இந்தியா சந்தித்த தலைவர்களின் கொலை வழக்கில் மிகவும் மர்மம் நிறைந்ததாக , திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்ததாக இருப்பது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு தான் . இந்திய தேசம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய  இந்த கொலைவழக்கு இன்னமும் முழுதுமாக முடியவில்லை என்றே சொல்ல வேண்டும் .

 

ஆனால் இந்த வழக்கில் விசாரிக்கப்படாமலேயே விடப்பட்ட சில பெரியமனிதர்களின் அசல் முகத்தை ஆதாரத்தோடு தோலுரித்துக்காட்டுகிறது திருச்சி வேலுசாமியின்  “தூக்கு கயிற்றில் நிஜம் ” என்ற இந்த புத்தகம் .  திருச்சி வேலுச்சாமி என்பவர்  சுப்ரமணியசாமி தலைவராக  இருந்த ஜனதா கட்சியின் செயலாளராக இருந்தவர். இவர் சுப்ரமணிய சாமியின் திருவிளையாடல்களை சொல்ல அதை பதிவு செய்து எழுதி தொகுத்தவர் பா. ஏகலைவன் . இந்த  புத்தகத்தை பதிப்பித்து வெளிக்கொண்டு வந்தவர்  “பேட்ரீஷியா  பதிப்பகம்”  உரிமையாளர் ஆபிரகாம் செல்வகுமார்.

 

இந்தப் புத்தகம் சென்ற மாதம்  வெளிவந்தபோது நான் இந்தப்புத்தகம் பற்றி நண்பர்கள் மூலமாக  கேள்விப்பட்டேன் . கட்டாயம் வாங்கி படிக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன் . பிறகு அது பற்றி மறந்து போனேன் . நேற்று சனிக்கிழமை தி.நகரில் இருக்கும் ஒரு புத்தக கடைக்கு, நண்பர் ஒருவருக்கு பரிசளிக்க கவிதை புத்தகம் ஒன்றை வாங்க சென்றிருந்தேன் .

 

அங்கே வேலுச்சாமி எழுதிய இந்த புத்தகம் பார்த்த உடன் நியாபகம் வந்தது. இந்த புத்தகத்தையும் வாங்கிக் கொண்டேன் . நேற்று இரவு வீடுசேர்ந்து உணவருந்தி படுக்கையில் சாய்ந்தேன் . இந்த புத்தகத்திற்கு அணிந்துரையாக நெடுமாறன் அய்யா , அண்ணன் சீமான் , மற்றும் ஜவாஹிருல்லா ஆகியோர் எழுதி இருந்ததை புத்தக கடையிலேயே கவனித்திருந்தேன் . எனவே இப்போதைக்கு அணிந்துரை மட்டும் படித்துவிட்டு படுப்போம். நாளை இந்த புத்தகத்தை படிக்கலாம் என்று தான் நினைத்தேன் . ஏனென்றால் நேற்று முன்தினம் வீட்டின் குளியலறயில் விழுந்து முதுகில் தண்ணீர் குழாய் குத்தி அடிபட்டுவிட்டது .

 

மருத்துவர் அதிக நேரம் அமர்ந்திருக்க கூடாது என்று அறிவுறுத்தி இருந்தபடியால் நான் தலையணை வைக்காமல் படுத்துக்கொண்டு புத்தகத்தில் அணிந்துரை படிக்க தொடங்கினேன் . அணிந்துரை படித்து முடிக்கும் போதே எனக்கு தெரியாமலே நான் எழுந்து  அமர்ந்திருந்தேன் . புத்தகம் என்னை உள்ளே உள்ளே இழுத்துச் சென்றதை உணர்ந்திருக்கவில்லை.  சில பக்கங்களில் திடுக்கிட்டு ரத்தம் உரையும் படியாக இருந்தது . விரக்தியுற்றேன் , இன்னும் சில இடங்களில் இது என்ன தேசம் ? இங்கே நீதி என்ற ஒன்று உண்டா என்று சலிப்புற்றேன் . முதுகு வலி மறந்து போயிருந்தது . அதை விட பெரிய வலி சலனம் இதயத்திலும் மூலையிலும் உணர்ந்தேன் .

