மாவீரர்நாள் சிறப்புப் படைப்பாக « அகாலம் » குறும்படத்தை நட்சத்திரம் படைப்பகம் வெளியிட்டிருக்கிறது. இந்தப் படைப்பில் கிரீஸ், அஜந்தன், தமிழ்ப்பிரியன், மாறன், சுதன், கோவிசன், கங்கேஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இயக்கியிருக்கிறார் சுதன்.

 

இது, எமது மண்ணில் எங்கள் வீரர்கள் நடந்து சென்ற பாதச்சுவடுகளில் ஒன்று. ஒவ்வொரு வெற்றிகளையும்… எத்தனையோ உயரிய தியாகங்களையும், அர்ப்பணிப்புகளையும் செய்தபிறகுதான் பெற்றுத் தந்திருக்கிறார்கள்.

 

சந்திக்கின்ற களமுனைகளில் பசிக்கின்றபோது உணவில்லாமலும், உணவிருந்தும் உண்பதற்கு நேரமில்லாமலும், பசித்த வயிற்றைத்  தியாகங்களால் நிரப்பிக்கொண்டு போரிட்ட வரலாறுகள் நீண்டவை.

 

 

ஒரு களமுனையில் ஒரு போராளி, குடி நீருக்குப் பதிலாக வாழை மடலை வெட்டிப்பிழிந்து குடித்த காட்சி இன்னும் என் பார்வை விட்டகலாது ஒட்டிக் கொண்டிருக்கிறது.

 

எம்மவர்கள் வரிசை வரிசையாக விட்டுச் சென்ற தியாகங்களில் ஒரு பேனா முனையளவைத்தான் இந்தப் படைப்பில் காட்டியிருக்கிறார்கள்.

 

இன்று எங்களில் பலர் தங்கள் சுயநலங்களுக்காக புலிகள் என்று சொல்வதற்கே பயந்த நிலையில் இருக்கின்ற போது. அவர்களும் பார்ப்பதற்கு இப்படி ஒரு படைப்பைத் தந்த கலைஞர்களை பாராட்டாமல் இருந்துவிட முடியாது.

எமது மண்ணின் கதைகளை வெளிநாடுகளில் படமாக்குகின்ற போது பலதரப்பட்ட சிரமங்களைக் கலைஞர்கள் எதிர்கொள்ள நேரிடும். இருப்பினும் இந்தப் படைப்பின் உருவாக்கத்தை குளிர்காலத்தில் தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

 

கடல்தாண்டி வந்து வெளிநாட்டுப் புதுமைகளோடு வாழ்கின்ற போதும்… இந்த மண் மறவாக்  கலைஞர்களுக்கு  வாழ்த்துக்கள்!