திருவண்ணாமலையை வலம் வந்து வணங்குவது விசேஷம். இதேபோல், திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள பெரண மல்லூரில், சிறு குன்றில் அருள்பாலிக்கும் ஸ்ரீவரத ஆஞ்சனேயரையும் எண்ணற்ற பக்தர் கள் வலம் வந்து வழிபடுகின்றனர். 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவர் இந்த ஆஞ்சனேயர்.

இங்கு பல்லவர் காலத்தில் எழுப்பப்பட்ட சிவாலயமும் விஷ்ணு கோவிலும் உள்ளன. இயற்கை அழகு கொஞ்சி விளையாடும் இந்த ஊரில் வாழ்ந்த ஒரு தம்பதிக்கு, கொஞ்சி விளையாடப் பிள்ளை இல்லை என்பது பெருங்குறையாக இருந்தது. ஒருநாள் கணவனும்- மனைவியும் வயல் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கலப்பையில் ஏதோ தட்டுப்பட, அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்த தம்பதி வியந்து நின்றது. அது அழகிய அனுமன் விக்கிரகம். அதனை எடுத்து அருகிலிருந்த சிறு குன்றின்மேல் பிரதிஷ்டை செய்து கோவில் அமைத்து வழிபடத் துவங்கினர்.

அடுத்த வருடமே அவர்களுக்குக் குழந்தை பிறந்தது. ஊரே வியந்து அனுமனைக் கொண்டாடி வழிபட்டது. அனுமனின் அருளாடல் மெல்ல மெல்ல அக்கம்பக்க ஊர்களுக்கும் பரவியது. அனைவரும் இந்த அனுமனை வழிபட்டு அருள்பெற்றனர். எனினும், காலப்போக்கில் வழிபாடுகள் நின்று போயின. சுமார் 42 ஆண்டுகள் எந்தவிதமான பூஜையும் திருவிழாவும் நடத்தப்பட வில்லை. சுற்றுச்சுவர்கூட இல்லாத இந்தக் கோவில் புதர் மண்டிக் கிடந்தது.

இந்நிலையில் 2003-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சென்னையைச் சேர்ந்த சுமார் மூன்று வயதுடைய சிறுவன் தன்னுடைய பாட்டி வீட்டிற்கு வந்தான். ஒரு நாள் வீட்டிற்கு அருகிலுள்ள  இந்த அனுமன் கோவில் படிக்கட்டுகளில் மெல்ல மெல்ல ஏறி, மூலவர் சந்நிதியை அடைந்தான். நடந்து வரும் பாதைகளிலும் மூலவர் சந்நிதிக்குள்ளேயும் இருக்கும் கழிவுகளைக் கண்டு மிகவும் வேதனை அடைந்தான். பின்பு கோவில் முழுவதும் பரவியுள்ள முட்புதர்களையும் கழிவுகளையும் தானே கொஞ்சம் கொஞ்சமாக சுத்தம் செய்வதாகக் கூறினான். சிறுவன் கூறியதை அருகில் இருந்தவர்கள் கேட்டு, அடுத்த நாட்களிலேயே சுத்தம் செய்யும் பணிகளில் தாங்களும் ஈடுபட்டனர். அதன் பின்பு ஊரில் உள்ளவர்களும் ஈடுபட்டனர். போதுமான நிதிஉதவி இல்லாத காரணத் தால், 2003-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தினர். அதன்மூலம் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு அனுமனுக்கு தினந்தோறும் பூஜைகளும் அமாவாசையில் கிரிவலமும் அனுமன் ஜெயந்தி திருவிழாவும் நடைபெற்று வருகின்றன.

கோவில் கிழக்குமுகமாய் இருப்பினும் ஆஞ்சனேயரின் முகம் வடக்கு நோக்கியுள் ளது. இவரது வலது கை தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு உடனடியாக அபயமளித்து வேண்டிய வரத்தைக் கொடுப்பதாக உள்ளது. இடது கரத்தில் சக்திவாய்ந்த தண்டம் ஏந்தி நிற்கிறார். இதன் மூலம் பக்தர்களின் அனைத்து பயங்களையும் நீக்குகிறார்; தீயவர்களை நல்லவர்களாக்கவும் அருள்புரிகிறார். நவகிரகங்களின் அளவற்ற சக்தியையும்கூட கட்டுப்படுத்தும் சக்தி ஆஞ்சனேயரின் வாலுக்கு உண்டு. பெரண மல்லூர் அனுமனின் ஈடிணையற்ற அழகிற்கு இந்த வால் மேலும் அழகூட்டுகிறது.

அமாவாசைதோறும் இவருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அன்று ராம நாம கோஷத்துடன் கிரிவலமும் நடைபெறுகின்றது. அப்போது திரளான பக்தர்கள் இங்கு வந்து அனுமனை வழிபட்டு அருள்பெற்றுச் செல்கின்றனர்.

மார்கழி மாத அனுமன் ஜெயந்தியின்போது சிறப்பு அபிஷேகத்துடன் 1,008 உளுந்து வடை மாலை, வெற்றிலை மாலை சிறப்பு அலங்காரத்துடன் அனுமன் காட்சி தருவார். ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.

திருமணத் தடை நீக்கம், பிரிந்த தம்பதியர் ஒன்று சேருதல், சனி தோஷ நிவர்த்தி, குழந்தைப் பேறு போன்ற வரங்களைப் பெற்று பக்தர்கள் பலனடைகின்றனர்.

சென்னை நங்கநல்லூரில் ஸ்ரீஆஞ்சனேயருக்கு கோவில் எழுப்ப முனைந்து ஸ்ரீ அனுமன் விக்கிரம் வடிப்பதற்காக அருகிலுள்ள இஞ்சிமேட்டில் இருந்து கல்லை கிரேன் மூலம் எடுத்துச் சென்றபோது பல தடங்கல்கள் ஏற்பட்டன. இஞ்சிமேடு கோவில் பட்டாச்சாரியாரது அறிவுரையின் பேரில், பெரணமல்லூரில் உள்ள இந்த அனுமன் கோவிலுக்கு வந்து அர்ச்சனை செய்து வழிபட்ட பின்னர், எந்தத் தடங்கலும் இல்லாமல் கல்லை சென்னைக்குக் கொண்டு சென்றனர் என்று இவ்வூரைச் சேர்ந்த பெரியவர் கள் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர்.

தற்போது பக்தர்கள் அளித்த நன்கொடையின் மூலம் கோவில் சுற்றுச்சுவர் திருப்பணி வேலை கள் முடிவடைந்து விட்டன.

கோவிலின் விமானம், குன்றின்மீதுள்ள அர்த்த மண்டபம், அன்னதானக் கூடம் முதலியன கட்டி முடித்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்த எண்ணியுள்ளார்கள். திருப்பணியில் பங்கு பெற எண்ணுவோர் 97903 87313 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.