 

நண்பர்கள் கடிந்து கொண்டதை  காதில் போட்டுக்கொள்ளவில்லை . புத்தகத்தை முழுதுமாய் நான் படித்து முடித்து உட்கார்ந்திருந்தேன். அப்பாவிகள் சிறையிலா என்ற மன வலியை தாண்டி முதுகுவலித்தது. சுரீரென்று. அப்போதுதான் நேரத்தை பார்க்கின்றேன். அதிகாலை மூன்று ஆகி இருந்தது. அதன் பின்னும் தூக்காம் வராமல் வலி உணரா மருந்தெடுத்துக் கொண்டு உறங்க முற்பட்டேன் . காலையில் எழுந்த உடன் இந்த புத்தகம் எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம் , ஒருவர் விடாமல் நம் நண்பர்கள் படிக்க வேண்டிய புத்தகம் எனவே இந்த புத்தகத்தின் முக்கியத்துவம் உணர்த்த வேண்டும் என்பதற்காக இந்த பதிவை எழுதிவிடவேண்டும் என்று அமர்ந்தேன் .

 

“ஆமாம் விடுதலை புலிகள் தான் கொன்றார்கள் . இது ராஜீவ் காந்திக்கு  கொடுக்கப்பட்ட தண்டனை ” என்றெல்லாம் சில உணர்வாளர்கள் பேசியதை கேள்வி யுற்றிக்கிறேன் . ஆனால் இந்த கொலை வழக்கில் ஆரம்பம் எது , இதில் ராஜீவை சுற்றி படம் எடுத்த பாம்புகள் எத்தனை என்று எல்லாம் நாம் தெரிந்துகொண்டால் இந்த வழக்கில் நமக்கும் ஒரு தெளிவு வரும் . இந்த புத்தகத்தில் திருச்சி வேலுசாமி எழுப்புகிற கேள்விகள் ஒன்றுக்கும் விடையில்லை . உதாரணத்திற்கு வைக்கப்பட்ட சில கேள்விகள்……

 

1. ராஜீவ் பங்குபெற இருந்த கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் முள்காட்டில் நடைபெற்றது ஏன் ? எப்படி அரசு அனுமதித்தது  என்று திருச்சி வேலுசாமி அன்றைக்கு சட்டத்துறை அமைச்சராக இருந்த சுப்பிரமணியசாமியிடம் மே 19 அன்று வேலூருக்கு ஒரே காரில் ஸ்ரீபெரும்புதூர் வழியாக செல்லும்போது கேட்டிருக்கிறார் . ஆனால் எதற்கெடுத்தாலும் ஒரு கருத்து சொல்லும் சாமி கள்ள சிரிப்பு சிரித்திருக்கிறார் .

 

2.மே 20 அன்று டெல்லிக்கு செல்வதாக சென்னையில் இருந்து கிளம்பிய சாமி டெல்லிக்கும் செல்லவில்லை , சென்னையிலும் இல்லை . பின் எங்கே இருந்தார் ? யாரோடு ?

 

3.மே 21 இரவு பத்துமணிக்கு எப்போதும் போல தான் செயலாளராயிருக்கும்  ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணிய சாமிக்கு டெல்லி வீட்டுக்கு போன் செய்கிறார் வேலுச்சாமி  . போனை எடுத்தவர் “ராஜீவ் காந்தி இறந்துவிட்டார் என்று தானே சொல்லப்போகிறாய் ” என்று சொல்லி இருக்கிறார் . அவர் அப்படி சொல்லும்போது மணி 10:25 இரவு.  ஆனால் “குண்டு வெடித்தபோது மணி 10:10 அல்லது 10:15 இருக்கும் . நாங்கள் புகை நெருப்பெல்லாம் அடங்கிய பிறகு ராஜீவை அவர் அணிந்திருந்த காலனியை வைத்து அடையாளம் கண்டுபிடித்தோம்” என்று ஜெயந்தி நடராசன் சொல்லி இருக்கிறார்.  சம்பவ இடத்தில் இருந்த ஜெயந்தி நடராசன் மற்றும் மூப்பனார் தான் முதலில் ராஜீவின் சடலத்தை அடையாளம் கண்டுபிடித்தார்கள் . ஆனால் 10:25 மணிக்கெல்லாம் சாமிக்கு எப்படி தெரியவந்தது ?

