ஸ்ரீ தயாளன், ரஜித், மன்மதன் பாஸ்கரன், ஜனேசன் வி, குணபாலன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் இந்தக் குறும்படமானது பார்க்கின்ற அனைவருக்கும் சொந்தமானது. ஏனெனில் வட்டி, ஏதேனும் ஒருவகையில் எல்லோரையும் கட்டித்தான் போட்டிருக்கிறது. வாங்குகின்ற போது சந்தோசத்தையும்… கொடுக்கின்ற போது கண்ணீரையும் தருவதுதானே வட்டி!

 

இந்த வட்டி வியாபாரத்தால் பல  வீ டுகளிலும், தெருக்களிலும் நம்மவர்களின் முகங்களில் ஒளியும், இருளும் மாறி மாறி வந்து போகின்றது. அதன் தாக்கத்தோடு இந்தப்படம் தொடங்கி முடியும்வரை சலிப்பின்றி நகர்கிறது…

 

 

 

 

 

 

 

 

 

ஸ்ரீதயாளன் நடிப்பில் வெளிவருகிற குறும்படங்கள் என்றாலே ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தவில்லை என்றாலும், குறைவின்றி இந்தப்படம் தருகின்றது. நடிப்பு, நடை, பேச்சு என எல்லாவற்றிலும்… நடிகர் மன்மதன் பாஸ்கரனில் நிறைய மாற்றங்களைக் காணமுடிகிறது. அவர் ஏற்றுக்கொண்ட கதாப்பாத்திரத்திற்கேற்ப பார்ப்பவர்கள் மனதில் மெல்லிய நகைச்சுவையைத் தூவுகின்றார். கோபத்தையும் மூட்டுகின்றார். இயல்பான தோற்றத்தால் இயல்பான நடிப்பை தந்திருக்கிறார் ரஜித். ஜனேசன் வி இவரும் தனக்கு வழங்கப்பட்ட பாத்திரத்தை உயிரூட்டுகின்றார்.  சிறிய  காட்சிகளில் வந்துபோனாலும் பார்ப்பவர்கள் மனதில் சின்னதொரு வெளிச்சமூட்டுகிறார் நடிகர் குணபாலன். இதமான இசையைத்தருகிறார் வேர்ணன் ஜி.சேகரன். நேர்த்தியான ஒளிப்பதிவு – படத்தொகுப்பு மூலம் தன் பங்கைக் சரியாகச் செய்திருக்கிறார் டெசுபன்.

 

 

 

 

 

 

 

 

 

« இருளின் நிழல் » குறும்படத்தின் மூலம் நிரந்தர வதிவிட அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளாத எம்மவர்களின் வாழ்வியல் போராட்டத்தை கண்முன் நிறுத்திக் கண்ணீர் சிந்த வைத்த இயக்குனர் பிரசன்னா. இந்தப் படைப்பின் மூலம் இன்னும் ஒரு படி ஏறி உயர்ந்து நிற்கிறார்.

 

(கோபத்தில் வட்டிக்காரர்கள் பேசுகின்ற வேண்டாத வார்த்தைகளை இந்தப்படைப்பில் தவிர்த்திருக்கலாம் என்பது எமது தாழ்மையான கருத்து!)

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!