இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் ரஜினி, கமல், சிரஞ்சீவி, மோகன்லால் உட்பட பல பிரபலங்கள் நடனமாட உள்ளனர். இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை தென்னிந்திய படங்கள் சார்பில் கொண்டாட பிலிம்பேர் முடிவு செய்துள்ளது. இது குறித்து அதன் தலைவர் சி.கல்யாண் கூறுகையில், தென்னிந்திய சினிமாவின் பிறப்பிடம் சென்னைதான்.

 

ஷூட்டிங் நடத்துவது முதல் அதை புராசசிங் செய்வதுவரை இங்குதான் பணிகள் நடந்தன. இதனை மனதில் வைத்து சினிமா நூற்றாண்டு விழாவை சென்னையில் கொண்டாட முடிவு செய்துள்ளோம். 4 மொழிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் 50 பேர் கவுரவிக்கப்பட உள்ளனர்.

 

நிகழ்ச்சிகள் வருகிற செப்டம்பர் 1ம் திகதி முதல் 3ம் திகதி வரை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது. இந்த விழாவில் பங்கேற்க அமிதாப்பச்சன், ஷாருக்கானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. 100 ஆண்டு சினிமா
கொண்டாட்டத்தையொட்டி இளையராஜா அல்லது ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு பாடல் உருவாக்கப்பட உள்ளது.

 

இந்த பாடல் மேடையில் ஒலிபரப்புவதுடன் ரஜினி, கமல், சிரஞ்சீவி, மம்மூட்டி, மோகன்லால், நாகார்ஜுனா, சிவ்ராஜ்குமார், தர்ஷன் உள்ளிட்ட 4 மொழி நடிகர், நடிகைகள் பங்கேற்று பாடலுக்கு நடனம் ஆட உள்ளனர். மேலும் மூத்த கலைஞர்கள் 50 பேரின் தபால் தலைகள் வெளியிடப்படுகிறது.

 

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளார். அத்துடன் 4 மாநில முதல்வர்களும் பங்கேற்க உள்ளனர். விழாவையொட்டி ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 4ம் திகதி வரை அனைத்து ஷூட்டிங்கும் ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.