிப்புப் பெருவிழாவினை உலகனைத்தும் வாழ் கிறிஸ்தவ மக்கள் பெரு அக்களிப்போடு கொண்டாடுகின்றார்கள்.

 

உயிர்ப்புப் பெருவிழாவினைக் காணவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடவுமே கடந்த நாற்பது நாட்களாக நாம் நோன்பிலிருந்து மாபெரும் ஆயத்தம் செய்தோம்.

 

உயிர்ப்பு இல்லையென்றால் சிலுவைக்கு எவ்வித அர்த்தமும் இல்லாமல் போய்விட்டிருக்கும். இயேசு வல்லமையோடு உயிர்த்தெழுந்தார். கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் தாங்கள் பறை சாற்றிய நற்செய்திகள் யாவுமே பொருளற்றதாய் போயிருக்கும் என்று புனித பவுல் கூறுகிறார். ஒழிந்திருக்கும்.

 

இன்று நம் திருமறையானது உயிர் வாழ்கின்றனதென்றால், அதற்கு இயேசுவின் உயிர்ப்பே மூலகாரணம்.

 

சாவின் நின்று உயிர்த்து எழுதல் என்பது இறைவன் ஒருவரால் மட்டும் நிகழ்த்தக் கூடிய இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சி. மானிட இனமானது பாவத்தில் வீழ்ந்து, சாவு, மரணம் என்ற சாபத்திற்கு ஆளானதால் இறைமகன் இயேசு தமது அற்புதமான உயிர்ப்பினால் சாவை வென்று வெற்றி வாகை சூடி மீண்டும் நமக்கு நித்திய பேரின்ப வாழ்வின் நம்பிக்கையைப் பெற்றுத் தந்தார். இதன் மூலம் சாவை வென்ற சத்தியனானார்.

 

மத, இன, மொழி, நிற வேறுபாடின்றி மனுக்குலம் மீட்படைய தம்மையே கல்வாரியில், சிலுவையில் தியாகப் பலியாக்கி முன்னர் அவர் உரைத்தபடியே மூன்றாம் நாள் உயிர்த்த அவரின் அற்புதச் செயல் நம் அனைவருக்கும் பெரு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகிறது.

 

இயேசுவின் உயிர்ப்பு அவராலேயே முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதொன்றாகும்.

 

« மானிட மகன் மக்களின் கையில் ஒப்படைக்கப்பட இருக்கிறார். அவர்கள் அவனைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்டு மூன்று நாட்களுக்கு பின் அவர் உயிர்த்தெழுவார். (மாக் 9 : 31)

 

கல்லறை மேட்டினின்று ‘உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே’ என்று கூறி தன் உயிர்த்தெழுதலின் அடையாளமாக இறந்த லாசாரை எழுப்பினார் இயேசு. « இத் தேவாலயத்தை இடித்துப் போடுங்கள். மூன்று நாட்களில் கட்டியெழுப்புவேன் » என்று கூறிய பொழுது தன் உடலாகிய பேராலயத்தையே அவர் குறிப்பிட்டிருந்தார்.

 

தெய்வத் திருமகனாலன்றி வேறெவராலும் இப்படிக் கூற முடியாது.

 

இயேசுவின் உயிர்ப்பு நமக்கெல்லாம் ஒரு முக்கியமான மறையுண்மையாகும். இயேசு உயிர்த்து விட்டார் என்ற செய்தியைக் கேட்ட அவர் கல்லறைக்கு வந்த பெண்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர். தெய்வத் திருமகன் பிறந்தவுடன் வான தூதர் இடையர்களுக்குத் தோன்றி மக்களுக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை அறிவித்தனர்.

 

இயேசுவின் பிறப்பைப் போலவே அவரது இறப்பும், உயிர்ப்பும் நமக்கு மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியாகும்.

 

ஒவ்வொரு உயிர்ப்பு விழாவும் நம்மில் சில, பல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் நாமும் இயேசுவோடு உயிர்ப்போம். அன்புள்ளம், தியாக உள்ளம், பிறருக்குத் தன்னையே அளிக்கும் உள்ளம் வளர வேண்டும்.