எங்கே எங்கள் கவிதைகள்?
கிழித்து விட்டீர்களா…
எங்கே எங்கள் சிரிப்புகள்?
பற்கள் கழட்டி வீட்டீர்களா.
எங்கே எங்கள் பூக்கள்?
வாடச் செய்தீர்களா..

 

எங்கே.. எங்கே.. எங்கே…
தோளாடு தோளாய் கதையாடிய
நண்பன் அவனெங்கே?
விழியோடு மெய் உணர்த்திய
கணவன் அவனெங்கே?
கூலிக்கு ‘போய்ட்டு வருகிறேன்’ என்று
‘வருகிறேன்’ என்பதை மறந்த என் அப்பாவெங்கே?
கற்பனையில் கரைசேர்ந்து காதல் பேசிய
காதலன் அவனெங்கே?

 

ஓர் மார் பாலளித்து பாதியிலே போன
அம்மா நீயெங்கே?
நிர்வாண சீருடையில் அக்காளும் தங்கையும் தொலைத்த
மானமெங்கே?

 

பிரியமான இசையே.. உன் சத்தம்
நித்தம் ஒலிக்குதே செவியோரம்
நீயெங்கே இசைப்பிரியாவே?
சந்தன மார்பில் துவக்கை ஏந்தி
புரட்சி துவக்கிய தம்பி பாலசந்திரனெங்கே?

 

கடை வீதியா நானளஞ்சேன்
சர்காருக்கு மனு போட்டேன்
தினம் தினம் பிணமா புரண்டேன்
உன் மூச்சிசை கேட்காம தூக்கம் கூட வரலியே..
மண்ண கேட்டு வந்தவகள
மண்ணுக்கு உரமாக்கிடாகளா?
உரிம குரல் எழுப்பியவகள
உசிர தான் எடுத்தாகளா?
வந்திடு ராசாவே!! என் ராசாத்தியே!!
கைகோர்த்து நாடுவோம் நாடு கேட்டு.

 

தோழர் அகிலன், இளந்தமிழகம்