இங்கிலாந்துக்கெதிரான நான்காவது டெஸ்டில் இந்திய அணியின் இளம் வீரர் வீராட் கோஹ்லி சதம் அடித்தார்.இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் நாக்பூரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 330 ஓட்டங்கள் எடுத்தது.

 

இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 87 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ஆட்டமிழக்காமல் கோஹ்லி 11 ஓட்டங்களும், அணித்தலைவர் டோனி 8 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்.

 

இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியின் டோனி, கோஹ்லி இருவரும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

 

இவர்களது மந்தமான ஆட்டத்தினால் ஸ்கோர் ஒன்றிரண்டு ஓட்டங்களாக உயர்ந்தது.

 

டோனி 28 வது அரைசதம் அடித்தார். மறுமுனையில் சதம் அடித்த வீராட் கோஹ்லி 103 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

 

ஜடேஜா 12 ஓட்டங்களிலும், சாவ்லா 1 ஓட்டத்திலும் ஆட்டமிழந்தனர். அணித்தலைவர் டோனி 99 ஓட்டங்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.

 

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 297 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அஷ்வின் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.