 

4. மறுநாள் காலை ஒன்பது மணி வாக்கில் தான் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது . ஆனால் அன்றைக்கு அதிகாலையே  வந்த அனைத்து  செய்தி தாள்களிலும் “ராஜீவை கொன்றது விடுதலை புலிகள் ‘ என்று சுப்ரமணியசாமி பேட்டி  கொடுத்திருக்கிறார் . இது எப்படி ? விடுதலைப் புலிகள்தான் கொன்றார்கள் என்ற முடிவிற்கு கொலை நடந்த சில நிமிடங்களுக்குள்ளாகவே சாமிக்கு எப்படி தெரிந்தது .?

 

5 . ராஜீவ் காந்தி இறந்து பதினைந்து  நாட்கள் கழித்து காஞ்சிபுரத்தில் “பிரம்ம ஹத்தி யாகம்” செய்திருக்கிறார் சுப்ரமணியா சாமி . இதற்கு சாட்சி திருச்சி வேலுச்சாமி . இந்த யாகம் எதற்கு என்றால் ஒரு பிராமணனை கொன்றால் அதனால் வரும் பாவத்தை போக்க செய்கிற யாகம்தான் இது . இதை ஏன் சுப்ரமணியசாமி செய்தார் .?  ராஜீவ் காந்தி ஒரு காஷ்மீரிய பிராமணர் என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

 

இன்னும் இதுபோல சுப்ரமணிசாமி மீது, சந்திராசாமி மீது  நிறைய சந்தேகங்களை ஆதாரத்தோடு திருச்சி வேலுசாமி எழுப்புகிறார் . எல்லாவற்றையும் இங்கே சொல்ல வேண்டுமென்றால்   பாதி புத்தகத்தை நான் எழுத வேண்டும் .

 

இது ஒரு புறமிருக்க , ராஜீவ் காந்தி இந்தியாவின் அடுத்த பிரதமராவதை அமெரிக்காவும் இலங்கையும் விரும்பியதா என்ற கோணத்தையும் இந்த புத்தகத்தில் வேலுச்சாமி  விவரிக்கிறார் . யாசர் அராபத் ராஜீவை தொடர்பு கொண்டு எச்சரித்தாரே? ஏன் அவரை இந்திய அரசு விசாரிக்கவில்லை . அவருக்கு எப்படி இது தெரிந்தது என்று சிபிஐ கேட்டிருக்க வேண்டுமே என்ற நியாயமான கேள்வியையும் எழுப்புகிறார் . இஸ்ரேலின் உளவுப் பிரிவான மொசார்ட்டின் கைங்கர்யம் இதில்  உண்டு என்பது ஓரளவுக்கு தெளிவாகிறது .

 

இவையல்லாவற்றையும் திருச்சி வேலுசாமி அவர்கள் இப்போதுதான் வெளியிடுகிறாரா  என்று நினைக்காதீர்கள் . அவர்  இந்த சந்தேகங்களை எல்லாம் தொகுத்து அன்றைக்கே ஜெயின் கமிஷன் முன்பு அபிடவிட்டாக தாக்கல் செய்திருக்கிறார் . அதை விசராணைக்கு ஏற்ற கமிஷன் சுப்ரமணியசாமியை விசாரித்திருக்கிறது , மிகவும் கிண்டலாக பதிலளித்துக் கொண்டிருந்த சாமியை ஜெயின் கண்டித்ததும், பின் கிடுக்கிப்பிடி கேள்விகளால் சாமிக்கு வியர்த்து விறுவிறுத்து சட்டை நனைந்ததும் அன்றைக்கு அந்த  விசாரணையை பார்வையிட வந்த பிரியங்காவே பார்த்திருக்கிறார்.

 

திருச்சி வேலுசாமி ஜெயின் கமிஷனில் சாட்சியம் அளித்திருக்கிறார். பல்நோக்கு சிறப்பு புலனாய்வு குழுவிடமும் சாட்சியம் அளித்திருக்கிறார் . ஆனால் இதில் ஒரு விந்தை பாருங்கள் . ஊரில் இருக்கிறவர் மேல் எல்லாம் வழக்கு போடுகிற சுப்ரமணியசாமி தன்  மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த திருச்சி வேலுசாமி மீது மட்டும் ஏனோ இதுவரை குறைந்தது ஒரு மானநஷ்ட வழக்குகூட போடவில்லை . இதுதான் இந்த புத்தகம் படித்து முடித்த பின்னால் என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது .

