அணுஆயுத திட்டங்களை கைவிட தயார் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளது உலக தலைவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. கிம் ஜாங் உன்னின் இந்த சமாதான நடவடிக்கைகள் கொரிய தீபகற்பத்தில் நிலவி வந்த போர் பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து கூறியுள்ளனர். அமெரிக்காவை ஒட்டு மொத்தமாக அழிக்கும் அணுஆயுத பட்டன் எப்போதும் தயார் நிலையிலேயே உள்ளது என மிரட்டியது வடகொரியா. வடகொரியாவை உருத்தெரியாமல் அழிக்கும் பட்டன் தனது கையிலேயே உள்ளது என பதிலுக்கு மிரட்டல் விடுத்தது அமெரிக்கா. ஆண்டின் துவக்கித்திலேயே வடகொரியா – அமெரிக்கா இடையே நடந்த வார்த்தை போரால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் ஏற்பட்டது.

 

கொரிய தீபகற்பத்தில் கடந்த 1950-ல் நடைபெற்ற போருக்கு பிறகு வடகொரியா, தென்கொரியா என இருநாடுகளாக பிரிந்தது. தென்கொரியா அமெரிக்காவி்ன் ஆதரவு நாடானது. வடகொரியா சீனாவின் ஆதரவு நாடானது. இதனால் அப்போது முதலே அமெரிக்கா மீது வடகொரியாவுக்கு தீராத பகைமை நிலவி வருகிறது. கிழக்கு ஆசியாவில் அணுஆயுதங்களை நிறுத்தியுள்ள அமெரிக்காவிடமிருந்து தற்காத்து கொள்ள அணுஆயுதங்களை தயாரிப்பது தங்களது உரிமை என வடகொரியா கொக்கரித்தது. வழக்கம் போலவே கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பேராபத்தை தடுக்கிறேன் என எரியுமத் நெருப்பில் எண்ணெயை ஊற்றிக் கொண்டே வந்தது. 2011-ல் வடகொரிய அதிபராக கிம் ஜாங் உன் பதவிக்கு வந்த பின் மட்டும், ஏறத்தாழ 85 ஏவுகணை சோதனைகளும், 4 அணுஆயுத சோதனைகளையும் வடகொரியா முன்னெடுத்துள்ளது. இதனால் வடகொரியாவிற்கு நெருக்கடி கொடுக்க உலகநாடுகள் சீனாவை வற்புறுத்தின.

 

2016-ல் G 20 கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு சீனாவில் நடந்து கொண்டிருந்த போதே வடகொரியா மீண்டும் அணுஆயுத சோதனை நடத்தி யாருக்கும் கட்டுப்பட மாட்டோம் என கொக்கரித்தது. இதனால் 60 ஆண்டு கூட்டாளியான வடகெரியாவை கைவிட்டது சீனா. மேலும் வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கவும் சீனா ஆதரவு தெரிவித்தது. இந்நிலையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் முதன்முறையாக சீனாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தொடர்ந்து அணுஆயுத சோதனை நடத்தி வருவதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதன் காரணமாக அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தென்கொரிய அதிபரின் முயற்சியால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அடுத்த மாதம் சந்திக்க உள்ளார். இதனால் கொரிய தீபகற்பத்தில் இதுநாள் வரை நிலவி வந்த போர்பதற்றம் தணிந்து அமைதி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.