டிடிவி தினகரன் ஆட்கள் சிலர் ஆர்கே நகர் வாக்காளர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் என கூறி மஸ்கோத் அல்வாவை கவரில் சுற்றிக்கொடுத்து ஏமாற்றியது தெரியவந்துள்ளது. கடந்த டிசம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஆளும் அதிமுக மற்றும் எதிர்கட்சிகளை வீழ்த்தி சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். அவரின் அந்த வெற்றிக்கு பின்னால் ஹவாலா முறையில் பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளதாக தோற்ற கட்சிகள் கூறி வந்தன.

 

குறிப்பாக 20 ரூபாய் டோக்கனில் சீரியல் நம்பர் குறிப்பிடப்பட்டு வாக்களர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் முடிந்த பின் அந்த சீரியல் நம்பரை தொலைபேசி மூலம் தெரிவித்து பத்தாயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொள்ளும்படி புதிய சிஸ்டத்தை டிடிவி தினகரன் அறிமுகம் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

 

இந்நிலையில் ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட மீனாம்பாள், நேதாஜி நகர், எழில் நகர் பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்களை நேற்று முன்தினம் செல்போன் மூலம் டிடிவி தினகரன் ஆட்கள் தொடர்பு கொண்டு ரூ.20 நோட்டை கொடுத்துவிட்டு உரிய பணத்தை வாங்கிச் செல்லுங்கள் என்று கூறினராம்.

 

இதை நம்பிய வாக்காளர்கள், மர்ம கும்பல் குறிப்பிட்ட கொடுங்கையூர் பகுதிக்கு சென்றுள்ளனர், அங்கு காரில் அமர்ந்திருந்த நபர்கள் 20 ரூபாய் டோக்கனை பெற்றுக் கொண்டு ஒரு பண்டலை பத்தாயிரம் என கூறி கொடுத்துள்ளனர்.

 

மேலும் தற்போது பிரிக்க வேண்டாம், பொலிஸ் கண்காணித்து வருகிறது, வீட்டிற்கு சென்று பாருங்கள் என அவர்கள் கூறியதால் வீட்டிற்கு சென்று வாக்காளர்கள் பிரித்து பார்த்துள்ளனர். அப்போது அதிர்ச்சியளிக்கும் விதமாக மஸ்கோத் அல்வாவை பேப்பரில் சுற்றி தந்து ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

 

இதுகுறித்து வேதனையில் உள்ள வாக்காளர்கள் பொலிசில் புகார் அளிக்கவும் முடியாமல் தட்டி கேட்கவும் முடியாமல் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.