 

மேலும் ஜெயின் கமிஷன் தன்  இறுதி அறிக்கையில் “சுப்ரமணிய சாமியும் சந்திரா சாமியும் ஒழுங்காக ராஜீவ் கொலை விசாரணையில் ஒத்துழைக்கவில்லை . அவர்கள் மீண்டும் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் ” என்று கோடிட்டு காட்டி இருக்கிறது . ஆனால் ஏன்  பல்நோக்கு சிறப்பு புலனாய்வுக் குழு  அப்படி அவர்களை ஒரு முறைகூட விசாரிக்கவில்லை என்பது மர்மமாகவே சிறுமூளையை பிராண்டுகிறது . ஆதாரங்களை மறைத்ததாக  சி.பி.ஐ-யின் விசரணைக் குழுவில் இருந்த ரகோத்தமனும் மோகன்ராசும் எந்த எம்.கே. நாராயணனை குற்றம் சாட்டினார்களோ அந்த நாராயணன் இன்றைக்கு இந்தியாவின் உயர்ந்த பதவியில் இருக்கிறார் எப்படி ? சட்டம் தன் கடமையை சாமனியன் மீது மட்டும்தான் செய்யுமா என்று மனம் அடித்துக்கொண்டது . இப்படி எத்தனையோ மர்மங்களின் முடிச்சு அவிழ்கப்படமால் தொடர்ந்து விடுதலைப் புலிகளை நோக்கியே வழக்கு சென்று ஒருதலை பட்சமாக முடிந்தது என்று யோசித்தால்  விரக்தியே மேலிடுகிறது .

 

ராஜீவ் இறப்பதற்கு  ஒன்றரை மாதம் முன்னதாக விடுதலைப் புலிகளின் சார்பாக அய்யா காசி ஆனந்தனும்   இன்னொருவரும் ராஜீவை சந்தித்திருக்கிறார்கள் . ராஜீவ் அவர்களிடத்தில் கடந்த கால கசப்புகளுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார் . நான்தான் இந்த தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராவேன் . நான் உங்கள் பக்கம்தான் இருப்பேன் . இதை பிரபாகரனிடத்தில்  சொல்லுங்கள் என்று வாசல் வரை வந்து காரிலேற்றி காசி ஆனந்தனை வழி அனுப்பி இருக்கிறார் . இதை எல்லாம் சொல்வது மாலினி பார்த்தசாரதி . இந்து நாளேட்டின் துணை ஆசிரியர் . இது செய்தி தாள்களிலும் வந்திருக்கிறது . ஆதாரங்கள் புத்தகத்தில் இருக்கிறது . அப்படி என்றால் விடுதலைப் புலிகள் எப்படி ராஜீவை கொன்றிருக்க முடியும் ? அத்தனை சமயோசிதம் இல்லாதவர்களா புலிகள் என்ற கேள்வியும் நம்முன்னால் எழுகிறது . உண்மையில்  ராஜீவ் -  காசி ஆனந்தன் சந்திப்பு பிரேமதாசாவின்  வயிற்றை  கலக்கி இருக்கவேண்டும் .

 

கொன்றவர்கள் ஈழத்தமிழர்கள் என்பதால் கொன்றவர்கள் விடுதலைப் புலிகள் என்று ஆகிவிட முடியுமா என்ன ?  என்று வேலுசாமி எழுப்புகிற கேள்வி அப்படி ஒன்றும் அசட்டயானது அல்ல.

 

இந்த புத்தகத்தில் இருக்கும் கேள்விகளுக்கு விடை கிடைத்தால் தேசம் அதிரும் . உலக நாடுகளின் சிலவற்றின் முகத்திரை கிழியும் என்பது மட்டும் புலப்படுகிறது . தோழர்களே இந்த புத்தகம் நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று . அதிகம் உட்கார்ந்து எழுத முடியவில்லை . இல்லையானால் இன்னும் விவரிப்பேன் .  பேட்ரீஷியா பதிப்பகத்தலும் பிரபல புத்தகக் கடைகளிலும் கிடைக்கிறது . நிச்சயம் வாங்கி படியுங்கள் . நீங்கள் சிந்திப்பீர்கள் . இன்னும் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் எழும் . உண்மையை உணர்வீர்கள் .

 

புதிர்கள் நிறைந்த ராஜீவின் மரணத்தை பல பேர் எதிர்பார்த்திருக்கிறார்கள் . அந்த ஒருவரை அழிக்க பல முதலைகள் திட்டம் தீட்டி இருக்கின்றன, உதவி இருக்கின்றன என்பதை நம்மால் உணர முடியும் . இவர்கள்தான் குற்றம்  செய்தார்கள்  என்ற முடிவுக்கு வரவேண்டாம். அதற்கு பதிலாக  இன்னார் இன்னார் மீதெல்லாம் சந்தேகத்தின் ரேகை விழுந்தும் சி.பி.ஐ. அவர்களை ஏன் விசாரிக்கவே இல்லை என்று கேட்டுப்பாருங்கள். இந்த புத்தகம் அப்படியான கேள்விகைளதான் எழுப்பியிருக்கிறது.

 

இப்படி படுகொலையில் தொடர்புடைய எத்தனையோ பெரும்புள்ளிகள் இங்கே இன்னும் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். பதவி  அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த ஒரு படுகொலையைச் சொல்லிதான் நம் இனத்தையும் இன விடுதலைக்காக மண்விடுதலைக்காக போராடிய ஒரு இயக்கத்தை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தினார்கள். அதை சொல்லிதான் ஈழ மண்ணில் முள்ளிவாக்கால் முடிவு வரை வேடிக்கை பார்த்தது உலக சமூகம். நினைத்தால் ஆத்திரம் வருகிறது. கூடவே அழுகையும் . சோனியா உள்ளிட்ட காங்கிரஸ் என்கிற கட்சி இந்த கொலையை காரணம் காட்டிதான் ஒரு தேசிய இனத்தை அழிக்க எல்லா உதவிகளையும் சிங்களனுக்கு செய்ததது . ஆனால் உண்மையில் ராஜீவை  கொன்றவன் எல்லாம் இங்கேதான் அரசியல் தரகு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் சுதந்திரமாக திரிகிறார்கள் , ஆனால் நம் இனம் மட்டும் முள்வேலி முகாமிலும் உலகம் முழுதும் புகலிடும் தேடியும் சிதறிக்கிடக்கிறது.

 

சுமார் 21ஈ ஆண்டுகாலமும் இதை வைத்து அரசியல் செய்யாமல், பேரம்பேசி விற்றுவிடாமல், இனத்தின் மீது விழுந்த பழியைத் துடைக்கும் தீராக்கோபத்தோடு ‘வலியோடு‘ இதயத்தில் சுமந்திருந்து இறக்கி வைத்திருக்கும் திருச்சி வேலுசாமி அவர்களுக்கு நாம் கடமைபட்டிருக்கின்றோம். கேட்டு கேட்டு எழுதி தொகுத்து விறுவிறுப்பான நடையோடு சோர்வைத் தரா நடையோடு புத்தகமாக கொடுத்த பா.ஏகலைவன் அவர்களுக்கும், எப்படியும் வெளிக்கொண்டுவந்துவிட வேண்டும் என்று உடனிருந்து உழைத்த பதிப்பாளர் ஆபிரகாம் செல்வகுமார் அவர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

 

ஒரு இனத்தின் மீது பழியை சுமத்தி ஒரு இனத்தையும், இன விடுதலைப் போராட்டத்தையும் அழித்த படுகொலை ‘ராஜீவ்காந்தி’ படுகொலை. புத்தகமாக வந்திருக்கிறது. படித்து முடித்த பிறகு வலியை சுமக்காமல் நடக்க முடியாது. அந்த வலி நம்மை பழியைத் துடைக்கும் படையில் முன்னிருத்தும். ஒரு அகிம்சை வழி போராளியாக. பின்னணி மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன் . இந்தப் புத்தகத்தை படியுங்கள் .

 

நட்புடன்
க.உதயகுமார்